மெட்ராஸ் மேட்னி சினிமா விமர்சனம் : மெட்ராஸ் மேட்னி வித்தியாசமான கோணத்தில் புதிய அனுபவத்தை தரும் சிம்பிளாக குடும்ப படம் அனைவரும் சென்று பார்த்து ரசித்து மகிழலாம்
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் மணி, தேவ் ஆனந்த், ஆர்ச் தாம்சன், ராபர்ட் மார்டிசென்கோ, கோரின் மார்டிசென்கோ தயாரித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் மெட்ராஸ் மேட்னி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் மணி.
இதில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு -ஆனந்த் ஜி. கே, இசை – கே. சி. பாலசாரங்கன் , படத்தொகுப்பு – சதீஷ்குமார் சமுஸ்கி, கலை – ஜாக்கி, மக்கள் தொடர்பு-யுவராஜ்.
ஒரு முதியோர் ஒய்வு இல்லத்தில் வசிக்கும் அறிவியல் புனைகதைகளை எழுதும் எழுத்தாளர் ஜோதி ராமையாவை (சத்யராஜ்) அங்கே பராமரிப்பு வேலைகளை செய்யும் லில்லி என்ற பெண் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை எழுதும்படி நிர்பந்திக்கிறார். அதன்படி அந்த எழுத்தாளர் சுவாரஸ்யம், சாகசம் இல்லாத நடுத்தர குடும்பத் தலைவன் கண்ணன் பற்றி எழுதும் கதையாக, ஜோதி ராமையா தன்னுடைய குரலில் படத்தின் காட்சிகளை விளக்கும் விதமாக படம் ஆரம்பமாகிறது. கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் வேலையை செய்யும் கண்ணன் (காளி வெங்கட்) காதலித்து கமலம்(ஷெல்லி) திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் குப்பை அள்ளும் வேலையை விட்டு விட்டு கடன் வாங்கி ஆட்டோ ஒட்டி பிள்ளைகளை படிக்க வைக்கிறார். அவர்களுக்கு மகள் தீபிகா(ரோஷிணி ஹரிபிரியா) மகன் தினேஷ் (விஷ்வா) என்று அளவான அன்பான குடும்பம். படிப்பை முடித்த தீபிகா பெங்களுரில் தங்கி வேலை செய்தாலும் அமெரிக்கா சென்று வேலை செய்து கடனை அடைத்து பெற்றோரை வசதியாக வாழ வைக்க வேண்டும் என்ற லட்சித்துடன் இருக்கிறார். மகன் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர விண்ணப்பித்திருக்கிறார். மகள் காதலிக்கும் இளைஞனை நிராகரிக்கும் கண்ணன், பெண்ணிற்கு வரன் பார்த்து திருமணத்தை முடிக்க முயல்கிறார்.திருமண செலவிற்காக சேட்டிடம் கடன் பெற்று கார் வாங்குவதற்காக ஒட்டுனர் பயிற்சியில் சேர்ந்து கற்றுக் கொள்கிறார். இதனிடையே எதிர்பாராத விதமாக கண்ணன் வீட்டில் வளர்க்கும் நாய் மின்சாரம் தாக்கி இறந்து விடுகிறது. இதனால் கோபத்தில் இருக்கும் மகன் தினேஷ் மின்சார அலுவலகத்திற்கு சென்று சண்டை போடுகிறார். மகனை தேடி வரும் பெற்றோர்கள் அவமானப்படுத்தப்பட, அதன் பின் என்ன நடந்தது? தந்தை அவமானப்படுவது எதனால் என்பதை பிள்ளைகள் உணர்ந்து திருந்தினார்களா? அடுத்த தலைமுறையை தலை நிமிர உழைக்கும் கண்ணனின் கஷ்டத்தை பிள்ளைகள் உணர்ந்தார்களா? தீபிகா அமெரிக்க செல்ல முடிந்ததா? அதன் பின் கண்ணன் குடும்பத்தில் என்ன மாற்றங்கள் நடந்தது? என்பதை நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை நிஜத்தை பிரதிபலிப்பதே கதையின் முடிவு.சத்யராஜ் எழுத்தாளராக கதையின் சாரம்சத்தை காட்சிகளுக்கு நடுவே விவரிப்பது போன்று கதை முழுவதும் இவரின் குரல் ஒலித்துக் கொண்டே இருப்பது படத்திற்கு பலம். நடுத்தர மக்களின் கஷ்டங்களை கடைசியில் புரிந்து கொண்டு மெய் சிலிர்ப்பது படத்தின் ஹைலைட்ஸ்.
