பிளாக் சினிமா விமர்சனம் : பிளாக் வலிமையான  தொழில்நுட்பம், திறமையான நடிகர்களின் செயல்திறன், வலுவான திரைக்கதையுடன் விறுவிறுப்பு கலந்த சுவாரஸ்யமான அறிவியல் புனைகதை | ரேட்டிங்: 3/5

0
542

பிளாக் சினிமா விமர்சனம் : பிளாக் வலிமையான  தொழில்நுட்பம், திறமையான நடிகர்களின் செயல்திறன், வலுவான திரைக்கதையுடன் விறுவிறுப்பு கலந்த சுவாரஸ்யமான அறிவியல் புனைகதை | ரேட்டிங்: 3/5

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு, பி. கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் தயாரித்திருக்கும் பிளாக் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஜி.பாலசுப்ரமணி.

இதில் ஜீவா – வசந்த், பிரியா பவானி சங்கர் – ஆரண்யா, விவேக் பிரசன்னா – மனோகர், யோகி ஜேபி – சிவராஜ், ஷா ரா – சுரேஷ், ஸ்வயம் சித்தா – பிரபா, சிந்தூரி – லலிதா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – கோகுல் பினோய், படத்தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்குநர் – சதீஷ் குமார், சண்டைப் பயிற்சி – மெட்ரோ மகேஷ், நடனம் – ஷெரிஃப், பாடல்கள் – மதன் கார்க்கி, மக்கள் தொடர்பு – ஜான்சன்.

படத்தின் ஆரம்ப காட்சிகளில் சூப்பர் மூன் நாளில் விசித்திரமான நிகழ்வு நடக்கிறது. 1964ல் காரில் பயணம் செய்யும் காதல் ஜோடியை அவர்களது நண்பன் மனோகர் (விவேக் பிரசன்னா) தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். அவர்களை அவனுடைய வீட்டில் விட்டு விட்டு வெளியே வரும் போது துப்பாக்கி சுடும் ஒசை கேட்க திரும்பி வீட்டிற்கு வரும் மனோகர் அங்கே காதல் ஜோடி இறந்து கிடப்பதும், அவர்களை கொன்றது யார் என்ற கோணத்தில் காட்சிகள் முடிவடைகின்றன.  அதன் பிறகு இன்றைய காலகட்டத்தில் சூப்பர் மூன் நாளில் சென்னை புறநகரில் புதிதாக கட்டப்பட்ட தங்களுக்கு சொந்தமான கேடட் கம்யூனிட்டி வில்லாவில் வசந்த் (ஜீவா) மற்றும் ஆரண்யா (ப்ரியா பவானி) தம்பதிகள் ஒரு வாரம்; ஓய்வெடுக்க முடிவு செய்து செல்கின்றனர். அங்கே செல்லும் வழியிலேயே வசந்த் ஏதோ புரிந்து கொள்ள முடியாத நிகழ்வு நடக்க போகிறது என்பதை உணர்கிறார். அந்த வில்லா வீடுகளில் முதலில் ஆக்ரமிப்பு செய்வது ஜீவா மற்றும் ஆரண்யா ஜோடி என்பதால் ஆள் நடமாட்டமில்லாத வசிக்கும் இடமாக காட்சி தருகிறது. வீட்டினுள் சந்தோஷமாக நேரத்தை கடத்தும் ஜோடிகளுக்கு எதிர் வீட்டில் யாரோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த வீட்டை நோக்கி இருள் சூழ்ந்த இடத்தை கடந்து செல்லும் போது புரிந்து கொள்ள முடியாத நிகழ்வு மீண்டும் நடக்கிறது. இவர்களைப் போல் இருவர் அந்த வீட்டில் இருப்பதையும், அவர்கள் நடவடிக்கையும் இவர்களைப் போல் இருப்பதால் குழப்பத்தில் தங்கள் வீட்டிற்கு ஒடி வந்து விடுகின்றனர். உதவிக்கு யாரும் இல்லாததால், வசந்தும் ஆரண்யாவும் தவிக்கின்றனர். இந்நிலையில் இருட்டான பகுதிக்கு செல்லும் போது தான் காலத்தின் முன் பின் நடக்கும் சம்பவங்கள் நேரத்துடன் சம்பந்தப்படுத்தி மாறுவதை உணர்கின்றனர். அதன் பின் என்ன நடந்தது? அந்த வில்லாவிலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா? புரிந்து கொள்ள முடியாத நிகழ்வுகள் எதனால் நடக்கிறது? அது அமானுஷ்யமா அல்லது அதற்கு அறிவியல் மாற்றமா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

