பேச்சி சினிமா விமர்சனம் : பேச்சி மிரள வைக்கும் ஆர்ப்பாட்டமான பயமுறுத்தலின் சிலிர்க்க வைக்கும் சூழ்ச்சி | ரேட்டிங்: 3/5
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’.
இதில் பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, முரளி, சீனியம்மாள் (பேச்சி பட்டி), மகேஸ்வரன் கே, நாட்டுராஜா, சாந்திமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை : ராஜேஷ் முருகேசன், ஒளிப்பதிவு : பார்த்திபன், படத்தொகுப்பு : இக்னேசியஸ் அஸ்வின், கலை இயக்குனர் : குமார் கங்கப்பன், ஆடை வடிவமைப்பாளர் – ப்ரீத்தி நெடுமாறன், இணை தயாரிப்பு : விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர்,மக்கள் தொடர்பு : சுரேஷ், தர்மா
கொள்ளிமலையில் அரண்மனை காடு என்கிற அடர்ந்த மலை காட்டில் ஐந்து இளம் மலையேற்ற நண்பர்களான மீனா (காயத்ரி சங்கர்), சரண் (தேவ்), சாரு (ப்ரீத்தி), ஜெர்ரி (மகேஸ்வரன்), மற்றும் சேது (ஜனா) வார இறுதி சுற்றுலாவுக்கு காரில் செல்கின்றனர். அவர்களை ட்ரெக்கிங் அழைத்துச் செல்ல, உள்@ர் வன ஊழியர் மாரி (பால சரவணன்) செல்கிறார். அடர்ந்த காட்டுக்குள் செல்லும் வழிபாதையில் காரை நிறுத்தி விட்டு ஆறு பேரும் மலை ஏறுகின்றனர். பாதி வழி சென்றவுடன் தடை செய்யப்பட்ட பகுதி என்ற எச்சரிக்கை பலகையும், அந்த பாதைக்கு செல்லாமல் இருக்க மரகட்டைகளை தடுப்பாகவும் வைத்து இருப்பதை பார்க்கின்றனர்.எச்சரிக்கை பதாகைகளை தாண்டி செல்ல ஐந்து நண்பர்களும் முற்படும் போது வன ஊழியர் எச்சரித்து தடுக்கிறார். இதனால் நண்பர்கள் குழுவிற்கும் மாரிக்கும் இடையே பதற்றம், மோதல் ஏற்பட்டாலும் எச்சரிக்கையை மீறி, சாருவும் சேதுவும் தடைப்பட்ட பகுதிக்குள் சென்று ஒரு பழைய வீட்டை காண்கிறார்கள். அவர்கள் அந்த வீட்டை ஆராயும் போது, ஒரு வயதான பெண்ணின் பில்லி சூனியம் பொம்மையைக் கண்டு அதை எடுக்கின்றனர். இதனால் சூனியக்கார கிழவியான பேச்சி (சீனியம்மாள்) வெளியே வருகிறாள். அவர்களை பின் தொடர்ந்து வந்து பயமுறுத்தி உயிர் பலி எடுக்க முயற்சிக்கிறாள். யார் இந்த பேச்சி? ஏன் இவ்வளவு வருடம் அடைப்பட்டு கிடந்தாள்? பேச்சியிடம் சிக்கும் ஐந்து நண்பர்கள் மற்றும் மாரி தப்பி பிழைத்தார்களா? எதற்காக இவர்களை துரத்துகிறாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
வன ஊழியர்; மாரியாக பால சரவணன் காடுகளில் நடக்கும் சம்பவங்களை நன்கு அறிந்தவராக, எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நிர்ணயித்து நண்பர்களை கூட்டி சென்றாலும், அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தவிக்கும் இடங்களிலும், தன் மகள் கொடுத்த தாயத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு உயிர் தப்பிப்பதும், இறுதியில் அவரின் பரிதாப முடிவு மனதை நெருடுகிறது. மிகையில்லா நடிப்பு, வசன உச்சரிப்பு என்று இயல்பாக நடித்து கை தட்டல் பெறுகிறார்.
