தண்டேல் சினிமா விமர்சனம் : தண்டேல் மீனவ மக்களுக்காக போராடும் காதல் தலைவன் | ரேட்டிங்: 3/5

0
491

தண்டேல் சினிமா விமர்சனம் : தண்டேல் மீனவ மக்களுக்காக போராடும் காதல் தலைவன் | ரேட்டிங்: 3/5

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரித்திருக்கும் தண்டேல் படத்தை அல்லு அரவிந்த் வழங்க படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சந்து மொண்டேட்டி.

இதில் நாக சைதன்யா – ராஜு, சாய் பல்லவி – சத்யா, பிரகாஷ் பெலவாடி – பாகிஸ்தான் சிறை அதிகாரி , திவ்யா பிள்ளை – சந்திராக்கா, ராவ் ரமேஷ், கருணாகரன் ,’ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ் ,மைம் கோபி ,கல்ப லதா, கல்யாணி நடராஜன் , மகேஷ் அச்சந்தா ,கிஷோர் ராஜு வசிஷ்டா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : ஷ்யாம் தத், இசை : ​தேவி ஸ்ரீ பிரசாத், படத்தொகுப்பு : நவீன் நூலி, கதை : கார்த்திக் தீடா, மக்கள் தொடர்பு – யுவராஜ்

ஸ்ரீகாகுலத்தைச் சேர்ந்த மீனவர் ராஜு (நாகா சைதன்யா) சத்யா (சாய் பல்லவி) இருவரும் சிறு வயதிலிருந்தே நட்புடன் பழகி பின்னர் இளமை பருவத்தில் காதலிக்க தொடங்குகின்றனர். ராஜுவிற்கு மற்ற மீனவ குடும்பங்களைப் போல 9 மாதங்கள் கடலில் மீன்பிடி தொழில், 3 மாதங்கள் நிலத்தில் குடும்பத்துடன் வாழ்வு என்று காலம் செல்கிறது. அந்த 3 மாதங்கள் ராஜுவும் சத்யாவும் அன்புடன், பாசத்துடன் தூய்மையோடு பழகுகிறார்கள். மீனவ நண்பர்களுக்காகவும், உரிமைகளுக்காகவும், ஆபத்தான சமயத்தில் காப்பாற்றுபவராகவும் விளங்கியதால் தந்தையைப் போல ராஜுவிற்கும் தண்டேல் (தலைவர்) என்ற பட்டத்தை மீனவ கிராமத்து மக்கள் வழங்க, அதன்பின் காதலர்களின் வாழ்க்கை பெரிய திருப்பத்தை சந்திக்கிறது. கடலுக்கு சென்று மரணமடையும் சில மீனவர்களை பார்த்த பின், சத்யாவுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டு ராஜுவின் மேல் உள்ள அக்கறையால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம், கிராமத்திலேயே தங்கி வேலை செய்யுமாறு சத்யா ராஜுவிடம் சத்யம் வாங்குகிறார். ஆனால் மீனவ குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜு சத்தியத்தை மீறி கடலுக்குச் செல்கிறார்.அதனால் கடும் கோபத்தில் இருக்கும் சத்யா ராஜுவை வெறுத்து, வேறொருவரை திருமணம் செய்து கொள்ள தந்தையிடம் ஏற்பாடு செய்ய சொல்கிறார். கருணாகரனுக்கு சத்யாவை மணமுடிக்க நிச்சயமாகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ராஜுவுடன் செல்லும் அனைவரும் புயலில் சிக்கி படகில் தத்தளிக்கும் போது  தெரியாமல் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் கடலோர படையால் கைது செய்யப்பட்டு கராச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ராஜுவும் அவரது ஆட்களும் பாகிஸ்தான் சிறையில் என்ன துன்பங்களை அனுபவித்தார்கள்? அவர்களை காப்பாற்ற சத்யா என்ன செய்தார்? அனைவரையும் பாகிஸ்தானிலிருந்து மீட்க இந்திய வெளியுறவு துறை அமைச்சரை சந்திக்க முடிந்ததா? இறுதியில் 22 மீனவர்கள் இந்தியா திரும்பினரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

நாகா சைதன்யா காதல், பாசம், மீனவ நண்பர்களின் தலைவனாக, தன்னிகரற்ற நிலைபாட்டினையும், ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாகவும், நடன காட்சிகளில் உணர்வுபூர்வமாகவும் படம் முழுவதும் தனித்துவமான நடிப்பை வழங்குகிறார்.

