ராபர் சினிமா விமர்சனம் : ராபர் எச்சரிக்கையுடன் இருப்பதற்கு பெண்கள் மட்டுமல்ல அனைவரும் பார்க்க வேண்டிய த்ரில்லிங் படம் | ரேட்டிங்: 3/5
இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் மற்றும் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள ராபர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.எம்.பாண்டி. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார்.
இதில் சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்றாயன், டேனி போப், பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்,இசை : ஜோகன் சிவனேஷ்,படத்தொகுப்பு : ஸ்ரீகாந்த், கலை : விஜய் சரவணன்,நடனம் : ஹரி கிருஷ்ணன், பாடல்கள் : அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ், மெட்ராஸ் மீரான், சாரதி, வெளியீடு:-சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, மக்கள் தொடர்பு : ஹரிபாபு
சிறைக்குப் புதிதாக வரும் இரண்டு கைதிகளிடம் பழைய கைதியான சென்ராயன், சத்யா என்ற ராபரை பற்றி கதையை விவரிப்பது போன்று கதைக்களம் தொடங்குகிறது. கிராமத்தில் தன் தாயுடன் (தீபா சங்கர்) ஏழ்மையில் வசிக்கும் சத்யா (சத்யா) கால் சென்டரில் வேலையில் சேர சென்னைக்கு வருகிறார். அங்கே கிடைக்கும் சம்பளத்தில் தன் தாய்க்கு வேண்டிய பணத்தை அனுப்பி விட்டு மீதம் இருக்கும் சம்பளத்தில் வாழ்கிறார். இந்நிலையில் அங்கு வேலை செய்யும் பலர் பணத்தை தண்ணீராக செலவு செய்து பெண்களுடன் ஊர் சுற்றி ஜாலியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்து சத்யாவிற்கும் அது போல் வாழ வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. தாராளமாக பணத்தை செலவு செய்ய முடியாத சூழ்நிலையில் பணத்தை சுலபமாக பெற நகை திருட்டில் ஈடுபடுகிறார். ஆள் நடமாட்டம் இல்லாத, கேமிரா இல்லாத இடங்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறித்து அதை விற்று அந்த பணத்தில் தான் நினைத்ததை சாதிக்கிறான். பெண்களுடன் பழகுவதற்கு நகைகள் வாங்கி கொடுப்பது, வெளியே அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிப்பது என்று அவனது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் திருட்டு நகைகளை வாங்கி பணம் கொடுக்கும் நபர், இவனிடம் இன்னொரு ஆளை சேர்த்துக் கொள்ளுமாறு சத்யாவிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார். அதன் பின் இருவரும் சேர்ந்து நகை பறிப்பு செல்ல பணத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கின்றனர். ஒரு நாள் தனியாக ஸ்கூட்டரில் செல்லும் ஒரு பெண்ணின் கழுத்தில் இருக்கும் நகையை பறிக்க முயலும் போது அந்தப் பெண் இந்த தாக்குதலில் இறந்து விடுகிறார். அந்த பெண் விபத்தில் இறந்ததாக அந்தப் பெண்ணின் தந்தையிடம் (ஜெயப் பிரகாஷ்) போலீஸ் கேஸை முடித்து விடுகிறது. ஆனால் அந்தப் பெண் நகைபறிப்பில் தான் இறந்தாள் என்பதை போலீஸ்காரர் (பாண்டியன்) என்பவர் அறிந்து கொள்கிறார். அதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த உண்மையை அந்த பெண்ணின் தந்தையிடம் கூற முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில் அந்த இறந்த பெண்ணின் தந்தைக்கு ஒரு கொரியர் வருகிறது, அதில் அந்த பெண் எந்த வழிப்பறி பேர்வழியால் இறந்தாள் என்பதற்கான ஆதாரம் மற்றும் சத்யாவின் புகைப்படம் இருப்பதை பார்க்கிறார்.அந்த சமயத்தில் ரிடையராகிவிடும் போலீஸ்காரர் பாண்டியன் உதவியுடன் சத்யாவை தேடி கண்டுபிடித்து சமார்த்தியமாக கடத்துகிறார். இந்த கடத்தலில் சத்யா தான் செய்த தவறை ஒப்புக் கொண்டானா? உண்மையை வரவழைக்க முடிந்ததா? சத்யா தப்பித்தானா? தண்டனை கிடைத்ததா? கைதி சென்ராயன் இந்த கதையை இரு புது கைதிகளிடம் சொல்ல காரணம் என்ன? எதற்கு? என்பதே படத்தின் விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.
(மெட்ரோ) சத்யா என்ற சொந்த பெயரிலேயே நெகடிவ் ரோலில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். கிராமத்து இளைஞன் சென்னைக்கு வந்து தன் வாழ்;க்கையை மாற்றியமைத்து, தவறான செயல்களை செய்து, சுயநலத்துடன் நடந்து, மற்றவர்களின் இழப்பை பற்றி கவலைப்படாமல், தன்னுடைய பேராசையால் எப்படி எல்லாம் திட்டம் தீட்டி செயல்படுத்தி ராபராக வலம் வருவதை தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும், அப்பாவித்தனமான முகத்தை வைத்துக் கொண்டு கண்களில் தீவிரத்தை காட்டி மிரட்டி அசத்தியுள்ளார்.