இந்த படத்தின் மூலம் வெற்றிகரமாக கம்பேக் கொடுத்திருக்கும் ஜீவா அவருடன் இணைந்து பிரியாபவானி சங்கர் இருவர் மட்டுமே படத்தின் முழுக் கதையும் ஒரு வீட்டின் எல்லைக்குள் ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரஸ்யமாக பெரும்பகுதியை தங்களது தேர்ந்த நடிப்பால் கொண்டு செல்கின்றனர். பலமுறை லூப் செய்யும் காட்சிகள் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் காட்சிகளை கருத்தில் கொண்டு முதல் முறை காட்டப்பட்டதை விட அதிகமான விவரிப்புகள் நிறைந்த காட்சிகளாக பின்னர் காட்டப்படும் போது இருவருக்குள்ளும் நடக்கும் சண்டை, சச்சரவு எதனால் என்பதை கேள்வியுடன் பதிலாக புரிந்து கொள்வது சுலபமாகிறது. இவர்களின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

மற்றும் விவேக் பிரசன்னா – மனோகர், யோகி ஜேபி – சிவராஜ், ஷா ரா – சுரேஷ், ஸ்வயம் சித்தா – பிரபா, சிந்தூரி – லலிதா ஆகியோரின் பங்களிப்பு குறைவு என்றாலும் படத்தின் காட்சிகளுக்கு முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளது.

சாம் சிஎஸ் இசையில் இரண்டு பாடல்களுடன், பின்னணியிலும் அதிரச் செய்துள்ளார்.

இரவில் சூப்பர் மூன் நாளில் ஒரே வில்லா வீட்டில் நடக்கும் சம்பவங்களையும், தொடர்ச்சியான வீடுகளின் கட்டமைப்பு, அமைதி, இருள் சூழ்ந்த இடம், அதை கடக்கும் போது ஏற்படும் நேர நிலைமாற்றத்தை தோய்வு ஏற்படுத்தாமல் பல்வேறு கோணங்களில் அழகாகவும், லாங் ஷாட் காட்சிகளில் ஆச்சர்யப்படுத்தும் வகையிலும் அயராத உழைப்பை கொடுத்து சிக்கலான கதையையும் இயக்குனரின் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்து அச்சு அசலாக காட்சிக்கோணங்களில் சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்து அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய். பாராட்டுக்கள்

அதே போல் காட்சிகளை விவரிப்பதில் எந்த ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் கோர்வையாக கொடுத்து தன் திறமையை நிரூபித்துள்ளார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.

இவர்களுடன் வம்பு செய்யும் இளைஞர்களை புரட்டி எடுக்கும் காட்சிகள், டபுள் ஆக்ஷன் சண்டைக் காட்சிகளை திறம்பட கொடுத்துள்ளார் சண்டை பயிற்சியாளர் மெட்ரோ மகேஷ்.

இரண்டு வித கால கட்டங்களின் பின்னணி, பழைய பங்களா, வெள்ளை நிறத்தில் இறக்கையுடன் கூடிய பிரம்மாண்ட சிலை, ரெட்ரோ கார், வில்லா வீடு, வினோதமான அழகியின் போட்டோ பிரேம் ஆகியவற்றில் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பங்கு அளப்பறியது.

2013ல் வெளியான ஹாலிவுட் படமான கோஹரன்ஸ் படத்தின் கதையில் ஒரு இரவு விருந்தில் எட்டு நண்பர்கள் கலந்து கொள்ளும் போது வால் நட்சத்திரத்தின் தீய சக்தி காரணமாக ஒரு அறையில் சிக்கலான நிகழ்வுகளை அனுபவிக்கின்றனர். இதை அடிப்படையாக வைத்து தமிழில் பிளாக் படத்தை புது லட்சிய முயற்சியோடு எடுத்துள்ளார் இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணி. ப்ளாஷ்பேக் காட்சிகள், இரண்டு பேர், ஆரவாரமற்ற வீடு என்று முதல் பாதி விறுவிறுப்பான வேகத்தில் நகர்ந்து, இரண்டாம் பாதியில் படத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் சூப்பர் மூனின் விளைவு மற்றும் அது எப்படி ஒரு பிட்ச்-பிளாக் ஃபோர்ஸ் ஃபீல்ட், அதற்குள் நம் கதாநாயகர்கள் சிக்கிக் கொள்வது சக்தி வாய்ந்த கருந்துளையை ஒளி கூட பிரதிபலிக்க முடியாமல் வௌ;வேறு கால நேரத்திற்கு ஒரு போர்ட்டலாக செயல்படுவது அதில் பேரலல் ரியாலிட்டி, குவாண்டம் பிசிக்ஸ், வொர்ம் ஹோல் பர்மூடா ட்ரையங்கள், ஷ்ரோடிங்கரின் பூனை சோதனை எனப் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படை கூறுகளை கதைக்குள் கொண்டு வந்து அவற்றிற்கான கேள்விகளையும், பதிலையும் கொடுத்து கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைத்து சாதுர்யமாகவும் வித்தியாசமாகவும் இயக்கியுள்ளார் கே.ஜி.பாலசுப்ரமணி. வெல்டன்.

மொத்தத்தில் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு, பி. கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் தயாரித்திருக்கும் பிளாக் வலிமையான  தொழில்நுட்பம், திறமையான நடிகர்களின் செயல்திறன்,  வலுவான திரைக்கதையுடன் விறுவிறுப்பு கலந்த சுவாரஸ்யமான அறிவியல் புனைகதை.