தங்கலான் சினிமா விமர்சனம் : தங்கலான் வரலாற்று பின்னணியில் கற்பனையின் மாயாஜாலம் | ரேட்டிங்: 4/5

0
1378

தங்கலான் சினிமா விமர்சனம் : தங்கலான் வரலாற்று பின்னணியில் கற்பனையின் மாயாஜாலம் | ரேட்டிங்: 4/5

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா, பா.ரஞ்சித், ஜோதி தேஷ்பாண்டே தயாரித்திருக்கும் தங்கலான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித்.

இதில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன் அன்புதுரை, சம்பத் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- கதை: பா.ரஞ்சித், தமிழ் பிரபா, இசை: ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு: ஏ. கிஷோர் குமார், படத்தொகுப்பு: செல்வா ஆர்.கே, கலை இயக்குனர்: எஸ் எஸ் மூர்த்தி, அதிரடி: ஸ்டன்னர் சாம், மக்கள் தொடர்பு : யுவராஜ், குணா

வட ஆற்காட்டில் உள்ள வேப்பூர் கிராமத்தில் 18ஆம் நூற்றாண்டில் தொடங்கும் கதைக்களத்தில் பூர்வகுடி மக்களின் நிலங்களை அபகரித்த அரசர்களிலிருந்து எஞ்சிய சிறிய சொந்த இடத்தில் விவசாயம் செய்து வருகிறார் பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான் (விக்ரன்). அவருடைய மனைவி கங்கம்மாள் (பார்வதி) மற்றும்  மூன்று பெண்கள் ஒரு ஆண் குழந்தை என்று நான்கு குழந்தைகளுடன் தங்கலான் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன் பூர்வகுடி பெருமைகளை தங்கள் பிள்ளைகளுக்கு கதையாக சொல்கிறார். அதாவது பல நுற்றாண்டுகளுக்கு முன்பு யானைமலைப் பகுதியில் தங்கம் இருப்பதை கேள்விப்பட்ட சிற்றரசன் ஒருவன் பேராசையால் இவரின் மூதாதையரை தூண்டி அப்பகுதியில் தங்கத்தை பாதுகாக்கும் காவல் தேவதையாக விளங்கும் ஆரத்தி (மாளவிகா மோகனன்) என்ற சூனியக்கார பெண்ணை தாக்கி சண்டையிட்டு தாக்குதலுக்கு உள்ளானதையும், பலர் கொல்லப்பட்டதையும், அந்த இடத்திற்கு செல்வது ஆபத்து என்று கதையாக தன் குழந்தைகளுக்கு சொல்கிறார். இந்த சமயத்தில் அங்கிருக்கும் ஜமீன்தார் நில வட்டி கட்டாமல் போகும் தங்கலான் இடத்தை அபகரித்து அவரையும், அவரது குடும்பத்தையும் கொத்தடிமைகளாக வேலை செய்யச் சொல்கிறார். அப்பொழுது க்ளெமென்ட் (டேனியல் கால்டாகிரோன்) என்ற ஆங்கலேயர் இதற்கு முன்பு தங்கலானின் மூதாதையர் கண்ட தங்கத்தை கண்டுபிடித்து எடுத்து கொடுத்தால் அதில் பங்கு தருவதாகவும், அது வரை அவர்களுக்கு உணவு, ஊதியம் கொடுப்பதாகவும் கூற, தங்கலான் தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு அந்த ஆங்கிலேயர்களுடன் செல்கிறார். பல நாட்கள் கடந்த நிலையில் பல தடைகளை தாண்டி ஒரு இடத்தில் முகாமிட்டு தங்கலானுக்கு உடை, ஊதியம் கொடுத்து கிராமத்திற்கு சென்று அனைவரையும் அழைத்த வருவாறு ஆங்கிலேயர் கூறுகிறார். கிராமத்திற்கு வரும் தங்கலான் தன் நிலத்தை மீட்டு, தன்னுடன் வேலை செய்ய வருமாறும் ஈடாக தங்க பங்கு கிடைக்கும் என்றும் நிம்மதியாக வாழலாம் என்று கூறி கிராம மக்களுடன் தன் குடும்பத்தையும் அழைத்து வருகிறார். இறுதியில் இவர்களால் தங்கத்தை கண்டுபிடிக்க முடிந்ததா? ஆரத்தி இவர்களை தங்கத்தை எடுக்க விட்டாரா? தங்கலான் சந்திக்கும் கஷ்டங்கள் என்ன? ஆங்கலேயர் க்ளெமென்ட் சொன்ன சொல்லை காப்பாற்றினாரா? பூர்வகுடி மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது? தங்கத்தினால் ஏற்பட்ட மோதல் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

