ரயில்  சினிமா விமர்சனம் : ரயில் இடம் மாறினாலும், பாச உணர்ச்சிகளின் பிரதிபலிப்பில் தடம் பதிக்கிறது | ரேட்டிங்: 2.5/5

0
259

ரயில்  சினிமா விமர்சனம் : ரயில் இடம் மாறினாலும், பாச உணர்ச்சிகளின் பிரதிபலிப்பில் தடம் பதிக்கிறது | ரேட்டிங்: 2.5/5

டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் வேடியப்பன் தயாரித்திருக்கும் ரயில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாஸ்கர் சக்தி.

இதில் முத்தையா – குங்குமராஜ் முத்துசாமி, செல்லமா – வைரமாலா. சுனில் – பர்வேஸ் மெஹ்ரூ, வரதன் – ரமேஷ்வைத்யா, ஹீரோயின் அப்பா – செந்தில் கோச்சடை, சுனில் மனைவி டிம்பிள் – ஷமீரா, சுனில் அப்பா – பிண்ட்டூ, சுனில் அம்மா – வந்தனா, குழந்தை – பேபி தனிஷா, திருப்புளி – சுபாஷ், இன்ஸ்பெக்டர் – தங்கமணி பிரபு,மில் மேனேஜர் – ரமேஷ் யந்த்ரா, அக்கவுண்டண்ட் – சாம் டேனியல், சுனில் சூஃப்ரெண்ட் – ராஜேஷ், கான்ஸ்டபிள் – ராமையா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு : நாகூரான், இராமச்சந்திரன், இசை : எஸ்.ஜே.ஜனனி, சவுண்ட்  – ராஜேஷ் சசீந்திரன், பாடலாசிரியர் – ரமேஷ் வைத்யா, மேனேஜர் – உசிலை சிவா, மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

தேனி அருகே ஒரு கிராமத்தில் உள்ள காதுகேளாத கிழவியின் வீட்டில் தன் காதல் மனைவி செல்லம்மாவுடன் (வைரமாலா) வாடகைக்கு குடியிருக்கிறார் முத்தையா (குங்குமராஜ் முத்துசாமி). அதே வீட்டில் இன்னொரு அறையில் வட மாநில வாலிபர் சுனில் (பர்வேஸ் மெஹ்ரூ) பஞ்சு தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டு வாடகைக்கு இருக்கிறார்.  எலக்ட்ரீஷியன் வேலை செய்யும் முத்தையா, தன் தொழிலில் கவனம் செலுத்தாமல் சம்பாதிக்கும் பணத்தில் குடித்து பொழுதை கழிக்கிறார். முத்தையா வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்த செல்லம்மா, அவருடைய தந்தையின் பண உதவிகளையும் செலவு செய்து , நகைகளையும் அடகு வைத்து குடித்து அழிக்கிறார். இதனால் தினமும் சண்டை சச்சரவு நடக்க, அதை சுனில் தடுத்து சமாதானம் செய்ய பார்க்கிறார். ஏற்கனவே வட மாநிலத்தவரால் தான் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று நினைக்கும் முத்தையா, சுனிலை எதிரியாக பார்க்கிறார். ஒருநாள் சுனில் ஒரு பையை செல்லம்மாவுடன் கொடுத்து பத்திரமாக வைக்கச்சொல்கிறார். அன்று முத்தையாவிற்கும், செல்லம்மாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டு சண்டையில் முடிய, செல்லம்மா கோபத்தில் வீட்டை விட்டுச்சென்று விடுகிறார். மறுநாள் சுனில் விபத்தில் இறந்து விடுகிறார்.  சுனிலின் பையும் காணாமல் போய் விடுகிறது. அதன் பின் என்னஆனது? முத்தையா என்ன செய்தார்? செல்லம்மா திரும்பி வந்தாரா? சுனில் கொடுத்த பையில் என்ன இருந்தது? சுனில் குடும்பத்தாருக்கு காணாமல் போன பையை கண்டுபிடித்து ஒப்படைத்தாரா செல்லம்மா? என்பதே மீதிக்கதை.

