மின்மினி சினிமா விமர்சனம் : மின்மினி நண்பனின் நினைவுகளில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க நினைக்கும் இருவரின் இளமை துள்ளும் சாகச பயணத்தின் விஷுவல் ட்ரீட் | ரேட்டிங்: 3/5

0
347

மின்மினி சினிமா விமர்சனம் : மின்மினி நண்பனின் நினைவுகளில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க நினைக்கும் இருவரின் இளமை துள்ளும் சாகச பயணத்தின் விஷுவல் ட்ரீட் | ரேட்டிங்: 3/5

ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷ_ புரொடக்ஷன்ஸ், ஆன்கர் பே ஸ்டுடியோஸ் சார்பில் மனோஜ் பரமஹம்சா ஐஎஸ்சி, ஆர்.முரளி கிருஷ்ணன் தயாரித்திருக்கும் மின்மினி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹலிதா ஷமீம்.

இதில் சபரி கார்த்திகேயனாக பிரவீன் கிஷோர், பாரி முகிலனாக கௌரவ் காளை,பிரவீணாவாக எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவாளர்- மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளர் – கதீஜா ரஹ்மான், எடிட்டர் – ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, கலை இயக்குனர் – செரிங் குர்மெட் குங்கியம், தயாரிப்பு ஒலி கலவை – ராகவ் ரமேஷ், விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்- லிங்கின் லிவி, ஒலி வடிவமைப்பு – அழகியகூத்தன் , சுரேன்.ஜி, வண்ணக்கலைஞர்- நேசிகா ராஜகிமாறன், மறுபதிவு கலவைகள் – எஸ்.சிவகுமார் , கிருஷ்ணன் சுப்ரமணியன், லைன் புரொட்யூசர் – ஸ்டான்சின் டோர்ஜாய் கியா, நிர்வாகத் தயாரிப்பாளர் – கே.ஜெயசீலன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர்

ஊட்டி கான்வென்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் பாரி (கௌரவ் காளை) பள்ளியில் பல விருதுகளை பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர். பள்ளியில் செல்லபிள்ளையாக வலம் வரும் பாரி தன் பள்ளி தோழர்களிடம் பிரபலமானவர். இதனிடையே பள்ளியில் சேரும் சபரி (பிரவின் கிஷோர்) ஒரு நல்ல செஸ் வீரர் மட்டுமல்ல படிப்பிலும், ஒவியம் வரைவதிலும் கெட்டிக்;காரர். சபரியின் திறமையை கண்டு வியக்கும் பாரி அவனிடம் சேட்டை செய்து வம்பு இழுத்துக் கொண்டே இருக்க, சபரியோ இவற்றை கண்டு கொள்ளாமல் தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருக்கிறார். சிறு வயதிலிருந்தே பாரிக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வது, வளர்ந்த பிறகு ராயல் என்பீல்டில் இமயமலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறார். இதனிடையே குறும்பை விட்டு விட்டு சபரியை நண்பனாக ஏற்றுக் கொள்ள பாரி நினைக்கும் நேரத்தில் பள்ளியில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். அப்பொழுது பள்ளி பேருந்து விபத்துள்ளாகிறது. அந்த விபத்தில் சபரி உட்பட அனைவரையும் காப்பாற்றி பாரி தப்பிக்கும் போது அடிபட்டு சுயநினைவு இழந்து கோமா நிலையில் இறந்து விடுகிறார். இதனால் மனமுடையும் சபரி பாரியின் நினைவுகளில் வாழ்கிறார். தன்னுடைய திறமையை மறந்து பாரியைப்போல் ஆடை அணிவது, பழக்கவழக்கங்களை மாற்றி விளையாட்டில் ஈடுபட பார்க்கிறார், ஆனால் அவரால் விளையாட்டில் ஜெயிக்க முடியாமல் திணறுகிறார். இதற்கிடையில், அதே பள்ளியில் புதிதாக ஒரு பெண் பிரவீணா (எஸ்தர் அனில்) சேருகிறார். இறந்த பாரியின் இதய உறுப்பு தானம் பெற்றவர் பிரவீணா என்பது தெரியாத வண்ணம் பாரியின் பள்ளியில் படிக்க ஆசைப்பட்டு சேர்கிறார். பாரியைப் பற்றி அவனது நண்பர்களிடமிருந்து தெரிந்து கொள்கிறார். சபரியின் நடவடிக்கையை கவனிக்கும் பிரவீணா, பாரியின் சாயலை உணர்கிறார். எதற்காக சபரி பாரியாக மாறத் துடிக்கிறார் என்பதை பிரவீணா அறியும் முன்பே பள்ளியை விட்டு சென்று விடுகிறார் சபரி. பல வருட தேடலில் இன்ஸ்டாகிராமில் கண்டுபிடித்து அவரைப் பின்தொடர்ந்து இமயமலைக்கு சபரி செல்வதை அறிந்து பிரவீணாவும் அதே பாதையில் செல்கிறார், மேலும்; இமயமலை வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் சபரியை கண்டுபிடித்து மெதுவாக நட்புடன் பழகுகிறார். சபரியின் பழைய திறமையை மீட்டெடுக்கவும், பாரியின் நினைவிலிருந்து விலகவும் முயற்சிகள் மேற்கொள்கிறார்.பயணத்தின் மூலம் இருவரும் மெல்ல மெல்ல அறிமுகமாகின்றனர்.அதன் பின் என்ன நடந்தது? பாரியுடன் தனக்குள்ள தொடர்பை பிரவீணா சபரியிடம் வெளிப்படுத்தினாரா? இவர்கள் நட்பு இதனால் பாதிக்கப்பட்டதா? இல்லையா? என்பதே இனிமையான நினைவுகளின் பயணமாக கதையின் முடிவு.

