ஸ்டார் சினிமா விமர்சனம் : ‘ஸ்டார்’ வானத்தில் ஜொலிக்கும் விண்மீன் கூட்டத்தில் தனிக் ‘கலை’யால் துருவ நட்சத்திரமாக பிரகாசிக்கிறார் | ரேட்டிங்: 3.5/5
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீP வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீPநிதி சாகர் தயாரிப்பில், இளன் இயக்கி இருக்கும் படம் ‘ஸ்டார்’.
இதில் கவின் – கலையரசன், லால் – பாண்டியன், அதிதி போஹங்கர் – சுரபி, ப்ரீத்தி முகுந்தன்- மீரா மலர்கொடி , கீதா கைலாசம் -கமலா ,மாறன் – அன்வர் பாய், காதல் சுகுமார் – சுகுமார் ,நிவேதிதா ராஜப்பன் – செல்வி ,தீப்ஸ் – குலாபி, ராஜா ராணி பாண்டியன் – சுரபி அப்பா , சஞ்சய் ஸ்வரூப் – சன்னி வர்மா , தீரஜ் – ஆபீஸ் பாஸ் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : எழுத்தாளர் – இளன், ஒளிப்பதிவு – எழில் அரசு கே, இசை – யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு – பிரதீப் ஈ ராகவ், இணை தயாரிப்பாளர்கள் – பி ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்ரமணியன், எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்ஸ் வெளியீடு ,மக்கள் தொடர்பு – யுவராஜ்கலை(கவின்) திரைப்பட நடிகராக வேண்டும் என்ற லட்சியத்தில் இறுதி வரை போராடி ஜெயிப்பதின் கதைக்களமே ஸ்டார். நடிகராக வேண்டும் என்ற கனவோடு வருபவர் பாண்டியன்(லால்) சாதிக்க முடியாமல் போக புகைப்பட கலைஞராக மாறி தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார். மகன் கலை தன் தந்தையின் ஊக்குவிப்பு, படங்களை பார்ப்பது, பள்ளி நிகழ்ச்சிகளில் நடிப்பது என்று தன் தந்தையின் வழியை பின்பற்றி நடிகராக வேண்டும் என்ற பெரிய லட்சியத்தோடு வளர்கிறார். பள்ளி படிப்பை முடித்ததும் விஸ்காம் பயில நினைக்கும் போது அம்மா கமலாவின் (கீதா கைலாசம்) கண்டிப்பால் இன்ஜினியரிங் படிப்பைப் படிக்கிறார். ஆனாலும் அங்கே அவர் தனது நண்பர்கள் மற்றும் காதலி மீராவின் (ப்ரீத்தி முகுந்தன்) ஆதரவுடன் பிடித்த நடிப்பு, நடனம் என்று தன் இஷ்டப்படி வாழ்கிறார். கல்லூரி படிப்பை முடித்த பின் மும்பையில் நடிப்பு பயிற்சி பயில விண்ணப்பித்து அங்கே சென்றாலும் அவரை தேர்ந்தெடுக்காமல் நிராகரிக்கிறார் நடிப்பு வல்லுனர். அதன் பின் பல தடங்கல்களை கடந்து நடிப்பு பயிற்சி முடித்து வீடு திரும்பிய பிறகு பெரிய இயக்குனரிடமிருந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. படப்பிடிப்பிற்காக காரில் பயணப்படும் போது பெரிய விபத்தில் சிக்கி சுயநினைவு இழந்து பெரும் முயற்சியில் காப்பாற்றப்பட்டாலும் முகத்தில் பெரிய தழும்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் நடிகராக வேண்டும் என்ற கனவு சிதைந்து போக, இந்த விரக்தியில் இருக்கும் போது காதலி மீராவும் பிரிந்து போகிறார். இந்நிலையில் கல்லூரி அலுமினி நிகழ்வில் கலந்து கொள்ளச் செல்லும் போது சுரபி (அதிதி போஹங்கர்) நட்பாக, இருவருக்குள்ளும் புரிதல் ஏற்படுகிறது. அதன் பின் கலைக்கு ஆதரவாக இருக்கும் சுரபி மெல்ல மெல்ல கலையின் மனதில் மனமாற்றத்தை ஏற்படத் செய்து திருமணம் செய்து கொள்கிறார். ஒருகட்டத்தில் பிடிக்காத வேலையையும் செய்து கொண்டு குடும்பத்தை நடத்துகின்றார் கலை. ஆனால் தனக்குள்ளே இருக்கும் நடிப்பு ஆசை மறையாமல் இருக்க, வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் போகிறது. மனைவியை விட்டு பிரிந்து தன் லட்சியத்தை நோக்கிய பயணத்தை மேற்கொள்கிறார். இறுதியில் கலை தன் லட்சியக்கனவில் வெற்றி பெற்றாரா? சுரபியுடன் மீண்;டும் சேர்ந்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
கலையாக கவின் தன் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பு, நடனம், சண்டை என்று நாயகனின் அத்தனை அம்சங்களையும் அழகாக வெளிப்படுத்தி, அசாதரணமாக வசீகரத்துடன் நடை, உடை, பாசனை, உச்சரிப்பு, கவலை, துக்கம், வருத்தம், மகிழ்ச்சி என்று உணர்ச்சிகளை மாணவ பருவம் முதல் இளைஞராக தன் லட்சியத்தை அடைவதை வரை இயல்பாக வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இளம் தலைமுறையினரின் மனதில் சாக்லெட் பாய்யாக இடம் பிடித்து விட்டார்.
