மழை பிடிக்காத மனிதன் சினிமா விமர்சனம் : மழை பிடிக்காத மனிதன் அனைவருக்கும் பிடிக்குமா என்பதே கேள்விக்குறி | ரேட்டிங்: 2/5
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் சார்பில் கமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, லலிதா தனஞ்சயன், பி.பிரதீப், விக்ரம் குமார் எஸ்.தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் வந்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’.
இதில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், ஏ.எல்.அழகப்பன், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தனஞ்செயா, சுரேந்தர் தாக்கூர், தலைவாசல் விஜய், இயக்குனர் ரமணா, ப்ருத்வி அம்பர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை : விஜய் ஆண்டனி, ராய், எடிட்டிங் : பிரவீன் கே.எல்., ஆக்ஷன் : சுப்ரீம் சிவா, மகேஷ் மாத்யூ, கெவின் குமார் ,ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் : விஜய் மில்டன், மக்கள் தொடர்பு : டிஒன் சுரேஷ்சந்திரா, அப்துல் நாசர்.
விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தின் இறுதிக் காட்சியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சர் ஏ.எல்.அழகப்பன் மகனை சலீம் (விஜய் ஆண்டனி) கொலை செய்துவிட்டு தப்பித்து விடுவார். அதன் பின் தலைமறைவாகி உயர் அதிகாரியான சரத்குமாரின் கீழ் சீக்ரெட் ஏஜெண்ட்டாக நிழல் உலகில் வலம் வரும் விஜய் ஆண்டனி காதலி தியாவை திருமணம் செய்து கொள்கிறார். மழை நாளில் தம்பதிகள் ஒரு நாள் வெளியே மகிழ்ச்சியாக செல்லும் போது அமைச்சர் ஏ.எல்.அழகப்பன் ஆட்களின் தாக்குதலில் மனைவி உயிரிழக்கிறார். அமைச்சரிடமிருந்து காப்பாற்ற விஜய் ஆண்டனியும் இறந்து விட்டதாக பொய் சொல்லி அவரை காப்பாற்றி அந்தமானில் விட்டுச் செல்கிறார் சரத்குமார். அதோடு தன்னுடைய மனைவி இறந்தபோது மழை பெய்துகொண்டு இருந்ததால் விஜய் ஆண்டனி மழையை வெறுத்து ‘மழை பிடிக்காத மனிதனாகி’ விடுகிறார் என்ற ஒவிய வரைபட விளங்கங்களுடன் கதை ஆரம்பமாகிறது. அந்தமானில் அடையாளமில்லாமல் வாழப் பழகும் சலீமிற்கு,சௌமியா (மேகா ஆகாஷ்) வளர்க்கும் நாய்குட்டியும், பர்மா (ப்ருத்வி அம்பார்) நட்பும் கிடைக்கிறது. பர்மா உணவகம் நடத்தும் சரண்யா பொன்வண்ணனின் மகனாக, கிடைத்த வேலையை செய்து கொண்டு ஜாலியாக திரிபவன். இந்நிலையில், சலீமிற்கும், பர்மாவுக்கும் அந்நகர தாதாவான வட்டிக்கு கடன் கொடுக்கும் டாலியாலும் (தனஞ்செயா), காவல்துறை அதிகாரியான சுர்லாவாலும் (முரளி சர்மா) பிரச்னை ஆரம்பிக்கிறது. அவர்களை சலீம் எப்படி சமாளித்தார்? தன் அடையாளத்தை மறைத்து அவர்களை எதிர்க்க சலீம் என்ன போராட்டங்களை சந்தித்தார்? டாலியின் பிடியிலிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களை எப்படி காப்பாற்றினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
அமைதியின் உருவாக வெறித்த பார்வை, தாடி, கம்பளி தொப்பியுடன் விரக்தியில் சிக்கி தவிக்கும் சலீமாக விஜய் ஆண்டனி, ஆக்ஷனையும் சேர்த்து கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
உயர் அதிகாரியாக சலீமை காப்பாற்றுவதே முழு வேலையாக இருக்கும் சரத்குமார், ஒரு சில காட்சிகளில் சிறப்பு தோற்றமாக சத்யராஜ், தன்னால் முடிந்த வரை மிரட்டல் விடுக்கும் அமைச்சராக ஏ.எல்.அழகப்பன், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, வில்லனாக தனஞ்செயா, சுரேந்தர் தாக்கூர், தலைவாசல் விஜய், இயக்குனர் ரமணா, துருதுரு துள்ளல் நடிப்பில் ப்ருத்வி அம்பர் ஆகியோர் திறம்பட செய்துள்ளனர்.
இசை : விஜய் ஆண்டனி, ராய், எடிட்டிங் : பிரவீன் கே.எல்., ஆக்ஷன் : சுப்ரீம் சிவா, மகேஷ் மாத்யூ, கெவின் குமார் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு தேவையானவற்றை வழங்கியுள்ளனர்.
புதிய இடத்தில் அடையாளம் இல்லாமல் வாழும் சீக்ரெட் எஜெண்ட்டிற்கு வரும் சிக்கல்களையும், அவரை எதிர்க்கும் வில்லன்களையும் எதிர்த்து மீண்டும் அங்கிருந்து எப்படி தப்பித்துச் செல்கிறார் என்று சுவாரஸ்யமில்லாத கதையை ஆக்ஷன் கலந்து தோய்வோடு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் விஜய் மில்டன்.
மொத்தத்தில் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் சார்பில் கமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, லலிதா தனஞ்சயன், பி.பிரதீப், விக்ரம் குமார் எஸ்.தயாரிப்பில் மழை பிடிக்காத மனிதன் அனைவருக்கும் பிடிக்குமா என்பதே கேள்விக்குறி.