சாய் பல்லவி வெளிப்படையான செயல்திறன் கதைக்கு ஆழத்தை சேர்த்து ராஜு மீதான அன்பையும் உணர்ச்சிகளையும் நம்பமுடியாத அளவிற்கு தத்ரூபமாக உணர வைக்கிறார். நாகா சைதன்யாவிற்கும் சாய் பல்லவிக்கும் இடையிலான பொருத்தம் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்து காதல் காட்சிகளிலும் சரி, நடன அசைவுகளிலும் சரி, போராட்டங்களிலும் சரி திறம்பட பிரகாசிக்கிறார்.

முக்கிய பங்களிப்பில் கருணாகரன், பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி, கல்ப லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, மற்றும் கிஷோர் ராஜு வசிஷ்டா படத்தின் கதைக்கேற்ப பலம் சேர்க்கிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்புகள் படத்தில் வாழ்க்கையை சுவாசிக்கின்றன, முக்கிய தருணங்களை ஆன்மாவைத் தூண்டும் அளவிற்கு உயர்ந்து, பாடல்கள் நன்கு வடிவமைக்கப்பட்டு கதைகளின் உணர்ச்சி ஆழத்தை மேம்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ஷியாம் தத் மீனவர்களின் வாழ்வியலையும், காதலர்கள் சந்திக்கும் இடங்களையும், லைட் அவுஸ், கடலின் ஆபத்தையும், அதனால் ஏற்படும் இன்னல்களையும் கதையை மேம்படுத்தும் காட்சிக்கோணங்களால் செதுக்கியுள்ளார்.

படத் தொகுப்பாளர் நவீன் நூலி முதல் பாதியில் வரும் காதல் காட்சிகளை இன்னும் குறைத்திருக்கலாம். ஆக்ஷன் காட்சிகள், நடன அமைப்புகள் படத்திற்கு பலம்.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்கள நவம்பர் 2018 ஆம் ஆண்டு குஜராத் அருகே பாகிஸ்தான் கடலோர காவல்படையினரால் வெளிநாட்டு நீர்நிலைகளில் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 13 மாதங்கள் சந்தித்த இன்னல்களுக்கு பிறகு இந்திய அரசின் தலையீட்டால் 2020 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். அதற்குள் அவர்களின் குடும்பங்கள் அனுபவித்த கஷ்டங்களும் துன்பங்களும் அவர்களை விடுவிக்க நடந்த போராட்டங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தண்டேல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சந்து மொண்டேட்டி. முதல் பாதி காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் இரண்டாம் பாதியில் அந்நிய தேசத்தில் பட்ட இன்னல்களையும் திறம்பட கொடுத்துள்ளார். அன்பு, தியாகம் நிறைந்த ஒரு எளிய காதல் கதை, வலுவான உணர்ச்சிகளுடன், நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி அதில் ஏக்கம், சோகம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றைக் கலந்து ஒரு ஈர்க்கக்கூடிய படமாக கொடுத்திருந்தாலும் முக்கிய இடங்களில் அழுத்தமாக பதிவாக காட்டாமல் சீக்கிரமாக முடித்து விடுகிறார் இயக்குனர் சந்து மொண்டேட்டி.

மொத்தத்தில் கீதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள தண்டேல் மீனவ மக்களுக்காக போராடும் காதல் தலைவன்.