வல்லமை சினிமா விமர்சனம் : வல்லமை தன் சாதுர்யமான செயல் மூலம் சாதித்து காட்டும் துணிச்சல்மிக்கவள் | ரேட்டிங்: 3/5

0
279

வல்லமை சினிமா விமர்சனம் : வல்லமை தன் சாதுர்யமான செயல் மூலம் சாதித்து காட்டும் துணிச்சல்மிக்கவள் | ரேட்டிங்: 3/5

 

பேட்டிலர்ஸ் சினிமா சார்பில் வல்லமை படத்தை தயாரித்து, கதை, பாடல்கள்,  எழுதி இயக்கியிருக்கிறார் கருப்பையா முருகன்.

இதில் பிரேம்ஜி – சரவணன் (தந்தை), திவதர்ஷினி – பூமிகா (மகள்), தீபா சங்கர் – (டாக்டர்)இ வழக்கு என் முத்துராமன் – (காவல் ஆய்வாளர்), சி.ஆர்.ரஜித் – சக்கரவர்த்தி (வில்லன்), சூப்பர்குட் சுப்ரமணி – (போலீஸ் கான்ஸ்டபிள்), சுப்பிரமணியன் மாதவன் – (வில்லன் டிரைவர்), விது – பாபு (பெட்ரோல் திருடன்),போராளி திலீபன் – சிவகுமார் (பள்ளி ப்யூன்) ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:-இசையமைப்பாளர்: ஜி.கே.வி, ஒளிப்பதிவு இயக்குனர்: சூரஜ் நல்லுசாமி, எடிட்டர்: சி கணேஷ் குமார், கலை இயக்குனர்: எஸ்.கே. அஜய், மக்கள் தொடர்பு : நிகில்முருகன்​

அரியலூரில் விவசாயியான சரவணன்(பிரேம்ஜி) காதல் மனைவி, மகளுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், மனைவி இறந்து விட அந்த அதிர்ச்சியின் தாக்கத்தில் சரவணனுக்கு காது கேளாமல் போவதுடன், விவசாயத்திலும் நஷ்டம் ஏற்பட, மகள் பூமிகா(திவதர்ஷினி) அழைத்துக் கொண்டு சென்னை வருகிறார். ஆட்டோ டிரைவர் உதவியுடன் வாடகை வீடு மற்றும் போஸ்டர்கள் ஒட்டும் வேலையும் கிடைக்கிறது. மகள் பூமிகாவை அரசு பள்ளியில் சேர்த்து விட்டு, வேலைக்கு சென்று வருகிறார் சரவணன்.ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் பூமிகா பூப்பெய்த்துவிட்டதாக நினைத்து டாக்டரிடம் (தீபா சங்கர்) அழைத்துச் செல்கிறார் சரவணன். ஆனால் டாக்டர் மகள் பூமிகா அவருக்கே தெரியாமல் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை சொன்னவுடன் நிலைகுலைந்து போகிறார் சரவணன். மகள் பூமிகாவிற்கும் இந்த விஷயம் தெரிய வர, தந்தையிடம் இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று தந்தையை வற்புறுத்துகிறார். முதலில் தயங்கும் சரவணன், பின்னர் மகளின் பிடிவாதத்திற்கு அடிபணிந்து இதற்கு காரணமான காம கொடூரனை கண்டு பிடித்து தண்டிக்க ஒத்துக் கொள்கிறார். இருவரும் சேர்ந்து யார் என்பதை கண்டுபிடித்தார்களா? அந்த கொடியவனுக்கு தண்டனை கொடுத்தார்களா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சாதாரண நடுத்தர விவசாயி சரவணனாக பிரேம்ஜி பன்னிரெண்டு வயது பெண்ணின் தந்தையாக முதிர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் தன்னுடைய நெகிழ்ச்சியான வெகுளித்தனமான நடிப்பால் கவர்கிறார். காது குறைபாடுடன் தவிப்பதும், மகளின் நிலையை கண்டு கண்ணீர் விடுவது, அதற்கு காரணமான நபர் யார் என்று தெரியாமல் தவித்து தேடி அலைவது, கண்டுபிடித்தவுடன் மகளுடன் சேர்ந்து தீர்த்துக் கட்ட திட்டம் போடுவது என்று கச்சிதமான நேர்த்தியான நடிப்பு சிறப்பு.

மகள் பூமிகாவாக திவதர்ஷினி குழந்தைத்தனமான முகபாவத்துடன் தந்தையின் செல்ல மகளாகவும், தந்தை நடனத்தை பார்க்க வராமல் போகும் போது முக வாட்டத்துடன் இருப்பதும், தனக்கே தெரியாமல் நடந்த கொடுமையை கண்டு பொங்கி எழுந்து தந்தையை சமாதானப்படுத்தி பழி வாங்க சம்மதம் வாங்குவதும், யார் செய்திருப்பார்கள் என்று எண்ண ஒட்டத்துடன் கதைக்களம் நகர தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து பழி வாங்க திட்டம் தீட்டி செயல்படுத்துவதும் மெச்சூரிட்டி கலந்த சிறுமியாக தெளிவாக செய்துள்ளார்.

டாக்டராக தீபா சங்கர், காவல் ஆய்வாளராக வழக்கு என் முத்துராமன், வில்லன் சக்கரவர்த்தியாக சி.ஆர்.ரஜித், போலீஸ் கான்ஸ்டபிளாக சூப்பர்குட் சுப்ரமணி, வில்லன் கார் டிரைவராக சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடன் பாபுவாக விது, அரசு பள்ளி பியூனாக போராளி திலீபன் என்று குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களைச் சுற்றித்தான் கதை நகர்வது படத்தின் முக்கிய சாட்சிகளாக மாறி தடம் பதித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.கே.வி, ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி, எடிட்டர் சி கணேஷ் குமார், கலை இயக்குனர் எஸ்.கே. அஜய் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல் ஆகிய பாதிப்பிற்கு உள்ளாகும் குழந்தைகளின் மனநிலையை சிறப்பாக பதிவு செய்து, தைரியமாக பெண் குழந்தை எடுக்கும் முடிவை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கருப்பையா முருகன். ஆனால் சிறு வயதிலேயே அறியாமல் நடந்த கொடுமையை எதிர்த்து துணிந்து அதிலிருந்து மீண்டு எழுந்து வாழ்க்கையில் ஜெயித்து சாதிக்க வேண்டும் என்ற உன்னத எண்ணத்தை அவர்களின் மனதில் தோன்ற வேண்டும் என்பதை சொல்லி எடுத்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். மற்றும் காட்சிகள் சில ஒன்றோடொன்று தொடர்பில்லாத வகையில் காட்டப்படுவதுடன், பழி வாங்கும் காட்சிகளிலும் திடீரென்று முடிந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

மொத்தத்தில் பேட்டிலர்ஸ் சினிமா சார்பில் கருப்பையா முருகன் தயாரித்திருக்கும் வல்லமை தன் சாதுர்யமான செயல் மூலம் சாதித்து காட்டும் துணிச்சல்மிக்கவள்.