வேட்டையன் சினிமா விமர்சனம் : வேட்டையன் சமூக அக்கறை கலந்த புலனாய்வு த்ரில்லரில் சஸ்பென்ஸ், அதிரடி ஆக்ஷன், மாஸ் அம்சங்கள் கலந்த விறுவிறுப்பான அட்டகாசமான குறி தப்பாத பாய்ச்சல் | ரேட்டிங்: 3/5

0
1903

வேட்டையன் சினிமா விமர்சனம் : வேட்டையன் சமூக அக்கறை கலந்த புலனாய்வு த்ரில்லரில் சஸ்பென்ஸ், அதிரடி ஆக்ஷன், மாஸ் அம்சங்கள் கலந்த விறுவிறுப்பான அட்டகாசமான குறி தப்பாத பாய்ச்சல் | ரேட்டிங்: 3/5

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டி.ஜே.ஞானவேல்

இதில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஜி எம் சுந்தர், அபிராமி, ரோகிணி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரக்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:-இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு இயக்குனர் : எஸ்.ஆர்.கதிர், தயாரிப்பு வடிவமைப்பாளர் : கே.கதிர், சண்டைப் பயிற்சி : அன்பறிவ், படத்தொகுப்பு : பிலோமின் ராஜ், திரைக்கதை : பா. கிருத்திகா, கலை இயக்குனர் : சக்தீ வெங்கட்ராஜ் ,நடன இயக்குனர் : தினேஷ், ஆடை வடிவமைப்பு : பெருமாள் செல்வம், அனு வர்தன், தினேஷ் மனோகரன், இணை இயக்குனர்கள் : மகேந்திரன், செந்தில்குமார் கேசவன், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத், சதீஷ் (ஏய்ம்)

கன்யாகுமரியைச் சேர்ந்த என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்பி அதியன் (ரஜினிகாந்த்). துரிதமாக செயல்பட்டு குற்;றவாளியை பிடிபட்டதும் உடனடியாக அதிரடி தண்டனை கொடுப்பதில் வல்லவர். அவரது கொள்கை  ‘தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்று நம்புகிறவர். இன்னொரு பக்கம் என்கவுன்டருக்கு எதிரான மனநிலை கொண்டு, அதைக் கடுமையாக எதிர்க்கும் மனித உரிமைகளுக்காகப் போராடும் ஓய்வுபெற்ற நீதிபதி நீதிபதி சத்யதேவ் (அமிதாப் பச்சன்).அவரது கொள்கை ‘அவசரப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதி’ என்று நம்புகிறவர். என்கவுன்டர் கொலைகள் மூலம் உடனடி நீதி வழங்குவது என்பது நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக வழக்குகளை தாமதப்படுத்துவது போல் மோசமானது என்று நம்புகிறார்.  இரண்டு தீவிர சிந்தனை உள்ளவர்கள் ஒரு கொலை வழக்கில் வேறுபட்டு இணைகிறார்கள் என்பதே படத்தின் கதைக்களம். கன்னியாகுமரியில் அரசு பள்ளி ஆசிரியராக பணி செய்யும் துஷாரா விஜயன் அரசுப் பள்ளி அறையில் போதைப்பொருள் பதுக்கி இருப்பதை எஸ்பி அதியனிடம் புகார் தெரிவிக்க, அதிரடியாக களத்தில் இறங்கி முக்கிய புள்ளியை கைது செய்ய ஆசிரியை பிரபலமாகிறார். துஷாரா விஜயனின்; துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து சென்னைக்கு மாற்றல் வாங்கி வருகிறார். பின்னர் ஒரு நாள் பள்ளியில் ஆசிரியை கற்பழிப்பு கொலை செய்யப்பட்டு இருக்க, அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு காவல் அதிகாரி கிஷோர் மற்றும் ரித்திகாசிங் வழக்கில் முக்கிய குற்றவாளி என்று ஒரு இளைஞனை கைது செய்கின்றனர். போலீஸ் கஸ்டடியில் இருக்கும் இளைஞர் தப்பித்து செல்ல, அவனை என்கவுன்டர் செய்ய சென்னைக்கு வருகிறார் எஸ்பி அதியன். முக்கிய வழக்கு என்பதால் ஊடகங்கள், அரசியல் மற்றும் பொது மக்களின் கொந்தளிப்புகளுக்கு அடிபணிந்து, ஒரு அப்பாவி மனிதனை எஸ்பி அதியன் என்கவுண்டர் செய்கிறார். இதனை நீதிபதி சத்யதேவ் அப்பாவி இளைஞனை கொலை செய்து பலிகாடாக ஆக்கிவிட்டதாக அதியனுக்கு உண்மையை புரிய வைக்கிறார். அதியன் என்கவுண்டர் ஒன்று தவறாக நடக்கும்போது, தன் வழிகளை மறுபரிசீலனை செய்து நீதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சட்ட அமலாக்கத்தில் உள்ள தனது சக ஊழியர்களின் உதவியுடன் அவர் அதை எப்படி செய்கிறார்? உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை கொடுத்தாரா? அதிகார பலத்திற்கு அடிபணிந்தாரா? என்பது வேட்டையனின் மீதி கதையை உருவாக்குகிறது.

