டெஸ்ட் சினிமா விமர்சனம் : டெஸ்ட் மும்முனை போராட்டக்களத்தில் நடக்கும் சதுரங்க ஆட்டம் | ரேட்டிங்: 3/5
ஒய் நாட் ஸ்டியோஸ் சார்பில் சக்ரவர்த்தி ராமச்சந்திரா இணைந்து எஸ்.சஷிகாந்த் தயாரித்து இயக்கியிருக்கும் படம் டெஸ்ட். நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிறது.
இதில் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த், மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழு:-எழுத்து : சுமன் குமார்;,ஓளிப்பதிவு : விராஜ் சின் கோஹில், எடிட்டர்: டி எஸ் சுரேஷ், இசை: சக்திஸ்ரீ கோபாலன், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள்: என் மதுசூதன், ஸ்வேதா சாபு சிரில், ஆடை வடிவமைப்பாளர்கள்: பூர்ணிமா ராமசாமி, அனு வர்தன், சண்டைக்காட்சி: தினேஷ் சுப்பராயன், விளையாட்டு இயக்குனர்: துருவ் பி பஞ்சுவானி, ஒப்பனை: ஒரு சபரி கிரிசன், ஸ்டில்ஸ் : எம் எஸ் ஆனந்தன், பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்
மூன்று பேரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைச் சுற்றி டெஸ்ட் கதைக்களம் சூழல்கிறது. சென்னையை சேர்ந்த அர்ஜுன் (சித்தார்த்) அனுபவம் வாய்ந்த மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர். இரண்டாண்டுகளாக ‘பார்மில்’ இல்லாமல் தடுமாறி வரும் அர்ஜுன், சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியே அவரது இறுதிப் போட்டி என்பதும், அவரை ஓரங்கட்ட நினைக்கிறது கிரிக்கெட் போர்டு என்பதையறிந்து சென்னையில் நடக்கும் இந்தியா -பாகிஸ்தான் மேட்சில் தன்னைநிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இதற்காக மனைவி, மகனைக் கூட கவனிக்காமல் கிரிக்கெட் தான் எல்லாமே என்று இருக்கிறார். தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் என்ஜினை கண்டுபிடிக்கும் சயின்டிஸ்ட் சரவணன்(மாதவன்) அங்கீகாரத்துக்காக அரசிடம் போராடி வருபவர். தன் மனைவி குமுதா நடத்தும் கேண்டீனை கூட அவருக்கு தெரியாமல் விற்று கடன் வாங்கி தன் ஆராய்ச்சிக்காக செலவிட, எக்கச்சக்க கடனில் சிக்கித் தவிக்கிறார். இதனிடையே இவரின் மனைவி தாய்மைக்கு ஏங்கும் குமுதாவின் (நயன்தாரா) கனவைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார். ஒரு பைனான்சியர் தர்மேஷ் (வினய் வர்மா) வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சரவணன் திணறி வருகிறார். பைனான்சியர் தர்மேஷ் பணம் கொடுக்கல் வாங்கலோடு ஹவாலா, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவராக சென்னையில் நடக்கும் இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் ஆட்டத்தை முன்வைத்து நடைபெறும் பல ஆயிரம் கோடி ரூபாய் சூதாட்டத்தில் அர்ஜுனைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். தர்மேஷிற்கு கொடுக்கும் கடன் பிரச்சினை காரணமாக அதைதனக்கு சாதகமாக பயன்படுத்தி, தேவையான பணத்தைப் பெற நினைக்கிறார் சரவணன். அதற்காக மனைவி குமுதாவை எப்படி பயன்படுத்துகிறார்? அர்ஜுனுக்கு எப்படி நெருக்கடி கொடுக்கிறார்? கடனை அடைப்பதற்காக சரவணன் எடுக்கும் முடிவு என்ன? எத்தகைய பாதகத்தை ஏற்படுத்துகிறது? பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்குள்ளும் நடக்கும் போராட்டம் என்ன? சூதாட்டத்தில் சிக்கிக் கொள்ளும் சரவணன் நிலை என்னானது? என்பதே ‘டெஸ்ட்’ படத்தின் மீதிக்கதை.
விஞ்ஞானியாக மாதவன், அவரின் மனைவியாக நயன்தாரா மற்றும் கிரிக்கெட் வீரராக சித்தார்த், அவரின் மனைவியாக மீரா ஜாஸ்மின் இந்த நான்கு பேரைச் சுற்றித்தான் கதைக்களம் நகர்கிறது. குறிப்பாக மாதவன், நயன்தாரா, சித்தார்த் இவர்களின் பங்களிப்பு படம் முழுவதும் முக்கிய தருணங்களிலும், இவர்களுக்கிடையே நடக்கும் வாக்குவாதங்களும், எடுக்கும் முடிவுகளும் படத்தின் காட்சிகளுக்கு மெருகேற்றுகிறது.
ஆதித்யாவாக அர்ஜுனின் மகனாக குழந்தை நடிகர் லிரிஷ் ரஹவ், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
விராஜ் சிங் கோஹிலின் ஒளிப்பதிவு, சக்திஸ்ரீ கோபாலனின் இசையும் உணர்ச்சித் தாக்கத்தை அதிகரிப்பதிலும் திரைக்கதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதிலும் முக்கிய பங்கு வகித்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
டி.எஸ்.சுரேஷின் எடிட்டிங் மெதுவாக செல்லும் கதைக்களத்தில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.
சுமன் குமார் எழுதிய டெஸ்ட் இந்த ஆண்டின் நெட்பிளிக்ஸில் வெளியான நேரடி முதல் தமிழ் படம். அறிமுக இயக்குனராக களமிறங்கியிருக்கும் எஸ். சஷிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து நட்பு, கடன், சூதாட்டம், கடத்தல், மிரட்டலுடன் அவர்களின் வாழ்க்கையையும், சந்திக்கும் நெருக்கடிகளையும் ஆழமாக சித்தரித்துள்ளார். வாழ்க்கையில் ஒருவர் ஹீரோவா ஜீரோவா? வெற்றியா தோல்வியா? நாணயத்தின் இரண்டு பக்கங்களாக நடக்கும் சோதனையின் சூழ்நிலைகளில் உண்மையான முகங்களை காட்டும் கண்ணாடியாக பிரதிபலித்திருக்கிறார். இது மனித உறவுகளின் சோதனையும், அது நேரத்துடன் எவ்வாறு மாறி உங்கள் வாழ்க்கையை எவ்வாறு தீர்மானித்து வழிநடத்துகிறது, மூன்று மனிதர்களின் எண்ணங்கள், செயல்பாடுகள், உணர்ச்சிகளை பிரதிபலித்து இறுதியில் ஒரே புள்ளியில் முடிவடைவது போல் திருப்பங்களுடன் கதைக்களத்தை அற்புதமாக படைத்துள்ளார் இயக்குனர் எஸ்.சஷிகாந்த்.
மொத்தத்தில் ஒய் நாட் ஸ்டியோஸ் சார்பில் சக்ரவர்த்தி ராமச்சந்திரா இணைந்து எஸ்.சஷிகாந்த் தயாரித்திருக்கும் டெஸ்ட் மும்முனை போராட்டக்களத்தில் நடக்கும் சதுரங்க ஆட்டம்.