பாண்டியனாக நடித்திருக்கும் லால் படத்திற்கு பெரிய வரப்பிரசாதம் தன்னுடைய அசாத்திய திறமையால் பாசமிகு தந்தையாக சாதாரண நடுத்தர மனிதரின் வாழ்க்கையை பிரதிபலித்து, மகனின் உந்துசக்தியாக இறுதி வரை இருந்து படத்தின் உயிர்நாடியாக திகழ்கிறார்.
அதே போல அம்மா கமலாவாக கீதா கைலாசம் கண்டிப்பு, பாசம் என்று தனக்கு கொடுத்த பங்கினை சிறப்பாக செய்து மனதை நெகிழச் செய்து விடுகிறார்.
மீரா மலர்க்கொடியாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் சுரபியாக அதிதி போஹங்கர் என்ற கதையின் இரண்டு நாயகிகளாக முதல் பாதியில் வரும் ப்ரீத்தி முகந்தன் இளமை, துள்ளல் நடிப்பை வழங்கியும், அதிதி இரண்டாம் பாகத்தில் காதல் கணவனுக்கு ஊன்றுகோலாக இருந்து துன்பத்தில் தோல் கொடுக்கும் துணையாக வாழந்துள்ளார்.
மாறன் (அன்வர் பாய்), காதல் சுகுமார் (சுகுமார்), நிவேதிதா ராஜப்பன் (செல்வி), தீப்ஸ் (குலாபி), இளனின் தந்தை ராஜா ராணி பாண்டியன் சில காட்சிகள் என்றாலும் அசத்தல் (சுரபி அப்பா), சஞ்சய் ஸ்வரூப் (சன்னி வர்மா), தீரஜ் (ஆபீஸ் பாஸ்) ஆகியோரின் துணை கதாபாத்திரங்கள் படத்தின் நம்பகத்தன்மைக்கு பலம்.
மேஜிக்கல் மியூசிக் தந்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அருமை, பின்னணி இசை காட்சிகளை உயிர்ப்போடு வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அத்துடன் காட்சிகளில் லயிக்க வைத்துள்ளது என்று சொல்லலாம்.
1989 காலகட்டத்தில் தொடங்கும் கதைக்களம் அதன் பின் கலையின் பதினாறு ஆண்டுகள் வாழ்க்கை பயணத்தின் மேடு பள்ளங்களை விலாவாரியாக விவரிப்பதில் ஒளிப்பதிவாளர் எழில் அரசின் பங்கு பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் மெய் மறக்க செய்து விடுகிறார்.
படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் சில காட்சிகளை இன்னும் க்ரிஸ்பாக எடிட் செய்திருக்கலாம்.
துல்லியமான திட்டமிட்டு கலை இயக்குனரில் செயல்பாடுகள் படத்திற்கு பெரும் பலம்.
படம் ஆரம்பத்தில் எந்த குறைகள் இருந்தாலும் நல்ல நடிப்பின் மூலம் அதை மறக்கடிக்கலாம் என்று தந்தை மகனுக்கு அறிவுரை சொல்வது போல் தொடங்கும் கதைக்களத்தில் இறுதியில் அந்த அறிவுரை காட்சிகளாக விரியும் க்ளைமேக்ஸ் காட்சி கை தட்டல் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார் இயக்குனர் இளன். முதல் பாதி நடிப்பு ஆசை, படிப்பு, கல்லூரி வாழ்க்கை என்று ஜாலியான கலாட்டாவுடன் தொடங்கி, பின்னர் தன் முகத்தை பாதுகாத்துக்கொள்ள ஹெல்மெட் சண்டை, நடிப்பு பயிற்சி போராட்டம், முகம் தெரியாத பாட்டியின் பாசக் குரல், பாட்டி இறப்பில் வரும் நல்ல செய்தியை குடும்ப உறுப்பினர்கள் காட்டும் மகிழ்ச்சிகரமான முகபாவனைகள், வேலைக்கான நேர்காணலில் வரும் அதிகாரியின் பாக்சராகும் லட்சியம், கோர விபத்தில் சிதைந்து போகும் கலையின் கனவு என்று முதல் பாதி ஒரு மாறுபட்ட கதையாகவும், இரண்டாம் பாதி குடும்ப வாழ்க்கை என்று வேறுவிதமாக பயணிக்க க்ளைமேக்ஸ் காட்சியில் தன் வாழ்நாள் லட்சியத்தை எட்டிப் பிடிக்கும் தருணத்தை அழகான காட்சியாக விவரித்து ஒரு ஸ்டாராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் காட்சிகளும்,படத்தில் தேர்ந்த நடிகர்கள், அழுத்தமான வசனங்கள், பெரிய நடிகனாவதை யதார்த்தமாக வேறு கோணத்தில் காட்டியிருக்கும் இயக்குனர் இளனின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீசாகர் தயாரித்திருக்கும் ‘ஸ்டார்’ வானத்தில் ஜொலிக்கும் விண்மீன் கூட்டத்தில் தனிக் ‘கலை’யால் துருவ நட்சத்திரமாக பிரகாசிக்கிறார்.