ரகு தாத்தா விமர்சனம் : ரகு தாத்தா பழைய நினைவுகளின் பிரமிப்பை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம் | ரேட்டிங்: 2/5
ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் ரகு தாத்தா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுமன் குமார்
கீர்த்தி சுரேஷ் – கயல்விழி பாண்டியன்,எம்.எஸ்.பாஸ்கர் – ரகோத்தமன்,தேவதர்ஷினி – அலமேலு,ரவீந்திர விஜய் – தமிழ் செல்வன்,ஆனந்தசாமி – ரங்கநாதன்
தொழில்நுட்ப கலைஞர்கள்:- கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: விஜய் சுப்ரமணியம், இசையமைப்பாளர்: ஷான் ரோல்டன், நிர்வாக தயாரிப்பாளர்: ரியா கொங்கரா, இணை இயக்குனர் – துர்கேஷ் பிரதாப் சிங் ,ஒளிப்பதிவு இயக்குனர்: யாமினி யக்ஞமூர்த்தி, படத்தொகுப்பு : டி.எஸ். சுரேஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராம்சரந்தேஜ் லபானி ,விளம்பர எடிட்டர்: ஸ்னீக் பீக் ,ஆடியோகிராஃபர்கள்: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, எஸ். சிவகுமார் (ஏஎம் ஸ்டுடியோஸ்) ,ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா, கீர்த்தியின் ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி மஞ்சரி, வசனம்: மனோஜ் குமார் கலைவாணன், போஸ்ட் புரொடக்ஷன் சூப்பர்வைசர்: ஓ.கே. விஜய்,விளம்பர வடிவமைப்பாளர்: ஜெயன், ஸ்டில் போட்டோகிராபர் – விஷ்ணு எஸ் ராஜன், பி ஆர் ஒ யுவராஜ்
1960களின் காலகட்டத்தில் கதைக்களம் ஆரம்பிக்கிறது. தமிழ்நாட்டின் வள்ளுவன்பேட்டை என்ற ஊரில் 25வயது பட்டதாரியான கயல்விழி பாண்டியன் கிளர்க்காக மெட்ராஸ் சென்ட்ரல் பேங்கில் வேலை செய்கிறார். பெற்றோர், அண்ணன் மற்றும் ரகு தாத்தா (எம்.எஸ். பாஸ்கர்) ஆகியோருடன் கயல்விழி வசிக்கிறார். ஒரு பெண்ணியவாதியான கயல், ஒரு பெண்ணின் படைப்புகளை மக்கள் படிக்க மாட்டார்கள் என்று எண்ணி கே பாண்டியன் என்ற புனைப்பெயரில் எழுதும் எழுத்தாளர் மற;றும் தமிழ் பற்றுடன் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர். தன் தாத்தாவின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் கயல் ஊரில் ஹிந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, அங்கே திறக்கப்பட்ட ஏக்தா சபையை ஊர்மக்களை திரட்டி தன் தாத்தாவுடன் சேர்ந்து மூட வைத்து பிரபலமாகிறார்.கயல் தனது எழுத்து வெற்றியையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கும் போது இவரின் எழுத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும் ரசிகனாக காட்டிக் கொள்ளும்; பொறியாளரான செல்வன் (ரவீந்திர விஜய்) நட்பாக பரிச்சயமாகிறார். வீட்டில் திருமணம் செய்து கொள்ள பெற்றோரின் தொடர்ச்சியான அழுத்தம் அவரது மகிழ்ச்சியைத் தடுக்கிறது. இந்நிலையில் ரகு தாத்தாவுக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பதை குடும்பத்தினர்களுக்கு தெரிய வர அதிர்ச்சியாகின்றனர். அதனால், அவர் இறப்பதற்கு முன், புஹாரி பிரியாணி சாப்பிடுவது, எம்.