தாயாக தீபா சங்கர் வெள்ளேந்தியாக மகனை வழியனுப்பி வைத்துவிட்டு, பணத்தை கணக்கு பார்த்து போதும் என்ற அளவிற்கு கொடுக்கச் சொல்லும் மனசு, மகனின் பணத்தாசை, எந்த அளவிற்கு சென்றுள்ளது என்பதையறிந்து அதிர்ச்சியாகி எடுக்கும் முடிவு படத்திற்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
திருமண நிச்சயத்த நிலையில் மகளின் கோர மரணம் தந்த பேரடியை தாங்க முடியாமல் தந்தை ஜெயபிரகாஷ் தவிக்கும் தருணம், மற்றும் மகளின் சாவிற்கு காரணமான சத்யாவை கடத்தி சித்ரவதை செய்யும் காட்சிகளில் உணர்ச்சிகள் கலந்த சிறந்த நடிப்பு படத்திற்கு பலம்.
தப்பு செய்தவர்கள் நன்றாக இருக்க, தப்பு செய்யாக சென்றாயன் மாட்டிக் கொண்டு முழிக்கும் இடங்கள், இறுதிக்காட்சியில் முக்கிய உண்மையை கைதிகள் இருவரிடமும் சொல்லி விட்டு எகத்தாளமாக சிரித்துக் கொண்டு இருக்கும் போது, இரு கைதிகளும் வெளியே செல்ல அழைத்துச் செல்லும் இடங்களில் செய்யும் அளப்பறையில் கை தட்டல் பெறுகிறார். இந்தப்படத்தில் தான் சென்றாயன் முக்கிய ரோலில் மிகையில்லா நடிப்பில் நகைச்சுவை கலந்து அசத்தியுள்ளார்.
முதல் முறையாக வில்லனாக டேனி போப் மாறுபட்ட கதாபாத்திரம், மனிதநேயமிக்க போலீஸ்காரர் பாண்டியன் மற்றும் நகை பறிப்பில் பாதிக்கப்படும் பெண்களாக வருபவர்களும் தத்ரூபமான நடிப்பில் ஜொலிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமார் சென்னையின் நகர்ப்புற வாழ்க்கையையும், புறக்கணிக்கப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் பாழடைந்த சாலைகள்-இடங்களை கண்டுபிடித்து அதில் நடக்கும் நகை பறிப்பு சம்பவங்களை தன்னுடைய காட்சிக் கோணங்களால் திறம்பட காட்சிப்படுத்தியுள்ளார்.
எடிட்டர் ஸ்ரீகாந்த் என்.பி. முதல் பாதி வேகமாக நகர்வதை உறுதிசெய்வதோடு இரண்டாம் பாதி வேறு கட்டத்திற்கு நகர்ந்து செல்லும் போது விறுவிறுப்பை குறையாமல் பார்த்துக் கொள்வதில் பெரிய பங்களிப்பை செய்துள்ளார்.
ஜோஹன் சிவானேஷின் இசை தனித்துவமாக தெரிவதுடன் பின்னணி இசையில் அதிர வைத்து, பல இடங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி முத்திரை பதித்து இந்த படத்தின் மூலம் பெரிய அளவில் பேசப்படுவார்.
‘மெட்ரோ’திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் தினமும் நடக்கும் நகை, செல்போன் பறிப்பு சம்பவங்களை மேலோட்டமாக படித்து விட்டு கடந்து செல்லும் நாம், அதனால் பாதிக்கப்படும் மக்களின் மனநிலை, வலிகள், இழப்புகள் பற்றி கவலைப்படாமல் இருப்பதை, உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தரமான திரைக்கதையாக வடிவமைத்து கொடுத்துள்ளார் ஆனந்த கிருஷ்ணன். எப்பொழுதுமே வடநாட்டு நபர்கள் அல்லது ஏழ்மை தோற்றத்தில் இருப்பவர்களை ஸ்டீரியோடைப் கொள்ளையர்களாக அடையாளம் காட்டப்படுபவர்களை தவிர்த்து நன்றாக ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டு டிப்டாப்பாக உடையணிந்து நம்மில் ஒருவராக இருப்பவர்களே இத்தகைய செயல்களை செய்கிறார்கள் என்ற புதிய கோணத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து யதார்த்தமாக சொல்லியிருப்பது படத்தின் ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. அழுத்தமான வசனங்கள், உரையாடல்கள், தீவிரமான வன்முறைக்கு மத்தியில் கூட, எதிர்பாராத நகைச்சுவை சில இடங்களில் வந்து போகிறது. அலங்கார ஆபரணம் பல சந்தர்ப்பங்களில் ஆபத்திற்கு காரணமாக அமைவதும், அனைத்து பெண்களுக்கும் ஒரு எச்சரிக்கையும், விழிப்புணர்வையும் ஏற்படும் விதத்தில் அசத்தலான த்ரில்லராக போதிய தகவல் அம்சங்களுடன் அழுத்தமான பதிவாக இயக்கியுள்ளார் எஸ்.எம்.பாண்டி.
மொத்தத்தில், இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பாக பத்திரிகையாளர் கவிதா எஸ் மற்றும் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள ராபர் எச்சரிக்கையுடன் இருப்பதற்கு பெண்கள் மட்டுமல்ல அனைவரும் பார்க்க வேண்டிய த்ரில்லிங் படம்.