ரஜினியின் மனதை ஈர்க்கும் ஸ்டைல், கண்ணாடி மேல் கண்ணாடியை தூக்கிப் போட்டு மாட்டுவது, துரித என்கவுண்டர், எதிரியை துப்பாக்கியால் பரபரவென்று சுட்டுத் தள்ளுவது, தவறை உணர்ந்து வருந்துவது, அதற்காக மீண்டும் நீதியை நிலைநாட்ட களத்தில் இறங்குவது என்று தன் வயதிற்கேற்றவாறு மென்மையாக அலட்டிக்கொள்ளாமல் ஆக்ஷன் களத்துடன் அனுபவமிக்க நடிப்பால் கை தட்டல் பெறுகிறார்.

ஒய்வு பெற்ற நீதிபதியாக சத்யதேவாக வேட்டையனின் மனசாட்சியாக அமிதாப் பச்சன் நடிக்கிறார். அவரையும் ரஜினிகாந்தையும் ஒன்றாக திரையில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படம் முழுவதும் வரவில்லை என்றாலும் அமிதாப் பச்சனின் மிகவும் தனித்துவமானது குரலுடன் கம்பீரத்துடன் வலம் வருவதும் படத்தின் திருப்புமுனையாக ரஜினிகாந்திற்கு வலிமையான இணையாக தெறிக்க விடுகிறார்.

வேட்டையனில் ஹார்லிக்ஸ் விரும்பி, திருடனாக மாறிய போலீஸ் இன்ஃபார்மர்,தொழில்நுட்ப நிபுணரான பேட்ரிக் என்கிற பேட்டரி வேடத்தில் ஃபஹத் பாசில் படத்தில் ரஜினியின் நம்பகமான ஆளாக வருவதால்; தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைப் பற்றி கவலைப்படாமல் அதை எளிதாகவும், இலகுவாகவும் கையாண்டு கொடுக்கும் ஒன்லைன் கவுன்டர்கள் படத்திற்கு பலமாக அமைத்து சுறுசுறுப்பான கச்சிதமான நடிப்பால் ரசிக்க வைத்துள்ளார்.

