நிழற்குடை சினிமா விமர்சனம் : நிழற்குடை இளம் பெற்றோர்களுக்கு படிப்பினையுடன் வாழ்க்கையை புரிய வைக்கும் தங்க மகுடம் | ரேட்டிங்: 3.5/5

0
243

நிழற்குடை சினிமா விமர்சனம் : நிழற்குடை இளம் பெற்றோர்களுக்கு படிப்பினையுடன் வாழ்க்கையை புரிய வைக்கும் தங்க மகுடம் | ரேட்டிங்: 3.5/5

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரித்து சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் நிழற்குடை.

இதில் தேவயானி, விஜித், கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமாஇசை, தர்ஷன் சிவா, குழந்தைகள் நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-வசனம் – ஹிமேஷ்பாலா,இசை – நரேன் பாலகுமார், கலை இயக்கம் – விஜய் ஆனந்த், படத்தொகுப்பு – ரோலக்ஸ், ஒளிப்பதிவு – ஆர் பி குருதேவ்,மக்கள் தொடர்பு – ஏ.ஜான்

கலப்பு காதல் திருமணம் செய்து கொண்ட ஐ.டி.கம்பெனியில் நல்ல சம்பளத்தில் பணியாற்றும் லான்சி (கண்மணி) மற்றும் நிரஞ்சன் (விஜித்). இதனால் இரு குடும்பங்களின் ஆதரவு இல்லாமல் தனியே வசித்து வருபவர்களுக்கு நிலா என்ற பெண் குழந்தை இருக்கிறது. அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்து​ அங்கேயே செட்டிலாக வேண்டும் என்ற லட்சியத்துடன் தம்பதிகள் இருக்கின்றனர்.நிலாவிற்கு விடாமல் அழுதால் வலிப்பு ஏற்பட்டு விடும் என்பதால் குழந்தையை பார்;த்துக் கொள்ள ஒரு பெண் நியமிக்கப்பட, அந்த பெண்ணின் நடவடிக்கை சரியில்லை என்பதால் வேலையிலிருந்து நிறுத்தப்படுகிறார். இருவரும் லீவு போட்டு விட்டு மாறி மாறி பார்த்துக் கொள்கின்றனர். அவர்களால் குழந்தையை சமாளிக்க முடியாமலும், வேலை டென்ஷனிலும் அவதிபடுகிறார்கள். குழந்தையின் பிறந்த நாளன்று முதியோர் காப்பகத்திற்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் போது காப்பகத்தில் வேலை செய்து வரும் இலங்கைத் தமிழரான ஜோதியை (தேவயானி) சந்திக்கின்றனர். ஜோதி இலங்கையில் குடும்பத்தினரை பறிகொடுத்து இங்கே வந்து காப்பகத்தில் வேலை செய்து கொண்டு அனைவரிடமும் அன்போடு பழகுவது, முதியவர்களை முடிந்த வரை குடும்பத்தோடு சேர்த்து வைப்பது என்று நற்பெயருடன் இருப்பதை பார்க்கின்றனர். அதன் பின் தங்களின் குழந்தையை கவனித்துக் கொள்ள ஜோதியை ஏற்பாடு செய்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். ஜோதியிடம் நிலா பாசத்துடன் ஒட்டிக் கொள்ள, மாற்றுத்தாயாக இருப்பது மட்டுமில்லாமல் தம்பதி இருவருக்கும் உற்ற துணையாக இருக்கிறார். மூன்று ஆண்டுகள் கடந்து மகிழ்ச்சியாக அனைவரும் வாழ்கின்றனர்.தம்பதிகளின் விடா முயற்சியால் அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது, அதற்கான விசா விண்ணப்பங்கள் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற, ஜோதியிடம் அமெரிக்கா செல்ல இருப்பதை கூறுகின்றனர். ஜோதிக்கு குழந்தையை விட்டு பிரிய மனமில்லாமல் இருக்க, குழந்தை நிலா ஜோதியும் தன்னுடன் அமெரிக்கா வருவதாக நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறாள். இந்நிலையில் அமெரிக்கா செல்லும் முந்தைய நாள் தங்களுடைய நண்பர்களுக்கு லான்சி மற்றும் நிரஞ்சன் தம்பதி பார்ட்டி கொடுக்க, அந்த பார்ட்டியில் திடீரென குழந்தை நிலா காணாமல் போகிறாள். லான்சி, நிரஞ்சன், ஜோதி உடனே போலீசில் புகார் கொடுக்கின்றனர். போலீசார் பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள், குழந்தையை பராமரித்த பெண், லான்சியின் குடும்பம், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் என்று பலரையும் விசாரித்த பின்னர் ஜோதி மீது சந்தேகம் பட்டு அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.  இறுதியில் போலீஸ் குழந்தையை கடத்தியவர்கள் யார் என்று கண்டுபிடித்தனரா? யார் குழந்தையை கடத்தி சென்றது யார்?  எதற்காக? தம்பதிகள் இருவரும் குழந்தையுடன் அமெரிக்க சென்றனரா? பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

