ராஜபீமா சினிமா விமர்சனம் : ராஜபீமா பிரிக்கமுடியாத பாசத்திற்கு இலக்கணம் | ரேட்டிங்: 3/5
சுரபி பிலிம்ஸ் சார்பில் மோகன் தயாரித்திருக்கும் ராஜபீமா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நரேஷ் சம்பத்.
இதில் ஆரவ் – ராஜா, அஷிமா நர்வால் – துளசி, நாசர் – சிங்கராயர்,கே.எஸ். ரவிக்குமார் – மந்திர வாசகம், அருவி மதன் – மாமன், யாஷிகா ஆனந்த் – துர்கா,யோகி பாபு – இடி, ஓவியா – ஓவியா, பாகுபலி பிரபாகர் – தயாளன், சயாஜி ஷின்டே – முதல்வர், ராகவன் – ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழுவினர் :-ஒளிப்பதிவாளர் – எஸ்.ஆர். சதீஷ் குமார், இசை – சைமன் கே கிங், எடிட்டர் – கோபிகிருஷ்ணா,மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர், டி ஒன்
பொள்ளாச்சியில் சிறு வயதில் ராஜா (ஆரவ்) தந்தை சிங்கராயர் (நாசர்), தாய் மற்றும் மாமன் (அருவி மதன்) ஆகியோருடன் வசிக்கிறான். அதிக பாசத்துடன் இருந்த தாயின் இழப்பு பேரடியாய் ராஜாவிற்கு இருக்க பெரும் மனவேதனையில் யாருடனும் பேசாமல், பழகாமல் தனிமையில் இருக்கிறான். ராஜாவை மாற்ற தந்தை சிங்கராயர் மற்றும் மாமன் அனைத்து வழிகளிலும் முயற்சி செய்ய முடியாமல் போகிறது. ஒரு நாள் பள்ளி செல்லும் வழியில் காட்டு யானைக்குட்டி ஒன்றை பார்க்க அதனருகே சென்று பாசத்துடன் அரவணைத்து பேசி மகிழ்கிறான்.இதனை பார்த்த தந்தை சிங்கராயர் யானையை வீட்டில் வைத்து வளர்க்க முடிவு செய்து வனத்துறையினரிடம் முறையான அனுமதி பெற்று யானைக்கு பீமா என பெயர் சூட்டி வளர்க்கிறார். ராஜாவும் பீமாவும் பாசப்பிணைப்புடன் வலம் வருகின்றனர்.ஒருநாள் பீமா உதவியுடன் ராஜா காட்டு மிருகங்களை மற்றும் யானைகளை கொன்று விலங்குகளின் கொம்பு மற்றும் யானை தந்தம் கடத்துபவர்களை வனத்துறை அதிகாரியிகளிடம் பிடித்துக் கொடுக்கிறான். இந்நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் வனத்துறை அமைச்சர் மந்திர வாசகம் (கே.எஸ். ரவிக்குமார்) இந்த கடத்தலுக்கு உடந்தையாhக இருக்கிறார். அதே சமயம் தனது பதவி பறி போகும் சூழல் ஏற்பட அதற்காக ஜோதிடரின் யோசனைப்படி நல்ல சூழியுள்ள யானையை தேடி கண்டுபிடித்து பலி கொடுத்தால் பதவி நீடிக்கும் என்பதை நம்பி குருட்டு நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த பரிகாரத்திற்கு சரியாக பொருந்தி வரும் பீமாவை பலிகொடுக்க வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் பீமாவை புத்துணர்வு முகாமுக்கு அதிரடியாக அழைத்து செல்கிறார்கள். விஷயம் அறிந்த ராஜா பதறியடித்துக் கொண்டு தனது அன்புக்குரிய நண்பன் பீமாவைத் தேடி முகாமிற்க்கு வருகிறான். அங்கு யானையை பார்த்த ராஜா இது தன்னுடைய பீமா இல்லை என்று அதிகாரிகளிடம் கூறுகிறான். அதன் பின் ராஜா தன் பீமாவை தேடி கண்டுபிடித்தானா? பீமாவும் ராஜாவும் ஒன்று சேர்த்தார்களா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
ஆரவ் ராஜாவாக பாசத்திற்காக ஏங்கும் இளைஞனாக வலம் வந்து அநியாயத்தை தட்டி கேட்கும் இடத்திலும், அதிரடி காட்சிகளில் திறமையை வெளிப்படுத்தி பீமாவுடன் இருக்கும் பாசப்பிணைப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
வனத்துறை அமைச்சர் மந்திர வாசகமாக கே.எஸ். ரவிக்குமார் அதிகாரத்தை கைப்பற்ற எடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி, சிரித்துக் கொண்டே வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார்.
ஓவியா ஒரு பாடலுக்கு ஆட ,அமைச்சரின் வளர்ப்பு மகனாக இடியாக யோகி பாபுவிற்கும் அதிகமாக வேலை இல்லை.
தந்தை சிங்கராயராக நாசர், காதலி துளசியாக அஷிமா நர்வால், மாமாவாக அருவி மதன், துர்காவாக யாஷிகா ஆனந்த், கடத்தல் வேட்டைக்காரன் தயாளனாக பாகுபலி பிரபாகர், முதல்வராக சயாஜி ஷின்டே மற்றும் பலர் படத்தின் காட்சிகளுக்கு சிறப்பு செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். சதீஷ் குமார், இசையமைப்பாளர் சைமன் கே கிங் இசை மற்றும் பின்னணி இசை, படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பணி படத்திற்கு கொடுத்திருக்கும் உழைப்பு இன்றியமையாததாக உள்ளது.
வனவிலங்கிற்கும் மனிதனுக்கும் இருக்கும் நட்பை அழுத்தமாக பதிவு செய்து அதில் பாசம், செண்டிமென்ட், தாய்யன்பு, கடத்தல் கலந்து அரசியல் சதிராட்டமாக கண்மூடித்தனமான மூடநம்பிக்கையின் பிம்பமாக படத்தில் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர் நரேஷ் சம்பத்.
மொத்தத்தில் சுரபி பிலிம்ஸ் எஸ்.மோகன் தயாரித்துள்ள ராஜபீமா பிரிக்கமுடியாத பாசத்திற்கு இலக்கணம்.