நீல நிற சூரியன் விமர்சனம் : நீல நிற சூரியன் நேர்த்தியான பாத்திரப்படைப்புகள், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் செயல்திறனால் பிரகாசமாக சுடர் விட்டு ஒளிர்கிறது | ரேட்டிங்: 3/5
மாலா மன்யன் தயாரித்திருக்கும் நீல நிற சூரியன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சம்யுக்தா விஜயன்.
அரவிந்த் மற்றும் பானு – சம்யுக்தா விஜயன், மனநல மருத்துவர் – கிட்டி, அரவிந்தின் தந்தை – கஜராஜ், அரவிந்தின் தாய் – கீதா கைலாசம் , ராஜேந்திரன் – பிரசன்னா பாலச்சந்திரன், துணை முதல்வர் – கே வி என் மணிமேகலை, கார்த்திக் – மாசாந்த் நடராஜன் , ஹரிதா, கார்த்திக் தந்தை- வின்னர் ராமசந்திரன், மோனா பெத்ரா, பானுவின் உறவினர் சகோதரி – செம்மலர் அன்னம், முதல்வர் – கௌசல்யா சரவணராஜா, கரஸ்பாண்டன்ட் – விஸ்வநாத் சுரேந்திரன், ரஞ்சித் – அஜய் ஈபன் கோபால் , ஜெனிஃபர் – வைதீஸ்வரி,அருண் – அனிருத் ஆரூனின் நண்பர் – ரேவன், தமிழ் ஆசிரியர் – சத்யா மருதானி, ராஜேந்திரனின் மனைவி – சாவித்திரி, அரவிந்தின் உறவினர் – சாரதா, கெஜட் அதிகாரி – ரஞ்சித் குமார் ஜி, கணித ஆசிரியர்- தேவ் ஹபிபுல்லா, வேதியியல் ஆசிரியர்- சாய் பாலா, பொருளாதாரம் ஆசிரியர்- சரவணன், கார்த்திக்கின் தாய்-ஆன்னி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு-எடிட்டிங்-இசை-ஸ்டீவ் பெஞ்சமீன், கலை-மீட்டூ, இணை இயக்குனர்- கௌசிக், துணை இயக்குனர்- பாஸ்கரன், பிஆர்ஒ-கேஎஸ்கே செல்வா
பொள்ளாச்சியில் கஜராஜ் மற்றும் கீதா கைலாசத்தின் மகன் அரவிந்த்(சம்யுக்தா விஜயன்). தனியார் பள்ளியில் உயர்கல்வி இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறு வயது முதலே பெண்ணின் உணர்ச்சிகள் நிறைந்தாலும் ஆணாகவே வாழ்கிறார். தன் பெற்றோர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டாலும் நாளடைவில் பெண்ணாக மாறும் ஹார்மோன் மாற்று சிகிச்சைகளை தொடர்கிறார். இந்நிலையில் தந்தை கஜராஜ் பணத் தேவைக்காக வீட்டை அடமானம் வைக்க செல்லும் இடத்தில் பைனான்சியர் உறவினர் தன்னுடைய மகளுக்கு அரவிந்தை மண முடிக்க பேசுகிறார், பணத்தை வரதட்சணையாக கொடுப்பதாக கூறுகிறார். இதற்கு முதலில் மறுக்கும் கஜராஜ் பின்னர் தன் தம்பி ராஜேந்திரன் (பிரசன்னா பாலச்சந்திரன்) ஆலோசனைப்படி சம்மதம் தெரிவித்து அரவிந்திடம் சொல்கின்றனர். முதலில் அதிர்ச்சியாகும் அரவிந்த், திருமணம் வேண்டாம் என்று மறுக்க பெற்றோர்கள் அதற்கு காரணம் என்று கேட்க பதில் சொல்லாமல் செல்கிறார். பின்னர் தன் சக உடற்கல்வி ஆசிரியர் ஹரிதாவிடம் நடந்ததை கூற, மனநல மருத்துவரை அணுக சொல்கிறார். முதலில் வீட்டிலும், வெளியிலும் தன்னை மாற்றிக் கொண்டு உலகத்தை தைரியமாக அணுக வேண்டும் என்ற மனநல மருத்துவரின் அறிவுரையின்படி தன்னை பானுவாக மாற முயற்சிகள் மேற்கொள்கிறார்.