சபரி கார்த்திகேயனாக பிரவீன் கிஷோர், பாரி முகிலனாக கௌரவ் காளை,பிரவீணாவாக எஸ்தர் அனில் ஆகிய மூவரும் தான் படத்தின் உயிர்நாடி. கௌரவ்காளைக்கு பள்ளி டீன்ஏஜ் பருவத்தில் மட்டுமே பங்களிப்பு என்றாலும் இவரைச் சுற்றியே மற்ற இருவரின் பாத்திரப்படைப்புகள் இருப்பதால் முக்கியத்துவத்துடன் கதையின் நகர்விற்கு வழி வகுக்கிறார். விளையாட்டு வீரராக எப்பொழுதுமே சுறுசுறுப்புடனும், குறும்புத்தனத்துடன் தன் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பள்ளி மாணவனாக கௌரவ் காளையின் நடிப்பு கச்சிதம்.

சபரியாக பிரவீன் கிஷோர் அமைதி, பொறுமை, தெளிவான எண்ணங்கள் என்று இருந்தாலும், பாரியை பகைத்துக் கொள்ளாமல் கடந்து போகும் குணத்தாலும், பாரியின் சேட்டைகள், உதவும் குணங்களை ரசிக்கும் நண்பனாக இருப்பதும், தன்னை காப்பாற்றி பாரி உயிர் விட நேர்ந்ததை நேரில் பார்த்த பிறகு பாரியின் மேல் ஏற்படும் ஈர்ப்பும், பாரியைப் போல மாற முயற்சிக்கும் போதும், குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பது என்று தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சிறப்பாக செய்துள்ளார்.

எஸ்தர் அனில் பள்ளி மாணவியாக தன் உயிரை காப்பாற்றிய பாரிக்கு நன்றி கடனாக அவரின் நினைவுகளில் வாழ நினைக்கும் போதும், சபரியின் எண்ணத்தை புரிந்து கொண்டு, அவருக்கு உதவி செய்ய தோழியாக எடுக்கும் முயற்சிகள், கடினமான இமயமலை பயணத்தை இரு சக்கர வாகனத்தில் செல்லும் திறனுடன் திறமையாலும், நடிப்பாலும் கை தட்டல் பெறுகிறார்.

இரு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் பின்னணியை தன் இசைக்கோர்வையால் வேறுபடுத்தி காட்டி, பாடல்களிலும், பின்னணி இசையிலும் அமைதியான, இனிமையான பயணத்தை மெய் மறக்கச் செய்து ரசிக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான்.

ஊட்டி மற்றும் இமயமலை ஆகிய இடங்களின் வேற்றுமையை தன் காட்சிக்கோணங்களால் அழகான ஒவியமாக ஒளிரச் செய்து பிரமிக்க வைத்து கண்களுக்கு விருந்தாக படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. இமயமலை பயணத்தில் பல இடங்களையும், இரு சக்கர வாகன பயணத்தையும் கேமிரா கோணங்களை அமைத்து எடுக்க எத்தனை சிரமங்கள் அனுபவித்து, இதனை சாத்தியப்படுத்தியுள்ளார் என்பதை படத்தை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது. இவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இந்த மின்மினி பல விருதுகள் காத்திருக்கிறது.

கலை இயக்குனர் – செரிங் குர்மெட் குங்கியம், எடிட்டர் – ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா ஆகியோரின் கச்சிதமான பணி அளப்பரியது.

முதல் பாதி 2015ல் பள்ளி பருவ காலகட்டத்தையும்,இரண்டாம் பாதியை ஏழு ஆண்டுகள் காத்திருந்து அவர்களை வைத்தே எடுத்திருக்கும் திரைக்கதை ஒரு ஃபீல் குட் மூவியாக, டீன் ஏஜ் கடந்த கால நினைவுகளில் தடம் பதித்து, நிகழ்காலத்தில் அவர்கள் சந்தித்து கொள்ளும் போது முன்பின் தெரியாத நபர்களாக பழகி நட்பை வளர்த்துக் கொள்வதில் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை வேறுபட்டாலும் எண்ணங்களில் நண்பனின் உதவியை மறக்காமல் பயணிக்கும் இருவரின் நட்பின் புனிதத்தை சிறப்பாக கையாண்டு வெற்றி வாகை சூடியிருக்கிறார் ஹலிதா ஷமீம். ஓவ்வொரு காட்சியையும் செதுக்கி, நினைத்ததை சரியாக எடுத்து இமயமலை உச்சியில் ஆக்சிஷன் அளவு குறைவாக இருந்தாலும் சிரமம் பார்க்காமல் அத்தனை காட்சிகளையும் உயிரோட்டமாக இருக்க பார்த்து பார்த்து அர்ப்பணிப்போடு கடின முயற்சிகள் செய்து பிரம்மாண்டமான படைப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஹலிதா ஷமீம்.  பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷ_ புரொடக்ஷன்ஸ், ஆன்கர் பே ஸ்டுடியோஸ் சார்பில் மனோஜ் பரமஹம்சா ஐஎஸ்சி, ஆர்.முரளி கிருஷ்ணன் தயாரித்திருக்கும் மின்மினி நண்பனின் நினைவுகளில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க நினைக்கும் இருவரின் இளமை துள்ளும் சாகச பயணத்தின் விஷுவல் ட்ரீட்.