வாழை விமர்சனம் : வாழை நெஞ்சை நெகிழ வைக்கும் தருணங்கள், வலிகளை உணர வைக்கும் சுமையான வாழ்வியல் கலந்த அழுத்தமான தலைசிறந்த பயணம் | ரேட்டிங்: 4/5
டிஸ்னி ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வாழை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இதில் சிவனைந்தானாக பொன்வேல், சேகராக ராகுல், சிவனாய்ந்தானின் தாயாக ஜானகி, வேம்புவாக திவ்யா துரைசாமி, கனியாக கலையரசன், பூங்கொடியாக நிகிலா விமல், தரகராக பத்மன்,ஜே. சதீஷ்குமார் வர்த்தகராக மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர்: யுகபாரதி, விவேக், மாரி செல்வராஜ், ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்,கலை இயக்குனர்: குமார் கங்கப்பன், எடிட்டர்: சூரிய பிரதமன், அதிரடி ஆக்ஷன்: திலிப் சுப்பராயன்,நடனம்: சாண்டி, ஒலிப்பதிவு: சுரேன், ஒலி வடிவமைப்பாளர்: சுரேன்.ஜி, அழகியகூத்தன்.எஸ், ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ரீ ஸ்வர்ணா, டி.ரவி, ஒப்பனை: ஆர்.கணபதி, ஸ்டில்ஸ்: ஜெயக்குமார் வைரவன், விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன், விஎஃப்எக்ஸ்: ஹரிஹர சுதன், டிஐ வண்ணக்காரர்: பிரசாத் சோமசேகர், டிஐ லைன் தயாரிப்பாளர்: எம்.எல்.விஜயகுமார், நிர்வாகத் தயாரிப்பாளர்: வெங்கட் ஆறுமுகம், பிஆர்ஒ: சதீஷ் (ஏஐஎம்)
சிவனைந்தானின் சிறு வயதில் 90களின் காலகட்டத்தில் திருநெல்வேலியிலுள்ள புளியங்குளம் கிராமம் சுற்றி படம் சித்தரிக்கிறது . எட்டாவது படிக்கும் தந்தையை இழந்த சிறுவன் சிவனைந்தான் (பொன்வேல்) படிப்பில் படுசுட்டி, தாய் மற்றும் சகோதரி வேம்பு வாழைத்தாரை சுமக்கும் கூலி வேலை செய்து அவனை படிக்க வைக்கிறார்கள். விடுமுறை நாட்களில் குடும்பச் சூழல் காரணமாக வாழைத்தாரினை சுமக்கும் பணியை கட்டாயத்தின் பேரில் வேண்டா வெறுப்பாக செய்கிறான் சிறுவன் சிவனைந்தான். அவனது பள்ளி நண்பன் சேகரிடம் (ராகுல்) சேர்ந்து வாழைத்தோப்பிற்கு சென்று வேலை செய்யாமல் இருக்க பல திட்டங்களை போட்டாலும் இறுதியில் தன் தாயாரின் வற்புறுத்தலால் வேறு வழியின்றி தொடரும் சுழலே அமைகிறது. சிவனைந்தான் ரஜினி ரசிகன் என்றால் சேகர் கமல் ரசிகன் அதுமட்டுமில்லாமல்; பள்ளி ஆசிரியர் பூங்கொடி (நிகிலா விமல்) டீச்சர் மீதான இனம்புரியா அன்பு அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறது. இந்நிலையில் கனி (கலையரசன்) குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வு கேட்டும் ஊர்க்காரரர்களுடன் போராட்டம் நடத்துகின்றார். இவர்களின் எதிர்ப்பை சமாளிக்க சம்பள உயர்வுக்கு ஒப்புக் கொள்கிறார் வாழை ஒப்பந்தக்காரர். அவர்களுக்கு போக்குவரத்து வசதியை தனியே செய்யாமல், ஆபத்தான வகையில் வண்டியில் வாழைத்தார் மேலேயே உட்கார்ந்தபடி வரச்சொல்கிறார். இதனிடையே பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆட பேர் கொடுக்கிறான் சிவனைந்தான். வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று நடன பயிற்சி செய்ய பள்ளிக்கு ஆசிரியர் பூங்கொடி வரச்சொல்கிறார். ஆனால் தாய் உடல் நலமின்றி இருக்க சிவனைந்தானை வேலைக்கு அழைத்துச் செல்கிறார் அக்கா வேம்பு, பின்னர் அவனின் விருப்பத்திற்கு செவி சாய்த்து பள்ளிக்கு அனுப்பி விட்டு தான் மட்டும் வேலைக்கு செல்கிறார். அதன் பின் சிவனைந்தான் பள்ளிக்கு சென்றானா? வேலைக்கு செல்லாததால் தாயிடம் மாட்டிக் கொண்டானா? வாழைத்தார் வேலைக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்? இறுதியில் என்ன நடந்தது? என்பதே பதற வைத்து மனதை தொடும் க்ளைமேக்ஸ்.
