வீர தீர சூரன் பாகம் 2 சினிமா விமர்சனம் : புதிய முயற்சியில் கண் கட்டும் வித்தையில் பழி வாங்க துடிக்கும் ஆடுபுலிஆட்டம் அதிர வைத்து மிரள வைக்கும் | ரேட்டிங்: 3.5/5

0
1147

வீர தீர சூரன் பாகம் 2 சினிமா விமர்சனம் : புதிய முயற்சியில் கண் கட்டும் வித்தையில் பழி வாங்க துடிக்கும் ஆடுபுலிஆட்டம் அதிர வைத்து மிரள வைக்கும் | ரேட்டிங்: 3.5/5

எச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு, மும்தாஜ்.எம் தயாரித்திருக்கும் வீர தீர சூரன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.யு.அருண்குமார்.

இதில் சீயான் விக்ரம்- காளி, எஸ்.ஜே.சூர்யா- அருணாகிரி, சுராஜ் வெஞ்சரமுடூ – கண்ணன், துஷாரா விஜயன்-கலைவாணி, மாருதி பிரகாஷ்ராஜ் – பெரியவர், பாலாஜி-வெங்கட், ரமேஷ் இந்திரா-பெரியப்பா, மாலா பார்வதி- பெரியவர் மனைவி, ஸ்ரீஜா ரவி- அம்மா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-தேனி ஈஸ்வர், இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், படத்தொகுப்பு-பிரசன்னா ஜி.கே, கலை- சி.எஸ்.பாலசந்தர், சண்டை – பீனிக்ஸ் பிரபு, வெளியீடு- 5ஸ்டார் செந்தில், பிஆர்ஒ – யுவராஜ்.

மதுரையில் ஊர் திருவிழாவை விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், அந்த ஊ​ரின் தலைவர் பெரிய மனிதர் ரவி (பிருத்வி) அவரது மகன் கண்ணன் (சூரஜ் வெஞ்சரமூடு) மற்றும் குடும்பத்தார் அனைவரும் திருவிழாவில் கலந்து கொள்ள தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் 8 வயது மகளுடன் வரும் ஒரு பெண்மணி  காணாமல் போன கணவனை தேடி அங்கு வந்து கணவன் எங்கே என்று கண்ணனிடம் பிரச்சனை செய்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத கண்ணன் அந்த பெண்ணை அடித்து விரட்டி விடுகிறார். சிறிது நேரம் கழித்து அந்த பெண்மணியின் கணவன் போலீஸ் நிலையத்திற்கு வந்து தன் மனைவி, மகளை காணவில்லை, பெரியவரும், அவரது மகனும் தான் காரணம் என்று எஸ்.பி-யான அருணகிரியிடம் (எஸ்.ஜே. சூர்யா) புகார் கொடுக்கிறார். பெரியவரையும், அவரது மகனையும் முன் பகை காரணமாக ஆறு மாதங்களாக அவர்களை கைது செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அருணகிரிக்கு இவரின் புகார் உத்வேகத்தை கொடுத்து, இரவோடு இரவாக இருவரையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடிவு செய்கிறார். இந்த விஷயம் பெரியவர் காதுகளுக்கு எட்டி விட, தன் மகன் கண்ணனை தலைமறைவாக இருக்கச் சொல்கிறார். அதே சமயம் பெரியவர் ரவி தன் மகனின் உயிரை காப்பாற்ற முன்பு அடிதடியில் ஈடுபட்டு, இப்பொழுது மனைவி, குழந்தைகள் என்று அமைதியான வாழ்க்கை வாழும் மளிகைக் கடை வைத்திருக்கும் காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார். முதலில் இதற்கு சம்மதிக்காத காளி பெரியவரின் பேச்சை தட்ட முடியாமல் எஸ்.பி. அருணகிரியை போட்டுத்தள்ள வெங்கட் (பாலாஜி) உதவியுடன் கிளம்புகிறார். இதனிடையே எதிர்பாராத விதமாக எஸ்.பி.அருணகிரியை சந்திக்க நேரிட ரவி, கண்ணன் இருவர் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தால், காளியின் குடும்பத்தை காப்பாற்றித் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து தன் வழிக்கு கொண்டு வருகிறார் எஸ்.பி.அருணகிரி.இறுதியில் ரவுடியாக வலம் வந்த காளியின் ஃபிளாஷ்பேக் என்ன?முன்பு பெரியவர் காளிக்கு செய்த உதவி என்ன?  இந்த சிக்கலில் மாட்டிக் கொள்ளும் காளி யாரை காப்பாற்றினார்? யாரை சிக்க வைத்தார்? இவர்களுக்குள் இருக்கும் பகை என்ன? எதற்காக இவர்கள் கொலை வெறியுடன் அலைகிறார்கள்? காளி இறுதியில் எடுக்கும் முடிவு என்ன? என்பதே அடுத்த பாகத்தின் ஆரம்பமாக க்ளைமேக்ஸாக முடிகிறது.

