பாட்டில் ராதா சினிமா விமர்சனம் : பாட்டில் ராதா போதைக்கு அடிமை நீங்கினால் வாழ்க்கையில் பூத்துக் குலுங்கும் இனிமை | ரேட்டிங்: 3/5

0
343

பாட்டில் ராதா சினிமா விமர்சனம் : பாட்டில் ராதா போதைக்கு அடிமை நீங்கினால் வாழ்க்கையில் பூத்துக் குலுங்கும் இனிமை | ரேட்டிங்: 3/5

பலூன் பிக்சர்ஸ், நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித், டி.என்.அருண்பாலாஜி தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தினகரன் சிவலிங்கம்

இதில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன், மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, பரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ். கருணா பிரசாத், மாலதி அசோக் நவின், சுஹாசினி சஞ்சீவ், சிரஞ்சீவி, ஓவியர் சௌ. செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், அனீஷா, மாதவி ராஜ், கலா குமார், அன்பரசி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : ரூபேஷ் ஷாஜி, இசை : ஷான் ரோல்டன், கலை: ஏ. ராஜா​, சண்டை: பி சி ஸ்டண்ட்ஸ், நடன இயக்குனர்:சாண்டி, ஆடை வடிவமைப்பு : ஏகன் ஏகாம்பரம், ஒலிவடிவமைப்பு : சுரேன்ஜி, அழகியகூத்தன்.எஸ், ஒலிப்பதிவு: சுரேன்.ஜி, ஒப்பனை: தசரதன், லிபின் மோஹணன், பாடல்கள்: அறிவு, உமாதேவி, தனிக்கொடி, பாக்கியம் சங்கர், ரமேஷ் வைத்யா, படத்தொகுப்பு : இ.சங்கத்தமிழன், மக்கள் தொடர்பு – குணா

பாட்டில் ராதா என்று அழைக்கப்படும் ராதாமணி (குரு சோமசுந்தரம்) டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை செய்கிறார். தொழிலில் சீனியராக இருந்தாலும் குடிப்பழக்கத்தால் மதிப்பு கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார். வேலை முடித்தவுடன் பெரும்பாலும் குடியிலேயே நண்பர்களுடன் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கிறார். குடித்து விட்டு வீட்டிற்கு வருவதும் மனைவியை அடித்து துன்புறுத்துவது சந்தேகப்படுவது என்று அவர் தெருவில் போடும் சண்டையில் அனைவரும் வெறுப்பாக இருக்கின்றனர். அவரது காதல் மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்) மற்றும் இரண்டு குழந்தைகள் அவரது போதைப் பழக்கத்தால் கஷ்டப்படுகிறார்கள். அதனால் அவரது மனைவி அவருக்கு தெரியாமல் அசோகன் (ஜான் விஜய்) நடத்தும் ஸ்ரீபுத்தா போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார்.அங்கே இருக்கும் போதைக்கு அடிமையான சக மனிதர்களிடம் பழக முடியாமல் அங்கிருந்து வெளியே வர முயற்சி செய்கிறார். அதன்படி சில நண்பர்கள் துணையுடன் ராதா அங்கிருந்து ஜன்னல் வழியாக தப்பித்து வெளியே வருகின்றார். மீண்டும் பழையபடியே நண்பர்களுடன் சேர்ந்து ராதா குடிக்க ஆரம்பிக்க, குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. மனைவி அஞ்சலம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இறுதியில் ராதா குடியை விட்டாரா? மனைவியுடன் சேர்ந்தாரா? வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

பாட்டல் ராதா என்ற டைட்டில் ரோலில் பாட்டிலும் கையுமாக குரு சோமசுந்தரம் ரகளையிலும், அளப்பறையிலும் பண்ணும் கலாட்டா, காதல் மனைவியை சந்தேக புத்தியால் தகராறு செய்வது, பிள்ளைகளிடம் அன்பை கொட்டுவது, குடிகார நண்பனின் நச்சரிப்பை தாங்க முடியாமல் குடிக்க செல்வது, மறுவாழ்வு மையத்தில் அனைவரையும் பார்த்து பயந்தாலும் கெத்தாக குரல் கொடுப்பது, தப்பிக்க நினைத்து சைக்கோவிடம் மாட்டிக் கொள்வது, குடியால் மீண்டும் குடும்பத்தில் பாசத்தை இழப்பது, பின்னர் தவறை உணர்ந்து மனைவி ஏற்றுக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள், அசோகனின் அறிவுரைப்படி திருந்தி நல்ல மனிதராக புது வாழ்க்தையை தொடங்குவது என்று ஆரம்பம் முதல் கடைசி வரை குருவின் நடிப்பு நகைச்சுவை கலந்து குடி நோயாளியாக இன்னல்களை அனுபவித்து யதார்த்தத்தின் உண்மையை புரிய வைக்கும் விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இவரைப் பார்த்து பலர் திருந்தினால் இதுவே குருசோமசுந்திரத்தின் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி.

குடிபோதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கும் உரிமையாளராக ஜான் விஜய் மிகையில்லா நடிப்பும், நோயாளிகளை அன்புடன் திருத்தவும் அரவணைக்கவும் எடுக்கும் முயற்சிகள், அவருடைய ஃபிளாஷ்பேக் கதை என்று படத்திற்கு முக்கிய முதுகெலும்பாக விளங்கி சிறு தவறு நடந்தாலும் தப்பாக நினைக்கதோன்றும் இடத்தில் நல்ல மனிதராக இவரை காட்டியிருக்கும் விதமும், தன் வாழ்நாளை அர்ப்பணித்து மற்றவர்களுக்காக வாழும் சமூக ஆர்வலராக படத்தில் நச்சென்று பதிந்து விடுகிறார். மற்றும் படத்தின் கலகல காட்சிகளுக்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ஒல்லியான தேகம், அமைதியான பார்வை, பரிதாபத்தை வரவழைக்கும் காதல் மனைவியாக சஞ்சனா நடராஜன் குடிகார கணவனிடம் மாட்டிக் கொண்டு பரிதவிக்கும் இடத்திலும், கணவனை திருத்துவதற்காக எடுக்கும் முயற்சி, வாழ்க்கையே வெறுத்து போய் தற்கொலை செய்து கொள்ளும் நேரத்தில் எடுக்கும் முடிவு என்று ஏழ்மையிலும் தைரியமிக்க பெண்மணியாக அனைத்தும் தாங்கும் இரும்பு மனம் படைத்தவராக நிஜத்துடன் படத்தில் வாழ்ந்திருக்கிறார்.

சீரியஸாக செல்லும் கதைக்குள் பஞ்ச் வசனம் கொடுத்து நகைச்சுவையில் அதிர வைக்கும் லொள்ளு சபா மாறன், மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, பரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ். கருணா பிரசாத், மாலதி அசோக் நவின், சுஹாசினி சஞ்சீவ், சிரஞ்சீவி, ஓவியர் சௌ. செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், அனீஷா, மாதவி ராஜ், கலா குமார், அன்பரசி மற்றும் பலர் படத்திற்கு உறுதுணையாக இருந்து தேர்ந்த நடிப்பில் ஜொலித்துள்ளனர்.

குடிநோயாளியாக சித்தரிக்கும் காட்சிகள், குடும்ப சூழ்நிலை, மறுவாழ்வு மைய ரகளைகள், சூழ்நிலைகளை திறம்பட கையாண்டு சலிப்பு ஏற்படாத வண்ணம் காட்சிக்கோணங்களை திறமையாக கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி.

அறிவு, உமாதேவி, தனிக்கொடி, பாக்கியம் சங்கர், ரமேஷ் வைத்யா ஆகியோரின் பாடல் வரிகளுக்கு இசையும், பின்னணி இசையும் கைகோர்த்து மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.

குடிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தோய்வு ஏற்படாத வண்ணம் அதற்கேற்ற காட்சிகளை சிறப்பாக கொடுத்துள்ளார் படத்தொகுப்பாளர் இ.சங்கத்தமிழன்.

மற்ற சமூக நெருக்கடிகளைப் போலவே குடிப்பழக்கமும் சமூகத்தின் ஏழ்மையான பிரிவு பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அற்புதமாக அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் தினகரன் சிவலிங்கம். குடிநோயாளிகளின் வீட்டில் தினம் தினம் நடக்கும் சண்டைகள், பெண்களுக்கு ஏற்படும் அவமானங்கள், கேவலங்கள்,  பழிசொற்கள் என்ன என்பதை ஒரு பெண் எதிர்கொள்ளும் அத்தனை சம்பவங்களையும் இணைத்து, குடிக்கு அடிமையானவர்கள் திருந்துவது அவர்கள் மனது வைத்தால் மட்டுமேயன்றி வேறுவழியில்லை, மறுவாழ்வு மையங்கள் அவர்கள் செய்யும் தவறை உணர செய்து ஆலோசனைகளை வழங்க மட்டுமே என்பதை அழுத்தம் திருத்தமாக சமூக அக்கறை கலந்து பிராச்சார படமாக ஆகி விடாமல் குடிநோயாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வு பாடமாக கொடுத்துள்ளார் இயக்குனர் தினகரன் சிவலிங்கம். பாட்டில் ராதாவின் சிறப்பம்சம் என்னவென்றால், இது பல்வேறு சிக்கல்களுடன் போராடும் மக்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. அன்றாட துயரங்களுக்கு  இரக்கம், பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தி இறுதியில் உங்கள் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைப்பதே படத்தின் வெற்றி.

மொத்தத்தில் பலூன் பிக்சர்ஸ், நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித், டி.என்.அருண்பாலாஜி இணைந்து தயாரித்துள்ள பாட்டில் ராதா போதைக்கு அடிமை நீங்கினால் வாழ்க்கையில் பூத்துக் குலுங்கும் இனிமை.