சிறுவன் சிவனைந்தானாக பொன்வேல் முதல் காட்சியிலேயே கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொண்டு வாழைத்தார் சுமந்து செல்லும் வேலைக்கு செல்ல அடம் பிடிப்பது, நண்பன் சேகருடன் சேர்ந்து அதை தவிர்க்க திட்டம் போடுவது, படிப்பில் முதல் மாணவனாக விடுமுறை என்றாலே அலறும் விதத்திலும், பூங்கொடி டீச்சர் கர்சீப்பை எடுத்து வைத்துக் கொண்டு படும் அவஸ்தை, ரஜினி ரசிகராக செய்யும் சிறு குறும்புகள், சேட்டைகள், பொய் சொல்லி சமாளிப்பது, தலையில் இரண்டு வாழைத் தார்களை சுமந்து செல்வதால் கழுத்தில் ஏற்பட்ட வலி, தாயின் கண்டிப்பு, அக்காவின் பாசம், அக்கா காதலிக்கும் கலையரசனை தன் தந்தையாக பார்ப்பது, டீச்சருக்காக சட்டையை கிழிப்பது, மருதாணி கொண்டு வருவது, வாழைத் தோப்பில் பழங்களை பறித்து சாப்பிட நினைத்து அடி வாங்கி பசியால் மூச்சிரைக்க ஒடுவது என்று கிராமத்து குறும்பு நிறைந்த வெள்ளெந்தி சிறுவனாக அட்டகாசமான திரைமொழியில் ஆர்ப்பாட்ட நடிப்பு பல விருதுகளை பெறுவார்.
நண்பன் சேகராக ராகுல் கமல் ரசிகனாக செய்யும் அளப்பரை, நான் கமல் ரசிகன்டா என்று காலில் அடிபடாமல் நடிக்கப்போய் தாயிடம் அடி வாங்கி வருவது, நண்பனின் சட்டையை கிழித்து விடுவது என்று கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொள்கிறார். நண்பனுடன் சேர்ந்தே பயணிக்கும் கதாபாத்திரத்தில் தனித்து நின்று வட்டார வசனம் பேசி இறுதியில் கண் கலங்க வைத்து விடுகிறார்.சிவனைந்தானின் தாயாக ஜானகி, முதலில் கண்டிப்பு நிறைந்த தாயாகவும், பக்குவமாக தன் மகனிடம் வேலைக்கு செல்ல சொல்லும் இடங்களிலும், அவரின் மனக்குமறலான “என் பையன் நான் இல்லையானாலும் வாழனும் அவனுக்கு நான் உழைக்கக் கத்து தரேன்” என்று தன்னம்பிக்கை வளர்க்கும் தாயாக கம்யூனிச கொள்கையோடு உழைப்புக்கு மதிப்பு கொடுக்கும் பெண்மணியாக தெரிகிறார். இறுதியில் மகனை பார்த்து கதறி அழும் காட்சியில் கண்முன் நிற்கிறார்.