விக்ரம் இந்த படத்தில் தங்கலானாக தன்னை இரண்டு விதமான பரிமாணங்களில் நடை, உடை, பாவனை என்று பூர்வகுடி மகனாக மெருகேற்றி தன் திறமையை அர்ப்பணித்துள்ளார். அது உணர்ச்சிகரமான காட்சிகளாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சிகரமான காட்சிகளாக இருந்தாலும் சரி, ஆக்ஷன் காட்சிகளாக இருந்தாலும் சரி, விக்ரம்; தனது உழைப்பை கொட்டி அனைவருக்கும் உணர வைக்கிறார். கிராம மக்களை மிரட்டாமல் நயமாக பேசி அழைத்து வரும் பாங்கு, அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களை பார்த்து கதறுவது, இன்னல்களை கடந்து விடா முயற்சியோடு இறுதி வரை போராடி தங்கத்தை கண்டு பிடிப்பது என்று யாராலும் ஈடு செய்ய முடியாத நடிப்பு அசுரனாக பல விருதுகளை குவிப்பார் என்பது உறுதி.

இவருக்கு இணையாக மனைவி கங்கம்மாவாக பார்வதி உடல்மொழி, வசன உச்சரிப்பு யதார்த்தமான நக்கல், நய்யாண்டி, காதல், பாசம், வெட்கம், துக்கம் என்று அசால்டாக செய்து அசத்தியுள்ளார்.

மற்றும் பசுபதி, மாளவிகா மோகனனும் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளனர்.

ஆங்கிலேயராக வரும் டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன் அன்புதுரை, சம்பத் ராம் மற்றும் எண்ணற்ற பழங்குடி கிராமத்து மண் மாறாத மனிதர்களாக பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கதாபாத்திரங்களில் வாழ்ந்துள்ளனர்.

படத்தின் சுவாரஸ்யமே ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடல்களும், பிஜிஎம்களும் மிகவும் பொருத்தமாக தனது பாணியில் அதகளம் செய்து பிரமாண்டத்தை உணர செய்துள்ளார். மேலும் சில இடங்களில் கொஞ்சம் சத்தமாக இருப்பதாலும் உரையாடல்கள் தெளிவாக இல்லை என்பதும் அந்த இடத்தில் சப் டைட்டில்களில் சரி செய்திருக்கலாம்.

பல கால கட்டங்களில் நடக்கும் கதைக்களத்தில் ஃபிளாஷ்பேக் காட்சிகள், பழங்குடி மக்களின் வாழ்வியல், ஜமீன்தாரின் அடுக்குமுறை, தங்கத்தை தேடும் பயணம், ஆற்றை கயிறு கட்டி கடப்பது, யானைமலை, சண்டைக்காட்சிகள், மயில், பாம்புகளின் படையெடுப்பு, சிறுத்தை சண்டை, போராட்டங்கள், குகையில் தேடல், தங்கப்பாறையின் மினுமினுப்பு என்று கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு ப்ளஸ்.

செல்வா எடிட்டிங் இன்னும் கிரிஸ்பாக இருந்திருக்கலாம். கலை இயக்குனர்: எஸ் எஸ் மூர்த்தி, அதிரடி: ஸ்டன்னர் சாம் ஆகியோர் படத்திற்கு கூடுதல் உழைப்பை கொடுத்துள்ளனர்.

இயக்குனர் பா.ரஞ்சித் எப்போதுமே சமூக சீர்திருத்தம், சமூக நீதி, சாதிய ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு போன்ற விளிம்புநிலை சமூகங்களுக்காக குரல் கொடுப்பவர். கோலார் தங்க வயல்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வரலாறு வேறுவிதமாக மையப்படுத்தி தன் கற்பனை வளத்துடன் பின்னிப்பிணைந்த ஒரு பீரியட் படம். முதல் பாதி வறண்ட நிலத்தின் அமைப்புகள் மற்றும் மக்களின் வறுமைத் தோற்றம், பழங்குடியினர்களின் துன்பத்தையும் அவநம்பிக்கையையும் ஒரு சேர காண்பித்து, இரண்டாம் பாதியில் தங்கத்தை தேடி மக்கள் சந்திக்கும் கடுமையான போராட்டங்களை முன் வைத்து கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் மாயத்தோற்றங்களும், வித்தியாசமான தமிழ் பேசி மறக்க முடியாத படமாக கொடுத்துள்ளார் பா.ரஞ்சித்.

மொத்தத்தில் ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா, பா.ரஞ்சித், ஜோதி தேஷ்பாண்டே தயாரித்திருக்கும் தங்கலான் வரலாற்று பின்னணியில் கற்பனையின் மாயாஜாலம் தேர்ந்த நடிகர்களின் அபரிதமான அர்ப்பணிப்புடன் காட்சிக்கோணங்களில் புது அனுபவத்தின் வர்ணஜாலம்.