மாடன் கொடை விழா சினிமா விமர்சனம்: மாடன் கொடை விழா புதுமுகங்களின் நேர்த்தியான நடிப்பில் கிராமப்புற மரபுகளை அரவணைத்து திருப்பங்கள் நிறைந்த கலங்கடிக்கும் உச்சகட்ட ஆர்ப்பாட்ட தெய்வ திருவிழா | ரேட்டிங்: 3.5/5
தெய்வா புரொடக்சன் சார்பில் கேப்டன் சிவபிரகாசம் உதயசூரியன் தயாரித்திருக்கும் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கிருக்கிறார் இரா. தங்கபாண்டி.தமிழகமெங்கும் திரையரங்குகளில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
இதில் கோகுல் கவுதம், ஷர்மிஷா, டாக்டர் சூர்ய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம்,ஸ்ரீபிரியா, பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – சின்ராஜ் ராம், இசை :-விபின். ஆர். வசனம் :- நெய்வேலி பாரதி குமார், எடிட்டர் :-ரவிசந்திரன். ஆர், ஸ்டண்ட் :- மாஸ் மோகன், டான்ஸ் :- ராக் சங்கர், தயாரிப்பு நிர்வாகம் :-குட்டி கிருஷ்ணன், தயாரிப்புமேற்பார்வை :- சீனு, மக்கள் தொடர்பு :-விஜயமுரளி
நெல்லையில் உள்ள கிராமத்தில் காலம் காலமாக சுடலைமாடன் கோவிலில் கோடைவிழா நடைபெறும். வருடாவருடம் திருவிழா கலை கட்டும் ஒரு நாள் அத்தகைய கோடை விழாவில் நடனமாடும் திருநங்கையான மாதவி, கொலை செய்யப்பட்டு கிணற்றில் பிணமாக கிடக்கிறார். அன்றிலிருந்து அந்த கிராமத்தில் கோடை விழா தடங்கல் ஏற்பட்டு நடைபெறாமல் போவதிலிருந்து கதைக்களம் தொடங்குகிறது. ஏழு வருடங்களுக்கு பிறகு சென்னை திருவொற்றியூரில் வேலை செய்யும் முருகன் (கோகுல் கவுதம்) பாட்டி உடல் நலமின்றி இருப்பதை கேள்விப்பட்டு நெல்லையில் உள்ள சொந்த கிராமத்திற்கு பயணிக்கிறார். அங்கே தன் தந்தை தாமஸ் என்ற பெயரில் மதம் மாறியிருக்க, அவருடைய நிலத்தை ஏழு வருடங்களுக்கு முன் ஊர் செல்வந்தர் ஞானமுத்துவிடம் (டாக்டர் சூர்ய நாராயணன்) மருத்துவ செலவிற்கு அடகு வைத்து இரண்டு லட்சத்திற்கு கடன் வாங்கியிருக்க நிலத்தை மீட்க முடியாமல் தந்தை இருப்பதை கேள்விப்படுகிறார். அந்த நிலத்தில் தான் சுடலை மாடன் சாமியின் கோவில் இருப்பதால் திருவிழா நடத்த முடியாமல் தள்ளி போகிறது என்பதையறிந்து முருகன், அந்த நிலத்தை மீட்டு திருவிழா நடத்த முடிவு செய்து ஞானமுத்துவை பார்க்க தன் சித்தப்பாவுடன் செல்கிறார். ஆனால் ஞானமுத்து முருகனிடம் முப்பது லட்சம் கொடுத்தால் தான் நிலத்தை கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்து மிரட்டி அனுப்பிவிடுகிறார். ஊர் பெரியவர்களை அழைத்து பஞ்சாயத்து செய்தும் பணிந்து வராத ஞானமுத்துவிடம் வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த வாக்குவாதம் சண்டையாக மாறி ஞானமுத்துவின் வலது கரமாக விளங்கும் நபர் கொல்லப்படுகிறார். அந்த கொலை முருகன் மீது விழ, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இறுதியில் பெயிலில் வரும் முருகனுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் என்ன? முருகனால் நிலத்தை மீட்க முடிந்ததா? கோடை திருவிழா நடந்ததா? திருநங்கையை கொன்றது யார் என்று கண்டுபிடித்தார்களா? கோடை திருவிழாவில் அவர்களை திருநங்கை மாதவி தெய்வமாக வந்து என்ன செய்தாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கோகுல் கவுதம் முருகன் என்ற கதாபாத்திரத்தில் யதார்த்தமான கிராமத்து இளைஞனாக மனம் கவர்கிறார். தந்தையின் போக்கு, நிலத்தை மீட்க எடுக்கும் முயற்சி, கொலை வழி , தீர்த்து கட்ட துரத்தும் ஆட்கள், இதற்கிடையே காதல், கோவில் திருவிழா என்று அனைத்து காட்சிகளிலும் குறிப்பாக இறுதிக் காட்சியில் வெகுண்டெழுந்து தெய்வஅருளுடன் நடனமாடும் இடங்களில் மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.