முதலில் வீட்டில் தான் பெண்ணாக மாறப்போவதை தெரிவிக்க பூகம்பம் வெடிக்கிறது. திருமண பேச்சு வார்த்தை நின்று போய், உறவினர்கள் அரவிந்தின் மனதை மாற்ற முயற்சி செய்கின்றனர். ஆனால் அரவிந்த் பிடிவாதமாக நடை, உடை, பாவனை, குரல் பயிற்சி என்று பெண்ணாக மாற முடிவு செய்து தான் வேலை செய்யும் பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் தெரிவிக்க இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பள்ளி தளாளர் இதற்கு முழு ஆதரவு தெரிவிக்கிறார். அதனால் பள்ளிக்கு அரவிந்த் பானுவாக மாறி செல்கிறார். அங்கே அவருக்கான அங்கீகாரம், மரியாதை கிடைக்காமல் தவிக்கிறார். தனக்கென்று கழிப்பிட வசதிகள் கூட செய்து தராமல் தரமற்ற இடத்தை கொடுக்கிறார்கள். பள்ளியில் மாணவன் ஒருவன் தன்னை போல் மாற விரும்ப பள்ளியில் பிரச்சனை ஏற்படுகிறது. அதன் பின் தன்னை ஒதுக்கும் உலகத்திலிருந்து போராடி வெளியே வந்தாரா? அனைவரும் பானுவாக ஏற்றுக் கொண்டனரா? இல்லையா? என்பதே படத்தின் முடிவு.
நீல நிற சூரியன் படத்தில் சம்யுக்தா விஜயன் – அரவிந்த் மற்றும் பானு என்ற இருவித கெட்டப்களில் ஆணாக இருந்து பெண்ணாக மாறுகிற ஒரு அழுத்தமான போராட்டங்கள் நிறைந்த ஒரு ஆழ்ந்த தனிப்பட்ட பயணத்தில் நடக்கும் சுக துக்கங்கள் நிறைந்த சம்பவங்களை மேலோட்டமாக சொல்லியிருந்தாலும் கவனிக்கப்படும் கதையாக ஆச்சர்யப்படும் விதத்தில் பெண்ணின் இயல்பான தோற்றத்தில் மென்மைகள் நிறைந்த அடக்கமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். வீட்டினுள்ளே குரல் பயிற்சி, தன்னை பெண்ணாக பாவித்துக் கொள்வதும், மாற்றத்திற்கான முடிவு எடுத்த பிறகு கடைகளுக்கு சென்று காலணிகள், துணி மணிகள் வாங்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, அக்கா செம்மலர் அன்னம் பெண்களின் வாழ்க்கை யதார்த்தத்தை புரிய வைத்து மாற்ற நினைக்கும் போது உறுதியாக தன் எண்ணத்திலிருந்து மாறாத குணத்திலும், தன் சக ஆசிரியர்கள் நடத்தும் விதம், வீட்டில் அங்கீகரிக்க மறுக்கும் போதும், உரிய மரியாதையை எதிர்பார்க்காமல் கண்டும் காணாதது போல் செல்லும் போதும், தான் விரும்பும் ஆசிரியர் தன்னிடம் அன்பாக பேச அதற்கான காரணத்தை அறிந்து அதிர்ச்சியாகி விறுட்டென்று செல்லும் இடத்திலும், தாளாளரின் சுயநல விளம்பரத்திற்காக தன்னை பயன்படுத்தும் நேரத்திலும், இறுதிக் காட்சியில் பள்ளி நிர்வாகத்தைப் பற்றி புகழ்ச்சியாக சொல்லி விட்டு எதுவும் மாறாத உலகத்தைப் பற்றி நினைத்து கழிப்பிட அறையில் தனிமையில் வந்து அழும் காட்சிகள் மனதை நெருடச் செய்து விடுகிறது. சம்யுக்தா விஜயனின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் படத்திற்கு பலம் மட்டுமல்ல பல விருதுகளை தனதாக்கும்.