நேர்மையான ஆசிரியையாக முக்கியமான கதாபாத்திரத்தைச் சுற்றி கதை நகர்வது துஷாரா விஜயன் மூலம் தான், புதுமுக ஐபிஎஸ் அதிகாரியாக ரித்திகா சிங் ஆனால் அவர் செய்ததெல்லாம் கிஷோர், ரஜினிகாந்த் மற்றும் ஃபஹத் பாசிலைப் பின்தொடர்வதுதான். துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் இருவருக்குமே வலுவாக கதாபாத்திரம் அதை நிறைவாக செய்துள்ளனர். மனசிலயோ பாடல் முடிந்த பிறகு மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கு பெரிதாக எதுவும் இல்லை இரண்டாம் பாதியில் ஒரு சீனில் மிரட்டல் காட்டியுள்ளார். கார்ப்பரேட் மேனேஜர் அபிராமி, டிசிபியாக ரோகிணி, குணச்சித்திர நடிகர்களான சுப்ரீத் ரெட்டி மற்றும் கிருஷ்ணுடு ஆகியோர் முறையே தெலுங்கு கேங்ஸ்டர் மற்றும் போலீஸ் அதிகாரியாகயும் மற்றும் ஜி எம் சுந்தர், ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரக்ஷன்  சுருக்கமான பாகங்களில் ஜொலிக்கிறார்கள்.

கோடீஸ்வர சூப்பர்வில்லன் நடராஜா சண்முகம் என்ற நட் பாத்திரத்தை ராணா டகுபதி தன் எதிரிகளை தடயம் இல்லாமல் போட்டு தள்ளுவது, அதிகாரத்தை பயன்படுத்தி சாதிப்பது, சவால் விடுவது என்று கார்ப்ரேட் வில்லனின் குணங்களோடு மோதுகிறார்.

மனசிலயோ மற்றும் ஹன்டர் பாடல்கள் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இருப்பதால் படத்திற்கு  கூடுதல் பலம் மட்டுமல்ல தன்னுடைய பின்னணி இசையில் உயிர் கொடுத்து ஒரு பாடல் சீனில் வந்து விட்டு போகிறார் இசையமைப்பாளர் அனிரூத்.

ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர் படத்தின் குற்ற பின்னணி, விசாரணை காட்சிகளில் தனித்துவமான திறமையுடன் திறம்பட நம்பகத்தன்மையோடு கொடுத்துள்ளார்.

முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை ரஜினிக்கான அதிரடி ஆக்ஷன் காட்சிகள், துரத்தல் காட்சிகளை பார்த்து பார்த்து வௌ;வேறு கோணத்தில் நெத்தியடியாக அமைத்துள்ளனர்; சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ்.

பிலோமின் ராஜ் சிறப்பான படத்தொகுப்பு கச்சிதம்.

சமூகத்தில் காணப்படும் போதைப்பொருள், நீட் கல்வி வியாபாரத்தை தோலுரித்து காட்டி சூப்பர் ஸ்டாரின் இமேஜிற்கு கேற்றவாறு மாஸ் அதிரடி ஆக்ஷன் கலந்த போலீஸ் அதிகாரியின் என்கவுண்டரை மனிதநேயத்துடன் அணுகும் கதைக்களத்தை தன்னுடைய பாணியில் அனைத்து அம்சங்களும் சிதறாமல் கொடுத்து வெற்றி வசூலில் வாகை சூடியுள்ளார் இயக்குனர் டி.ஜே.ஞானவேல். அடிதட்டு மக்களின் நிலையை வைத்து எடை போட்டு விடக்கூடாது என்பதையும், பல்வேறு கோணங்களில் குற்றத்தை தீர விசாரித்து மறுபரீசிலனை செய்து தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும், என்கவுண்டரில் தவறுகளும் நடக்கலாம் என்பதையும், அதிகாரம், அரசியல் கையில் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற   நினைப்புடன் ஆணவத்தோடு இருக்கக் கூடாது என்பதையும் படத்தில் தீவிரத்துடன் ஆணித்தரமாக உணர்;த்தியிருக்கிறார் இயக்குனர் டி.ஜே.ஞானவேல்.

மொத்தத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் வேட்டையன் சமூக அக்கறை கலந்த புலனாய்வு த்ரில்லரில் சஸ்பென்ஸ், அதிரடி ஆக்ஷன், மாஸ் அம்சங்கள் கலந்த விறுவிறுப்பான அட்டகாசமான குறி தப்பாத பாய்ச்சல்.