காயத்ரி சங்கர் தன் காதலனோடு மலையேற வந்து, பின்னர் காணாமல் போன நண்பர்களை தேடி அலைந்து பரிதவிப்பதும், மாரியிடம் வம்பு செய்து உடன் செல்ல மறுப்பதும் என்று அப்பாவி மீனாவாக கதையில் பயணிக்க, இறுதிக்காட்சியில் நடக்கும் திருப்பங்கள் மீனாவின் நம்ப முடியாத மறுபக்கத்தை காட்டும் போது படத்திற்கு புதிய திருப்பத்தை கொடுத்து விடுகிறார்.
இவர்களுடன் தேவ், ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, முரளி, மகேஸ்வரன் கே, நாட்டுராஜா, சாந்திமணி என்று அனைவரும் தந்திருக்கும் பங்களிப்பு பேய் படத்திற்கான பயத்தை துரத்தலுடன் நிஜத்தில் காட்டி மிரள வைத்துவிடுகிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் சீனியம்மாள் பேச்சி பாட்டியாக அவரின் ப்ளாஷ்பேக் காட்சிகள், அதன் பின் வெளியே வந்து மிரட்டும் காட்சிகள் என்று நேர்த்தியாக செய்துள்ளார்.
இருட்டில் பயமுறுத்துவதையே காலம்காலமாக பார்த்து வந்த நாம் வித்தியாசமாக மலைப்பிரதேசத்தில் பகலில் நடக்கும் சம்பவங்கள் அதுவும் அடர்ந்த காட்டில் நிசப்தமான சூழ்நிலையில் மிரட்டலான ராஜேஷ் முருகேசன் இசை, இயற்கையின் பிரம்மாண்ட அசத்தலான சில இடங்களில் லாங் ஷாட்டில் பார்த்திபன் ஒளிப்பதிவு, அசாத்திய உழைப்பில் குமார் கங்கப்பன் கலைத்திறன், அழுத்தமான இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு, ஒவ்வொரு காட்சிகளிலும் ஏற்படும் ஒலியை துல்லியமாக பிரதிபலித்துமாக, இயற்கை காட்சிகளின் எழில் அழகோடு எண்ணற்ற தொழில்நுட்ப கலைஞர்;களின் கடின அர்ப்பணிப்புடன் உலக தரத்தில் நம் கண் முன்னே காட்சிப்படுத்தி அசத்தியுள்ளனர். பாராட்டுக்கள்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளராக களமிறங்கி முதல் படத்திலேயே தரமான வெற்றியை கொடுத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.
ஆறு பேரின் சாகச பயணத்தில் திகிலூட்டும் அமானுஷ்ய சக்தியுடன் போராடி ஜெயித்தார்களா என்பதையே கதைக்களமாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ராமச்சந்திரன்.பி. இந்தப் பின்னணியில் காமெடி கலந்த பல படங்கள் வந்து வெற்றி வாகை சூடியிருக்கிறது, சில படங்கள் சீரியஸாக வந்து எடுபடாமல் போயிருக்கிறது. பேச்சி ஒரு மைல்கல்லாக படம் முழுவதும் ஒரு வித பயமுறுத்தல், மிரட்டல் கலந்து ஆபாச நெடியில்லாமல், வித்தியாசமான அணுகுமுறையுடன் அசத்தலாக காட்சிகளுடன் இரண்டு மணி நேர படத்தை விறுவிறுப்பாக கொடுத்து வெற்றி வாகை சூடியிருக்கிறார் இயக்குனர் ராமச்சந்திரன்.பி. இறுதியில் பதிமூன்று பேரை பலி கொடுக்க நினைக்கும் பேச்சி ஆறு பேரை கொன்றவுடன் மீதி ஏழு பேருக்காக காத்திருக்கிறாள் என்று இரண்டாம் பாகத்திற்கான லீடுடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி முடித்திருக்கிறார்கள்.வெல்டன்.
மொத்தத்தில் வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில் பேச்சி மிரள வைக்கும் ஆர்ப்பாட்டமான பயமுறுத்தலின் சிலிர்க்க வைக்கும் சூழ்ச்சி.