காதலி அமுதாவாக ஷர்மிஷா துறுதுறு பார்வை, வெடுக்கென்று பேச்சு, நறுக்கென்று பதில், காதலனுக்காக காத்திருப்பது, திருமணத்திற்காக கிடாவை பலி கொடுக்க வளர்ப்பது என்று தன்னுடைய பங்களிப்பை கவனிக்கும் வகையில் கொடுத்திருப்பது சிறப்பு.
வில்லனாக டாக்டர் சூர்ய நாராயணன் பேச்சும் தோரணையுடன் மிடுக்காக நடித்திருந்தாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தடுமாறியிருக்கிறார்.
தந்தையாக சூப்பர் குட் சுப்ரமணியம், தாயாக ஸ்ரீபிரியா, மாற்றுத் திறனாளியாக சாய்ந்து சாய்ந்து நடக்கும் பால்ராஜ் வெள்ளேந்தி மனிதராக தெரிபவருக்கு பின்னால் இருக்கும் ஃபிளாஷ்பேக் காட்சிகள், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா என்று புதுமுகங்கள் என்பதை மறக்கடிக்கும் விதமாக தேர்ந்த நடிகர்கள் போல் அனைவரின் நடிப்பு படத்திற்கு உயிர் நாடி.
இதில் குறிப்பாக மாதவியாக வரும் திருநங்கையின் நடிப்பும், பேச்சும், நடை, உடை, பாவனை நடனம், இறுதிக் காட்சியில் நடனமாடி சாந்தப்படுத்தும் விதம் அத்தனையும் படத்திற்கு கூடுதல் பலம்.
விபின் கிராமத்து விழாவை மையப்படுத்தி கொடுத்திருக்கும் இசை மற்றும் பாடல்கள் ஒரு முக்கிய சிறப்பம்சமாக நிற்கிறது, படத்தின் பதட்டமான மற்றும் வேகமான சூழலை திறம்பட மேம்படுத்துகிறது. பின்னணி ஸ்கோர் தடையின்றி படத்தின் ஒட்டுமொத்த உணர்வை மேலும் கூட்டுகிறது.
சின்ராஜ் ராம் மண் மணம் மாறாமல் கிராமத்து வாழ்வியலையும், திருவிழா நடந்த எடுக்கும் போராட்டங்களையும் படத்தை வேறுபடுத்தும் நல்ல தரமான காட்சிகளை படம்பிடித்து கொடுத்திருக்கும் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது.
ரவிசந்திரன் படத்தொகுப்பு படத்தின் காட்சிகளை மேலும் மெருகேற்றியுள்ளது.
படத்தின் வலிமை மற்றும் முக்கியம்சம் அதன் புதிய முகங்களின் அர்ப்பணிப்பும், வாழ்க்கையை சுவாசித்து, அவர்களின் போராட்டங்களையும் வெற்றிகளையும் பார்வையாளர்களுடன் ஆழமாக எதிரொலிக்க செய்திருப்பதில் பெரும் பெற்றி பெற்றிருக்கிறார் புதுமுக இயக்குனர் இரா. தங்கபாண்டி. கிராமத்தின் கலாச்சாரத்தில் ஆழ்ந்த மரியாதையையும் புரிதலையும் காட்டி சிக்கலான பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் திறம்பட சித்தரித்துள்ளது. பார்வையாளர்களை கிராமப்புற வாழ்க்கையில் மூழ்கடிக்கச் செய்யும் உச்சகட்ட க்ளைமேக்ஸ் விறுவிறுப்பாகவும், உணர்ச்சிகள் நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்தி மோதலுடன் அதிரடி திருப்பங்களுடன் உக்ரத்தை க்ளைமேக்சில் ஏற்படுத்தி அசத்தியுள்ளார் இயக்குனர் இரா.தங்கபாண்டி.
மொத்தத்தில் தெய்வா புரொடக்சன் சார்பில் கேப்டன் சிவபிரகாசம் உதயசூரியன் தயாரித்திருக்கும் மாடன் கொடை விழா புதுமுகங்களின் நேர்த்தியான நடிப்பில் கிராமப்புற மரபுகளை அரவணைத்து திருப்பங்கள் நிறைந்த கலங்கடிக்கும் உச்சகட்ட ஆர்ப்பாட்ட தெய்வ திருவிழா.