பராரி சினிமா விமர்சனம் : பராரி இரு மாநிலத்தில் நடக்கும் சமூக பதற்றம். | ரேட்டிங்: 3/5
கலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஹரிசதுள்ள தயாரித்திருக்கும் பராரி படத்தை இயக்குனர் ராஜுமுருகன் வழங்க எழில் பெரியவேதி எழுதி இயக்கியுள்ளார்.
இதில் ஹரிசங்கர் – மாறன், சங்கீதா கல்யாண் – தேவகி, குரு ராஜேந்திரன் – வேதி, சாம்ராட் சுரேஷ் – சாம்ராட், புகழ் மகேந்திரன் – ஜெகன், பிரேம் நாத் – ஜெய குமார் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
உமா தேவி பாடல்களுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆர்.டி.எக்ஸ் படத்தொகுப்பு செய்ய, ஏ.ஆர்.சுகுமாரன் கலை இயக்குநராக பணியாற்ற, எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி ஒலி வடிவமைப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். ஃபயர் கார்த்தி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அபிநயா கார்த்திக் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பு – டி ஒன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதி பாகுபாடு பார்க்கும் ராஜபாளையம் கிராமத்தில் கதைக்களம் ஆரம்பிக்கிறது. ஒரு நாள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாறனும் (ஹரிசங்கர்) அவரது நண்பர்களும்; கிராமத்தின் தெருக்களில் வழிதவறி ஓடும் தங்களது வளர்ப்பு பன்றியைப் பிடிக்க முயல்கிறார்கள். இது சாதி அடிப்படையிலான சமூகத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி கோபத்தை தூண்டுகிறது. மாறனுக்கும் அவரது நண்பர்களுக்கும் தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து அரசியல் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடிக்க தண்ணீர் வசதியை நிறுத்தும் அளவிற்கு செல்கிறது. அதே நேரத்தில், சிறு வயதிலிருந்தே ஆதிக்க சாதியைச் சேர்ந்த தேவகி (சங்கீதா கல்யாண்) மாறனை விரும்புகிறார். சாதி பாகுபாடு காரணமாக மாறன் தேவகியை ஒதுக்குகிறார். இந்த காதலை அறியும் ஆதிக்க சாதியினர் மாறனை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். மேலும், மலை உச்சியில் (கொட்டாங்கல் பாறை) உள்ள கோவிலில் பிரார்த்தனை செய்ய வந்த மாறன் மற்றும் அவரது சமூகத்தினர்கள் மீது ஆதிக்க சாதி சமூகம் தங்கள் கோபத்தை கட்டவிழ்த்துவிட அவர்களது கிராம மோதல் தீவிரமடைய வேறு வழியின்றி மாறன் கர்நாடகாவில் உள்ள பழச்சாறு தொழிற்சாலைக்கு பணிக்கு செல்கிறார். மாறனுடன் சேர்ந்து தேவகி மற்றும் ராஜபாளைய இரு சமூக மக்களும் கர்நாடகா தொழிற்சாலைக்கு 3 மாத பணிக்கு செல்கின்றனர். அங்கே இவர்கள் சாதி பதட்டங்களுடன் இருக்க கர்நாடக வெறியர்கள் மொழி ரீதியான பாகுபாடுகளுடன் இவர்களை கீழ்தரமாக நடத்துகின்றனர். அந்த பேக்டரியில் பணிபுரியும் ஒரு சில கன்னட வெறியர்களால் ராஜபாளைய மக்கள் சூறையாடப்படுகின்றனர். இதனால் வெகுண்டெழும் மாறனையும் தேவகியையும் என்ன செய்தனர்? இவர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் என்ன? அதன் பின் என்ன நடந்தது என்பதே பதற வைக்கும் படத்தின் க்ளைமேக்ஸ்.
ஹரிசங்கர் மாறனாக தன் சமூகத்தின் அவல நிலைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆக்ரோஷ இளைஞராக, அநியாயத்தை தட்டி கேட்கும் மனோபாவத்துடன், இறுதிக் காட்சியில் உணர்ச்சிகளின் பிம்பமாக கடுமையான உழைப்பு கொடுத்து நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்.
சங்கீதா கல்யாண் தேவகியாக மாறனை நினைத்து ஏங்கும் காட்சிகளிலும், தன்னை அவமானப்படுத்தும் வில்லனுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நேரத்திலும், இறுதியில் அவருக்கு நேரும் அவமானம் கண்களை கலங்க செய்து விடுகிறது. புதுமுக நடிகையாக இருந்தாலும், தன்னுடைய இருப்பை கவனிக்க வைத்து துணிச்சலாக காட்சிகளில் கிராமத்து நங்கையாக சிறப்பாக நடித்துள்ளார்.
குரு ராஜேந்திரன் – வேதி, சாம்ராட் சுரேஷ் – சாம்ராட், புகழ் மகேந்திரன் – ஜெகன், பிரேம் நாத் – ஜெய குமார் மற்றும் பலர் கிராமத்துவாசிகளாகவே மனதில் இடம் பிடித்துள்ளனர்.
உமா தேவி பாடல்களுக்கு ஷான் ரோல்டன் இசை மெய் மறக்க செய்கிறது.
யதார்த்தமான கிராமத்து காட்சிகளுக்கும், சாதி சண்டை, கர்நாடகாவில் தொழிற்சாலையில் நடக்கும் அத்துமீறல்களும், மொழி அரசியல் செய்யும் காட்சிகளில் அட்டகாசமான ஒளிப்பதிவில் தடம் பதிக்கிறார் ஸ்ரீதர்.
சாம் ஆர்.டி.எக்ஸ் படத்தொகுப்பும், ஏ.ஆர்.சுகுமாரன் கலை இயக்கமும், எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி ஒலி வடிவமைப்பும், ஃபயர் கார்த்தி சண்டைக்காட்சிகளும் படத்தின் உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகளுக்கு உறுதுணையான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டு கிராமத்தில் நடக்கும் இரு சமூகத்தின் சாதி பாகுபாடும், காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்படும் மொழிவெறி தாக்குதலையும் ஒன்றிணைத்து காதல், மோதல், சண்டையை மையப்படுத்தி அரசியல் அதிகார சூழ்ச்சியை விவரித்து பல சமூக பிரச்சனைகளையும் வன்முறை காட்சிகளையும் ஒரே நேரத்தில் திணித்தது போன்று இருக்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர் எழில் பெரியவேதி.
மொத்தத்தில் கலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஹரிசதுள்ள தயாரித்திருக்கும் பராரி இரு மாநிலத்தில் நடக்கும் சமூக பதற்றம்.