ஜி. ராம்சந்திரனுடன் புகைப்படம் எடுப்பது, கயலின் திருமணத்தைப் பார்ப்பது என மூன்று எளிய நிறைவேறாத ஆசைகளை கூறுகிறார். கயல் இறுதியாக குடும்ப அழுத்தத்திற்கு அடிபணிந்து, அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை நிராகரித்து மக்களின் நலனுக்காக உழைக்கும் மற்றும் அன்பான அனைத்தையும் நம்பும் பொறியாளரான தனது நண்பரான செல்வனை (ரவீந்திர விஜய்) திருமணம் செய்ய முடிவு செய்கிறார். கயல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அறிந்து முழு குடும்பமும் பரவசத்தில் இருக்கிறது. அவளுடைய எதிர்காலம் அவள் கனவு கண்டது போல் தெரியும் நேரத்தில் கயல் கே.பி.பாண்டியன் என்ற பெயரில் எழுதும் பெண் எழுத்தாளர் என்று ஒரு மொட்டை கடிதாசி வருகிறது. அந்த கடிதத்தை அனுப்பியது யார், ஏன்? என்று ஆராயும் கயல் அது எழுதியது யார் என்பதை கண்டுபிடிக்கிறார். அதன் பின் அவருடைய திருமணத்திற்கு வந்த தடங்கல்கள் என்ன? இந்தி திணிப்பை எதிர்க்கும் கயல் தன் கொள்கையிலிருந்து விலக என்ன காரணம்? கயலின் திருமணம் தடை பட்டதா? ரகு தாத்தாவின் கடைசி ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கயல்விழி பாண்டியனாக கீர்த்தி சுரேஷ் படம் முழுவதும் தன்னுடைய இயல்பான நடிப்பாற்றலால் தாங்கி பிடித்துள்ளார். தாத்தாவிடம் பாசம், இந்தியை எதிர்த்து போராட்டம், பேங்கில் மேனேஜரிடம் கறாரக பேசுவதும், அவர் பேசும் தமிழை திருத்துவதும், எழுத்தாளராக தன் படைப்பை புகழும் செல்வனை நம்பி ஏமாறுவது, பின்னர் அவனிடமிருந்து தப்பிக்க திருமணத்தை நிறுத்த எடுக்கும் முயற்சிகள் என்று பெண்ணியவாதியாகவும், துணிச்சலான பெண்மணியாகவும் மனதில் ஆழமாக பதித்து விடுகிறார்.
எம்.எஸ்.பாஸ்கர் தாத்தா ரகோத்தமனாக அளவான நடிப்பும், தேவதர்ஷினி அலமேலுவாக கயலின் தோழியாக, ரவீந்திர விஜய் நாயகன் தமிழ் செல்வனாக முதலில் நல்லவனாக காட்டிக் கொண்டு பின்னர் குள்ளநரித்தனமாக வேலைகள் செய்யும் கெட்டவனாக நிலைநிறுத்தி செய்யும் காரியங்களில் யதார்த்தமாக செய்துள்ளார். மற்றும் ஆனந்தசாமி ரங்கநாதன் ஏக்தா சபாவை திறக்க போராடும் நபராக இறுதியில் தன் பங்களிப்பை கொடுத்து படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
இசையமைப்பாளர்: ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு இயக்குனர்: யாமினி யக்ஞமூர்த்தி, படத்தொகுப்பு : டி.எஸ்.சுரேஷ், கலை இயக்குனர் ஆகிய தொழில் நுட்ப கலைஞர்;களின் பங்களிப்பு 1960-70 காலகட்டத்தை நம் கண் முன்னே நிறுத்தி கடின உழைப்பை கொடுத்து படத்திற்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளனர்.
ரகு தாத்தாவில் வலிமையான, சுதந்திரமான மற்றும் புத்திசாலித்தனமான பெண்களை மையக் கதாபாத்திரங்களாக கொடுத்து அதில் அரசியல், பெண்ணியம், ஆணாதிக்கம் மற்றும் ஒரு சமூகக் கருப்பொருளை சில குறைபாடுகளுடன் இணைத்து நகைச்சுவை கொஞ்சம் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் சுமன் குமார்.
மொத்தத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் ரகு தாத்தா பழைய நினைவுகளின் பிரமிப்பை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.