கண்ணனாக காளி வெங்கட் கஷ்டத்திலும், இன்முகத்துடன் அமைதியாக பணிவாக கையாள்வதும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒடோடி உழைப்பதும், மனைவியை இழிவுபடுத்தும் போது கொதிப்படைந்து பளார் என்று மின்சார அதிகாரியை அறைவதும், மகளின் கடுங் சொற்களை ஜீரணிக்க முடியாமல் தவிப்பது, அதன் பின் மகளிடம் பாசத்தை கொட்டுவது என்று இயல்பான நடுத்தர குடும்பத் தலைவனாக நடிப்பு அற்புதம்.
மனைவி கமலமாக ஷெல்லி கணவன், மகள், மகன் என்று பாசத்துடன் அரவணைத்து செல்லும் இடத்திலும், அவர்களுக்காகவே அயராது உழைக்கும் நடுத்தர குடும்பத்தலைவியாக வாழ்ந்துள்ளார்.
தீபிகாவாக ரோஷிணி ஹரிபிரியா அழுத்தமான பொறுமையாக கையாளும் குணம் படைத்த மகளாக தந்தை, தாய் மீது அன்பை பொழிவதும், பின்னர் விரக்தியை காட்டிக் கொண்டாலும் அவர்களின் தியாகத்தை நினைத்து நெகிழும் இடத்தில் தனித்து நிற்கிறார்.
காதல், வெட்டி பேச்சு என்று அடாவடியான மகன் தினேஷாக விஷ்வா தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து இறுதியில் பெற்றோருக்கு சுமையாக இருப்பதை விரும்பாமல் சுயமாக சம்பாதிக்க செல்லும் இடத்தில் கவனிக்க வைத்துள்ளார்.
இவர்களுடன் ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா ஆகியோர் துணை கதாபாத்திரங்களாக சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார்கள்.
மெட்ராஸ் மேட்னி படத்தின் காட்சிக் கோணங்களில் அதற்கான கலர் டோனில் வர்ண ஜாலங்களை கொடுத்து அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜி. கே.
இசை – கே. சி. பாலசாரங்கன் , படத்தொகுப்பு – சதீஷ்குமார் சமுஸ்கி, கலை – ஜாக்கி அனைவரின் பங்களிப்பு சிறப்பு.
ஒரு நடுத்த குடும்பத்தின் கதையை விவரிக்கும் ஒரு எழுத்தாளரை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் எவ்வாறு சமாளித்து தங்கள் இரு குழந்தைகளையும் சிரமப்பட்டு வளர்ப்பதற்கு வாங்கும் கடன்கள், படும் கஷ்டங்கள், அவமானங்கள் அதை சமாளித்து தங்கள் பிள்ளைகளை எப்படி வழிநடத்தி நல்ல நிலைமைக்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை திரைக்கதையாக கொண்டு அசத்தலாக இன்றைய நடுத்தர மக்களின் எண்ணங்களை பிரதிவலிக்கும் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திகேயன் மணி. மிடில் கிளாஸ் வாழ்வியல் படம் முழுவதும் மெதுவாக செல்வது போல் உணர்ந்தாலும் அனைத்து மக்களையும் இணைக்கும் பாலமாக நிச்சயம் அமையும்.
மொத்தத்தில் மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் மணி, தேவ் ஆனந்த், ஆர்ச் தாம்சன், ராபர்ட் மார்டிசென்கோ, கோரின் மார்டிசென்கோ தயாரித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் மெட்ராஸ் மேட்னி வித்தியாசமான கோணத்தில் புதிய அனுபவத்தை தரும் சிம்பிளாக குடும்ப படம் அனைவரும் சென்று பார்த்து ரசித்து மகிழலாம்.