வேம்புவாக திவ்யா துரைசாமி அமைதி, ஆர்ப்பட்டாமில்லாத நடிப்பு , உரிமையை விட்டுக்கொடுக்காத கனியாக கலையரசன், மனதை மலரச்செய்யும் பூங்கொடி ஆசிரியராக நிகிலா விமல், தரகராக பத்மன், ஜே. சதீஷ்குமார் ஆகியோர் கதையோடு பயணத்து வாழ்ந்திருக்கிறார்கள்.
யுகபாரதி, விவேக், மாரி செல்வராஜ் பாடல் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அசத்தல் ரகம் என்றால் பழைய பாடல்களின் பின்னணி படத்திற்கு ப்ளஸ். தென்கிழக்கு தேன் சிட்டு என்று தி பாடியிருக்கும் பாடல் ஹிட் லிஸ்டில் உள்ளது.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் தொண்ணூறுகளின் பள்ளி நாட்கள், ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சியையும், வாழைத் தோப்பின் அழகினையும், ஆபத்தையும், அடிமட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் காட்சிக்கோணங்களில் கொடுத்து படத்தில் ஒன்றிட செய்து விடுகிறார்.
தொண்ணூறுகளின கலை நயங்களை சுவைபட தொகுத்திருக்கிறார் கலை இயக்குனர் குமார் கங்கப்பன்.
எடிட்டர்: சூரிய பிரதமன் காட்சிகளை வழங்கியிருக்கும் விதம் அற்புதம்.
அதிரடி ஆக்ஷன்: திலிப் சுப்பராயன்,நடனம்: சாண்டி, ஒலிப்பதிவு: சுரேன், ஒலி வடிவமைப்பாளர்: சுரேன்.ஜி, அழகியகூத்தன்.எஸ் அனைத்து காட்சிகளும் உயிர்ப்போடு இருப்பதற்கு இவர்களின் பங்களிப்பு முக்கிய சாட்சி.
சுரண்டலுக்கும் ஏழ்மைக்கும் எதிராக கண்ணியத்திற்காகப் போராடும் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய படத்தில் மாரியின் “குழந்தைப் பருவத்தை தொலைத்த” ஒரு சிறு பகுதி வாழ்க்கை சம்பவத்தின் அடிப்படையாக வைத்து மகிழ்ச்சி, நட்பு, காதல், துக்கம் மற்றும் அவர் மீண்டும் எழுதத் துடிக்கும் மாற்ற நினைக்கும் விதியை வழிநடத்தும் ஒரு சிறுவனின் அழகான கதைக்களத்தோடு வலிகளை போராட்டகளத்தோடு உண்மை சம்பவங்களின் பின்னணியில் கொடுத்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். சாதி, முதலாளித்துவம், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் கருப்பொருள்கள் மிக சக்திவாய்ந்ததாகவும் நுட்பமாகவும் கதையில் வைத்து படத்தை ரசிக்கவும், சிந்திக்கவும், அழவும் வைத்து மனதில் நீங்கா இடம் பிடித்த படமாக கொடுத்ததில் மகாவெற்றி பெற்றிருக்கிறார் மாரி செல்வராஜ். இறுதியில் நிஜ பத்திரிகை செய்திகள் மூலம் நடந்த விபத்தனை உணர செய்யும் விதம் வெல்டன். இவரின் விடாமுயற்சி, உழைப்பிற்கு கௌரவமும், விருதுகளும் காத்திருக்கின்றன.
மொத்தத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டிருக்கும் வாழை நெஞ்சை நெகிழ வைக்கும் தருணங்கள், வலிகளை உணர வைக்கும் சுமையான வாழ்வியல் கலந்த அழுத்தமான தலைசிறந்த பயணம்.