குடிகார முத்தையாவாக குங்குமராஜ் முத்துசாமி படம் முழுவதும் அடாவடி பேச்சு, பரட்டை தலை, அழுக்கு உடையுடன் வலம் வருவது, மனைவியிடம் தகராறு, மாமனாரிடம் சண்டை, பணப்பிரச்சனை, வட மாநில வாலிபரிடம் காட்டும் வெறுப்பு, குழந்தை பாசத்திற்காக ஏங்குவது, தவறு செய்ததை ஒப்புக் கொள்ளாமல் அழுத்தமாக இருப்பது, குழந்தையால் மனம் மாறுவது, என்று குடிகார கிராமத்து இளைஞராக தெனாவெட்டு நடையுடன் வலம் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கிராமத்து பெண்ணாக, அன்பான செல்லம்மாவாக வைரமாலா சகோதர பாசத்திலும், கணவனை திருத்த போராடும் இடத்திலும், தந்தையிடம் பணம் பெற தயக்கம் காட்டும் இடத்திலும், சுனிலிடம் பாட்டு போட்டியில் கலகலப்பாக இருப்பதும், சுனிலின் குடும்பத்திற்காக வருந்தி உதவி செய்ய போராடுவதிலும், கணவனிடம் உண்மையை கண்டறிய எடுக்கும் முயற்சிகளிலும் தேர்ந்த நடிப்பை வழங்கி இயல்புடன், வாய் சண்டை மற்றும் தத்ரூபமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

வட மாநில தொழிலாளி சுனிலாக பர்வேஸ் மெஹ்ரூ திதி என்று சகோதரனாக செல்லம்மாவிடம் பழகுவதிலும், அனைவருக்கும் உதவி செய்யும் நல்ல குணம், வெள்ளேந்தி மனதுடன் சிறப்பாக செய்துள்ளார்.நகைச்சுவைக்கு குடிகார நண்பனாக ரமேஷ் வைத்யா, மருமகனை திருத்த முயலும் தாராள பிறருக்கு உதவும் மனதுடைய மாமனாராக செந்தில் கோச்சடை, சுனிலின் மனைவி டிம்பிளாக ஷமீரா, சுனில் அப்பாவாக பிண்ட்டூ, சுனில் அம்மாவாக வந்தனா, சுனில் குழந்தையாக பேபி தனிஷா, திருப்புளயாக சுபாஷ், இன்ஸ்பெக்டராக தங்கமணி பிரபு, மில் மேனேஜராக ரமேஷ் யந்த்ரா, சுனில் நண்பனாக ராஜேஷ், கான்ஸ்டபிளாக ராமையா, அக்கவுண்டண்ட்டாக சாம் டேனியல் மற்றும் பலர் வலுவாக கதை ஒட்டத்திற்கு துணை புரிந்துள்ளனர்.

எஸ்.ஜே.ஜனனி இசை மற்றும் பின்னணி இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், நாகூரான் இராமச்சந்திரனின் படத்தொகுப்பும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு கிராமத்து வாழ்வியலை நம் கண் முன்னே நிறுத்தியதற்கு பாராட்டுக்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலையை சித்தரித்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பாஸ்கர் சக்தி. தமிழகத்தில் குடி போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் தங்கள் திறமையை மறந்து, வேலையை துறந்து, குடி மட்டுமே பிரதானமாக கருதும் நிலைக்கு தள்ளப்படுவதையும், அவனது குடும்பத்தையும், அவனைச் சுற்றி வசிப்பவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை யதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். இதனால் கிராமத்தில் புறக்கணிக்கப்பட்டு மற்ற மாநில தொழிலாளர்கள் இங்கே வந்து வேலை செய்து சம்பாதிப்பதையும், அவர்களுக்கு எத்தகைய எதிர்ப்பும், இழப்புகளும், சிக்கல்களும், துன்பங்களும் ஏற்படுகிறது, குடும்பங்களை பிரிந்து வாழும் நிலையும், இறந்தால் அனாதையாக கருதப்படுவதையும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி. அதே சமயம் அவர்களுக்கு உதவும் நல்லுங்களும் இருக்கிறது என்பதை காட்சிப்படுத்தியிருந்தாலும், குடிபழக்கத்தால் நம் வருங்கால இளைஞர்களின் வாழ்க்கை சீரழிவிற்கு தீர்வையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் டிஸ்கவரி சினிமாஸ் எம்.வேடியப்பன் தயாரித்துள்ள ரயில் இடம் மாறினாலும், பாச உணர்ச்சிகளின் பிரதிபலிப்பில் தடம் பதிக்கிறது.