கஜராஜ், கீதா கைலாசம் பெற்றோர்களாக தங்கள் மகனின் மாற்றத்தால் குழப்பமடைந்து அதிர்ச்சியாகி அதிலிருந்து மீண்டு வந்து ஏற்றுக் கொள்ளும் நேரத்தில் அனுபவமிக்க நடிப்பில் மிளிர்கிறார்கள்.
அரவிந்திற்கு மன தைரியம் கொடுத்து உறுதுணையாக பயணிக்கும் சக உடற்கல்வி ஆசிரியராக வரும் ஹரிதாவின் யதார்த்தமான நடிப்பும், பேச்சும் படத்திற்கு ப்ளஸ்.
மற்றும் கிட்டி, பிரசன்னா பாலச்சந்திரன், கே வி என் மணிமேகலை மாசாந்த் நடராஜன் , செம்மலர் அன்னம், கௌசல்யா சரவணராஜா மற்றும் சக ஆசிரியர்களாக வருபவர்களின் பங்களிப்பு படத்தின் கதையை நகர்த்தி திறம்பட செய்துள்ளனர்.
ஒளிப்பதிவு-எடிட்டிங்-இசை என்று மூன்றையும் ஸ்டீவ் பெஞ்சமீன் தன் திறமையால் ஒருங்கிணைத்து படத்தின் வெற்றிக்கு துணை போகிறார்.
அரவிந்தன் பானுவிற்குள் அடியெடுத்து வைக்கும் போதும், ஒரு பாரம்பரிய சமூகக் கட்டமைப்பிற்குள் மாறுவதற்கான சவால்களைச் சமாளிக்கும் போதும், அந்த பயணத்தின் மூலம் உண்மையான போராட்டங்களையும் உறவுகளையும் காட்டுவதால் படம் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் காட்சியே அரவிந்த் பானுவாக மாறுவதற்கான ஒரு நெருக்கமான பயணத்தில், குரல் பெண்ணியத்தை கச்சிதமாக்க எடுக்கும் பயிற்சிகள், பெண்ணாக மாறுவதை முதலில் மறைக்க எடுக்கும் முயற்சிகள், முதன்முறையாக ஒரு பெண்ணாக வேலை செய்ய அதற்கான ஆடை அணியும் போது, டிஸ்ஃபோரியா உலகத்தை எதிர்த்துப் போராடி, அவள் விரும்பியபடி சரியான தோற்றத்திற்கு மாறி ஆர்வத்துடன் ஆவலுடன் செல்லும் போதும், வட்டாச்சியர் அலுவலகத்தில் பெண்ணாக பதிவு செய்ய முடியாது திருநங்கையாக மட்டும் தான் பதிவு செய்ய முடியும் என்று சொல்லும் போது ஆவேசமாக பேசிவிட்டு செல்வதும், ஒரு பெண்மணி தன்மகள் உடல் நலம் பெற ஆசிர்வாதம் செய்ய சொல்லும் போது மறுத்துவிட்டு செல்லும் இடத்திலும், ஆணின் பார்வையில் தன்னை பற்றி தவறாக நினைக்கும் நேரத்திலும், எதிர்ப்புகள், இழிசொல்கள், அத்தனையையும் தாண்டி காட்சிகளாக விரியும் போது நுணுக்கமாக இப்படிப்பட்ட கருத்துக்கள் எழுதப்பட்டிருப்பது விரசமில்லாமல் மேலோட்டமாக தன் தனிப்பட்ட அனுபவத்தின் வலியை பகிர்ந்திருப்பது என்பது பாராட்டுக்குரியது.வெல்டன்.
மொத்தத்தில் மாலா மன்யன் தயாரித்திருக்கும் நீல நிற சூரியன் நேர்த்தியான பாத்திரப்படைப்புகள், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் செயல்திறனால் பிரகாசமாக சுடர் விட்டு ஒளிர்கிறது.