நடுத்தர குடும்பத் தலைவன் காளியாக விக்ரம் மனைவி, குழந்தைகளிடம் பாசத்துடன் இருப்பது, குடும்பத்தை காப்பாற்ற ரவி, கண்ணன், அருணாகிரி ஆகியோரிடம் பேரம் பேசுவது, அமைதியின் உருவமாக வரும் காளி பின்னர் முரட்டு மனிதராக தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க களமிறங்குவதும், தன்னை கொல்ல வரும் அனைத்து ஆட்களையும் அடித்து துவம்சம் செய்வதும், மாட்டிக் கொண்டாலும் அந்த நேரத்தில் சமயோஜிதமாக முடிவெடுத்து தப்பிச் செல்வது என்று ஒவ்வொரு காட்சிகளிலும் தனித்திறமையோடு ஜொலிக்கிறார். தைரியம், வீரம் நிறைந்த மனிதராக சாதாரண சட்டையுடன் கைளியை தூக்கி கட்டிக் கொண்டு அசால்டாக நடக்கும் நடை, கையை உயர்த்தி பேசும் விதம் என்று மதுரை இளைஞராக தன் கதாபாத்திரத்துடன் வாழ்ந்து மேம்பட்ட நடிப்பால் மிளிர்கிறார். இவரின் யதார்த்தமான நடிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

எஸ்.ஜே.சூர்யா காவல்துறை அதிகாரியாக தன்னுடைய ஸ்டைலில் டயலாக் டெலிவரி, சமயம் பார்த்து காரியத்தை சாதிக்க நினைக்கும் மனிதராக சுயநலமிக்கவராக சிறப்பாக செய்துள்ளார்.

ப்ருத்வி மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு இவர்களின் தந்தை மகன் பாசத்துடன் வில்லத்தனத்தில் மிரட்டி போட்டி போட்டு நடித்துள்ளனர்.

கலைவாணியாக துஷாரா விஜயன் காதல் மனைவியாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, கணவனை அடக்கவும், அதட்டவும் கூடிய பெண்ணாக காதலிலும் சரி, பாசத்திலும் சரி இயல்பாக நடித்துள்ளார்.

வெங்கட்டாக பாலாஜி பெரியவரின் விசுவாசியாக, முக்கியமான நேரத்தில் வலிப்பு வரும் போது பதட்டத்தை ஏற்படுத்தி சிறப்பாக செய்துள்ளார். ரமேஷ் இந்திரா-பெரியப்பா, மாலா பார்வதி- பெரியவர் மனைவி, ஸ்ரீஜா ரவி- அம்மா மற்றும் பெரியவரின் குடும்பத்தாராக வரும் நடிகர்கள் படத்தின் திருப்பங்களுக்கு வழிவகுக்கின்றனர்.

ஒரே இரவில் நடக்கும் கதைக்களம், திருவிழா நடைபெறும் நாள் பழி வாங்க துடிக்கும் நபர்கள், இவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், யார் யாருடன் மோதினார்கள் என்று பரபரவென ஆக்ஷன் களத்திற்கேற்ற பங்களிப்பை தன் கேமிரா கோணங்களால் திறம்பட கொடுத்துள்ளார் தேனி ஈஸ்வர். வெல்டன்.

ஜி.வி.பிரகாஷ்குமார் தன் இசையாலும், பின்னணி இசையாலும் படத்திற்கான விறுவிறுப்பை குறைய விடாமல் அதிரடியாக தடம் பதித்துள்ளார்.

கலை- சி.எஸ்.பாலசந்தர், சண்டை – பீனிக்ஸ் பிரபு இவர்களின் முக்கிய பங்களிப்பு படத்தின் தெறிக்க விடும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. முக்கியமாக வெடிகுண்டு தயார் செய்து பெட்டியில் வைத்துக் கொண்டு செல்லும் இடங்களும், அதை புதைக்க எடுக்கும் முயற்சிகள் பதட்டத்தை ஏற்படுத்தி, இறுதியில் முக்கிய திருப்புமுனையாக காரில் இருக்கும் வெடிகுண்டு வெடிப்பது எதிர்பாராத திருப்பத்தை கொடுப்பதும், இறுதிக் காட்சியில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள்  அசத்தல் ரகம்.

பிரசன்னா ஜி.கே வின் படத்தொகுப்பு முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் இன்னும் அழுத்தமாக கத்தரி போட்டிருக்கலாம்.

கோபக்கார இளைஞர் வன்முறையை கைவிட்டு சிம்பிளான வாழ்க்கை வாழ, பல வருடங்களுக்கு பிறகு அவரை தேடி வரும் பழைய முதலாளியின் நன்றி விசுவாசத்திற்காக அவரின் மகனை காப்பாற்ற கடைசியாக கொலை செய்ய ஒப்புக் கொண்டு களமிறங்கும் போது ஏற்படும் திருப்பங்கள், விறுவிறுப்பான சம்பவங்கள், அதிரடியாக ஆக்ஷன் காட்சிகள்,  அச்சுறுத்தல்களை சமாளித்து குடும்பத்தை காப்பாற்ற போராடும் வீரமிக்க மனிதரின் வாழ்க்கையை ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களாக தோய்வில்லாமல் திரைக்கதையமைத்து அசத்தலாக இயக்கியுள்ளார் எஸ்.யு.அருண்குமார். ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் அடுத்த என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை தூண்டி மெய்மறக்க செய்து சீட்டு நுனியில் அமர வைத்து ரசிக்க வைப்பதில் பெறும் பெற்றிபெற்றிருக்கிறார் எஸ்.யு.அருண்குமார். சில கதாபாத்திரங்களின் விவரிப்பு சொல்லப்படாமல் துண்டாக இருப்பது போல் தெரிந்தாலும் இதற்கான காரணத்தை முதல் பாகத்தில் தெரிவிப்பார்கள் என்று நம்புவோமாக.

மொத்தத்தில் எச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு, மும்தாஸ்.எம் தயாரித்திருக்கும் வீர தீர சூரன் பாகம் 2 அனுபவமிக்க நடிகர்கள், தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், வித்தியாசமான கதைகளத்துடன் புதிய முயற்சியில் கண் கட்டும் வித்தையில் பழி வாங்க துடிக்கும் ஆடுபுலிஆட்டம் அதிர வைத்து மிரள வைக்கும்.