இலங்கைவாழ் தமிழ் பெண்மணியாக தேவயானி தன்னுடைய நடை, உடை, பாவனை, உச்சரிப்பு என்று அனுபவ நடிப்பை மீண்டும் கொடுத்திருக்கிறார். குழந்தையை இழந்த தேவயானி, நிலாவின் மேல் அன்பு பாராட்டுவதும், தம்பதிகளுக்கு அறிவுரை கூறுவது, குழந்தையை பராமரிப்பது, குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது, அமைதியோடு ஆழந்த முடிவுகள் எடுப்பது என்று அச்சு அசலாக தாயின் பாசப்பிணைப்போடு படம் முழுவதும் தனி முத்திரை பதிக்கிறார்.

ஐ.டி. காதல் தம்பதிகளாக விஜித் – கண்மணி இருவரும் தங்களது வேலை தான் முக்கியம், வசதிக்கு குறைவில்லை என்றாலும் குழந்தையிடம் நேரத்தை செலவிடாமல் அமெரிக்க செல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு ஒடுவதும், பெற்றோர்களை அலட்சியப்படுத்தும், இழிவுபடுத்தும் மனோபாவம் என்று பணத்தை குறிக்கோளாக வாழும் இக்கால நவீன தம்பதிகளின் எண்ணங்களையும், மனோபாவங்களையும் நன்றாக பிரதிபலித்துள்ளனர்.

இரு கால கட்ட குழந்தை நட்சத்திரங்கள் அஹானா, நிஹாரிக்கா சரியான தேர்வு.

போலீஸ் இன்ஸ்பெக்டராக இளவரசு, ஆபீஸ் எம்டியாக ராஜ்கபூர், நிரஞ்சனின் தாயாக வடிவுக்கரசி, மனோஜ்குமார், டாக்டராக நீலிமா இசை, தர்ஷன் சிவா மற்றும் பலர் படத்தின் காட்சிகளுக்கு உற்ற நேரத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஆர் பி குருதேவ், வசனகர்த்தா ஹிமேஷ்பாலா, இசைமைப்பாளர் நரேன் பாலகுமார், கலை இயக்குனர் விஜய் ஆனந்த், படத்தொகுப்பாளர் ரோலக்ஸ் ஆகிய தொழில் நுட்ப கலைஞர்கள் அபார்ட்மெண்ட், காப்பகம், அலுவலகம், போலீஸ் நிலையம் என்று குறுகிய வட்டத்திற்குள் செல்லும் கதையை தங்களின் பணியால் அலுப்பு ஏற்பாட வண்ணம் காட்சிகளை கொடுத்து நிறைவாக செய்துள்ளனர்.

குழந்தையை இழந்த தாயிக்கு தான் குழந்தையின் அருமை புரியும், அதே போல் பெற்றோர்களை புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு தங்களின் குழந்தை பாதிக்கப்படும் போது தான் அதன் வலி புரியும் என்பதை கலப்பு திருமணம், குழந்தை பராமரிப்பு, கடத்தல் என்று திரைக்தையை வலுவாக எழுதி இன்றைய சூழ்நிலை இளம் தம்பதிகளின் முடிவையும், பெற்றோர்களின் முக்கியத்துவத்தையும், கூட்டுக் குடும்பங்களின் வலிமையையும், பணம் அனைத்தையும் தராது என்பதை தோய்வு ஏற்படாத வண்ணம், சண்டைக்காட்சிகள், விரசக் காட்சிகள் இல்லாமல் குடும்ப பாங்கான கதைக்களமாக நன்றாக கொடுத்துள்ளார் இயக்குனர் சிவா ஆறுமுகம். குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நிழல் குடையாக இருந்து வளர்த்து ஆளாக்குவது போல், பிள்ளைகளும் அதே பாணியில் பெற்றோர்களை புறக்கணிக்காமல் இறுதி வரை நிழல் குடையாக இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதை பசுமரத்தாணிபோல் பதிவு செய்திருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில் தர்ஷன் பிலிம்ஸ் ஜோதிசிவா தயாரித்துள்ள நிழற்குடை இளம் பெற்றோர்களுக்கு படிப்பினையுடன் வாழ்க்கையை புரிய வைக்கும் தங்க மகுடம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அவசியமான படம்.