பெருசு சினிமா விமர்சனம் : பெருசு இறப்பில் ஏற்படுத்தும் தர்மசங்கடமான சலசலப்பின் சபலத்தின் உச்சம் | ரேட்டிங்: 3.5/5
டோன் பெஞ்ச் பிலிம்ஸ், எம்பர்லைட் ஸ்டுடியோஸ் சார்பில் கார்த்திகேயன்.எஸ், ஹர்மன் பவேஜா, தயாரித்திருக்கும் பெருசு படத்தை இயக்கியிருக்கிறார் இளங்கோ ராம்.
இதில் வைபவ் – துரைக்கண்ணு, சுனில் – சாமிகண்ணு, நிஹாரிகா – சாந்தி, சாந்தினி – ராணி, ரமா – எதிர் வீட்டுப்பெண், கார்த்திகேயன் – சாமியார், பால சரவணன் – அமீன், முனிஷ்காந்த் – சிங்காரம் சித்தப்பா, ரெடின் கிங்ஸ்லி – ஆட்டோ டிரைவர், விடிவி கணேஷ் – மருத்துவர், கருணாகரன்- ஃப்ரீசர் கடை உரிமையாளர், சுவாமிநாதன் – பழைய நண்பர், தனம் – அம்மா, தீபா – சுந்தரி, கஜராஜ் – விஏஓ, அலெக்சிஸ் – ஹலாஸ்யம், சுபத்ரா ராபர்ட் – வனிதாமணி, டீனேஜ் பையன் – ஜீவா பாலச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – சத்யா திலகம், படத்தொகுப்பு – சூரிய குமரகுரு, இசை – அருண் ராஜ், பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா, அப்துல்.ஏ.நாசர்தஞ்சாவூரில் உள்ள ஒரத்தநாடு கிராமத்தில் பெருசு (எ) ஹாலஸ்யம் (அலெக்சிஸ்) மனைவி, மகன்கள் சாமிகண்ணு (சுனில்) துரைக்கண்ணு (வைபவ்), சாமிகண்ணுவின் மனைவி ராணி (சாந்தினி) குழந்தைகள் என்று கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். பெருசு எப்போதும் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, அரட்டை அடிப்பது, சபல புத்தியுடன் சில்மிஷ வேலைகள் செய்வது என்று வெளியே தெரியாத முகத்தோடு பெரிய மனிதராக வலம் வருகிறார். ஒரு நாள் கிராமத்து பெண்கள் குளிப்பதை ரகசியமாகப் பார்த்ததற்காக ஒரு டீனேஜ் பையன் (ஜீவா பாலச்சந்திரன்) கன்னத்தில் அறைய அந்தப் பையன் ஆத்திரத்தில் தன் தந்தையிடம் சொல்ல, அந்த பஞ்சாயத்தை முடித்து வைத்து மகன் சாமிகண்ணு வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது சேரில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே பெருசு இறந்து விடுகிறார். தந்தையின் இறப்பை கேட்டு அதிர்ச்சியாகும் சாமிகண்ணு, தம்பி துரைக்கண்ணு, தாய் தனம், சித்தி ராணி(தீபா சங்கர்) மற்றும் குடும்பத்தார் அனைவரும் பெருசுவை தூக்கி படுக்க வைக்கின்றனர். அப்பொழுது தான் தந்தையிடம் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து அதிர்ந்து வெளியே சொன்னால் குடும்ப மானம் போய்விடும் என்று கருதி என்ன செய்வதென்று யோசிக்கின்றனர். இந்நிலையில் மருத்துவர், ஆட்டோ டிரைவர், சாமியார், நண்பர்கள் என்று தகவல்கள் பரவி அனைவரும் இறதி சடங்கில் கலந்து கொள்ள வீட்டிற்கு வருகின்றனர். அதன் பின் என்ன நடந்தது? குடும்பத்தினரால் பெருசுவை அடக்கம் செய்ய முடிந்ததா? பெருசுவின் லீலைகள் ஒவ்வொன்றும் தெரிய வரும் போது என்ன ஆனது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
பள்ளி தளாளரர் சாமிகண்ணுவாக சுனில், அண்ணன் என்ற முறையில் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதும், சிக்கலான தருணங்களில் சமாளித்து மேற்கொண்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது, குடிகார தம்பியை சமாளிப்பது, தந்தையிடம் பேசாமல் இருந்ததற்காக வருந்துப்பட்டு நெகிழ்வது, உறவினர்களை சமாதானப்படுத்தி, இறுதியில் தந்தையின் இறுதி சடங்கை முடித்து விட்டு நிம்மதி அடைவது என்று அழுத்தமான, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு படத்திற்கு பலம்.
அழுத்தமில்லாத துரைக்கண்ணு தம்பியாக வைபவ்வுடன் சேர்ந்து அம்மாவாக தனம், சித்தியாக தீபா சங்கர், பால சரவணன், முனிஷ்காந்த் ஆகியோரின் பன்பட்ட நடிப்பு படத்தின் சீரியஸான காட்சிகளுக்கும், நகைச்சுவை ததும்ப கவுண்டர் கொடுத்து படத்திற்கு விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றனர்.
படம் முழுவதும் பெருசு சடலமாக அலெக்சிஸ், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன்;, ரமா, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், கருணாகரன், சுவாமிநாதன், கஜராஜ், சுபத்ரா ராபர்ட், ஜீவா பாலச்சந்திரன், இறுதிச் சடங்கின் போது கலந்து கொள்ளும் பாட்டிகள் மற்றும் கிராமத்து முகங்கள் என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் காட்சிகள் முழுவதும் வந்து கொண்டு படத்திற்க்கு உயிர் கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சத்ய திலக், எடிட்டர் சூரிய குமரகுரு,அருண்ராஜின் பின்னணி இசை அடல்ட் காமெடி கதைக்கு ஏற்றவாறு முழு பங்களிப்பை கொடுத்து ஒரே இடத்தில் நடக்கும் காட்சிகளை இயக்குனரின் எண்ணப்படி அசத்தலாக கொடுத்துள்ளனர்.
இலங்கையில் சிங்கள மொழியில் 2023ல் இளங்கோ ராம் இயக்கிய டென்டிகோவின் தமிழ் ரீமேக் தான் பெரிசு படம். இரு சகோதரர்கள் தர்மசங்கடம் ஏற்படும் வகையில் இறந்த தந்தையை கௌரவமாக வழி அனுப்ப நினைத்து எடுக்கும் முயற்சிகளில் கொஞ்சம் நகைச்சுவை கலந்து அடல்ட் டார்க் காமெடியாக திரைக்கதையமைத்து சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் இளங்கோ ராம்.
மொத்தத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், எம்பர்லைட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள பெருசு இறப்பில் ஏற்படுத்தும் தர்மசங்கடமான சலசலப்பின் சபலத்தின் உச்சம்.