படை தலைவன் சினிமா விமர்சனம்

0
392

படை தலைவன் சினிமா விமர்சனம் : படை தலைவன் மிருகவதையை தடுக்கும் காவல்காரன் | ரேட்டிங்: 2.5/5

கேப்டன் சினி கிரியேஷன்ஸ்; சார்பில் ஜெகநாதன் பரமசிவம் தயாரித்திருக்கும் படைத்தலைவன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் யு.அன்பு

இதில் சண்முக பாண்டியன் விஜயகாந்த், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனிஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ.வெங்கடேஷ், யுகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள் தாஸ், லோகு என்பிகேஎஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை : இளையராஜா, வசனம் மற்றும் திரைக்கதை : பார்த்திபன் தேசிங்கு, ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.சதீஷ் குமார், எடிட்டிங் : எஸ்.பி.அஹமது, கலை இயக்குனர் : பி. ராஜு, சண்முகம், சண்டைக்காட்சி : மகேஷ் மேத்யூ, தயாரிப்பு நிர்வாகி : வி.முத்துகுமார், விஷ{வல் எஃபெக்ட்ஸ் : சுனில், ஒலி வடிவமைப்பு : ஏ.சதீஷ் குமார், மிக்சிங் : ஆனந்த் ராமச்சந்திரன், கே.ஜெகன், ஆடை வடிவமைப்பு : என்.லோகநாதன், ஸ்டில்ஸ் : சக்தி பிரியன், மக்கள் தொடர​;பு : சதீஷ் (ஏய்ம்)

பொள்ளாச்சியில் உள்ள கிராமத்தில் பானைகளை செய்து விற்கும் தொழில் செய்யும் குயவர் தந்தை வெள்ளைச்சாமி (கஸ்தூரி ராஜா). அவருக்கு மகன் வேலு (சண்முக பாண்டியன்), மகள் மற்றும் 25 வருடமாக பாசமாக வளர்ந்து வரும் மணியன் என்ற யானையுடன் வசிக்கிறார்கள்.குடும்பத்தில் ஒருவராக வலம் வரும் யானையின் மேல் அதிக நேசம் வைத்திருக்கிறார் வேலு. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த உறவினரான லோகு, வெள்ளைச்சாமி வாங்கிய கடனுக்காக அவமானப்படுத்த நண்பர்களிடம் கடன் வாங்கி தந்தையை மீட்கிறார் வேலு. கடன் சுமையை குறைக்க நினைத்த வேலு நண்பர்கள் உதவியுடன் மணியனை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார். படப்பிடிப்பில் மணியனை பயன்படுத்த முடியாததால், திருமண விழாக்களில் பங்கு பெற மணியனை அழைத்துச் செல்கிறார் வேலு. அங்கே லோகுவின் சூழ்ச்சியால் யானை மணியனுக்கு மதம் பிடிக்க வேறு வழியில்லாமல் கோர்ட் உத்தரவுப்படி வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. முகாமிற்கு அழைத்துச் செல்லப்படும் மணியனை வனத்துறையினர் துன்புறுத்த,  ஒரு கட்டத்தில் மணியனை ஒரு கும்பல் கடத்திச் சென்று விடுகிறது. முகாமில் யானையை மீட்க வரும் வேலு, அங்கே மணியன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியாகிறார். மணியனை தேடும் முயற்சியில் இறங்கும் வேலு, தகவல்கள் அடிப்படையில் நண்பர்களுடன் ஒடிசா செல்கிறார். அங்கே மணியனை வேலு கண்டுபிடித்தாரா? மணியன் யாரிடம் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறது? கடத்தியவர்கள் யார்?அவர்களின் நோக்கம் என்ன? மணியனை ஆபத்தான சூழ்நிலையிலிருந்து வேலு மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

வேலுவாக சண்முக பாண்டியன் முரட்டுத்தனமான உடல்வாகு, நீண்ட சுருட்டத் தலைமுடி மற்றும் உயரத்துடன் கிராமத்து இளைஞனாக வருகிறார். அவரின் க்ளோசப் ஷாட்களில் கண்களில் தெரியும் உக்ரமும், எப்பொழுதும் சீரியசான முகபாவனையுடன் படம் முழுவதும் வந்து இறுதியில் ஆக்ஷன் காட்சிகளில் தீப்பொறி பறக்க அதகளம் பண்ணுகிறார். இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தி தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் முன்னணி ஹீரோவாக வலம் வரலாம்.

வேலுவின் தந்தை வெள்ளைச்சாமியாக வரும் கஸ்தூரி ராஜா, வெள்ளேந்தி மனதுடன் பேசும் வசனங்கள், யானையின் பாசத்தை உணர்த்தும் தருணங்கள், யானையை தேடி வனத்துறை அலுவலகத்தில் அலைந்து திரிந்து பரிதவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

நாயகி யாமினி சந்தர், வில்லனாக வரும் கருடன் ராம், முனிஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ.வெங்கடேஷ், யுகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள் தாஸ், லோகு என்பிகேஎஸ் ஆகியோரின் பங்களிப்பு அளவாக கச்சிதமாக உள்ளது.

விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்துடன் காட்டப்படும் எதிர்பார்க்கப்பட்ட காட்சி அமைச்சூர்தனமாக படமாக்கப்பட்டுள்ளதால் பெரிதாக எடுபடவில்லை.

இளையராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்து, இறுதியில் சண்டைக்காட்சிகளில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மலைக்கிராமத்தித்தின் அழகையும் , பொள்ளாச்சி, ஒடிசா ஆகிய இடங்களை தன்னுடைய காட்சிக் கோணங்களால் செதுக்கியுள்ளார். யானையை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளையும், காட்டுப்பகுதியில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகளையும் அனல் பறக்க சிறப்பாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ் குமார்.

படத்தொகுப்பாளர் எஸ்.பி.அஹமது எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். காட்சிகள் திடீரென்று மாறுவதால் என்ன நடக்கிறது என்பதை யூகத்திற்கு விட்டுவிடுகிறார்.

கலை இயக்குனர் பி. ராஜு, சண்முகம் மற்றும் அசத்தலான சண்டைக்காட்சி அமைத்த மகேஷ் மேத்யூ ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

முதல் பாதி பொள்ளாச்சியிலும், இரண்டாம் பாதி ஒடிசாவில் நடப்பது போல் கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குனர் அன்பு. யானைக்கும் மனிதனுக்கும் இருக்கும் பிணைப்பைப் பற்றி சொல்லும் படத்தில், வில்லன், மலைவாழ் மக்களின் உரிமை, பயம்,  மூடநம்பிக்கை, மிருக நரபலி கலந்து ஆக்ஷன் களத்துடன் இயக்கியிருந்தாலும் தெளிவாக கையாளாமல் கதைக்களத்தில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் அன்பு. இருந்தாலும் மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கும் அவரின் கடின உழைப்புற்கும் முயற்சிக்கும் யானையை வைத்து இயக்கியிருப்பதற்கும் பாராட்டுக்கள்.

 

மொத்தத்தில் ஜெகநாதன் பரமசிவம் தயாரித்து கேப்டன் சினி கிரியேஷன்ஸ்; வெளியிட்டிருக்கும் படை தலைவன் மிருகவதையை தடுக்கும் காவல்காரன்.