டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம் : டென் ஹவர்ஸ் வேகமும், விறுவிறுப்பும் க்ரைம் கலந்த திருப்பங்கள் நிறைந்த கடத்தல் பயணம் | ரேட்டிங்: 3/5
டூவின் ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் லதா பாலு மற்றும் துர்கைனி வினோத் தயாரித்திருக்கும் டென் ஹவர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இளையராஜா கலியபெருமாள்.
இதில் காஸ்ட்ரோவாக சிபி சத்யராஜ், எஸ்ஐ மணியாக கஜராஜ், ஜீவா ரவி டாக்டராக,ஜீவாவாக ராஜ் அய்யப்பா, மாரியாக முருகதாஸ், மெய்யப்பனாக திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, ஷருமிஷா, நிரஞ்சனா ஆகியோர் குறிப்பிட்ட கதபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவாளர் -ஜெய் கார்த்திக்,இசையமைப்பாளர்-கே.எஸ்.சுந்தரமூர்த்தி, எடிட்டர் – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குனர் – அருண் சங்கர் துரை, ஸ்டண்ட் – சக்தி சரவணன், ஒலி வடிவமைப்பு – சச்சின் (ஒத்திசைவு சினிமாஸ்), ஒலிக்கலவை – அரவிந்த் மேனன், உற்பத்திக் கட்டுப்பாட்டாளர் – பாரதி ராஜா, ஸ்டில்ஸ் – ராஜ், பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்,மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
சேலம் ஆத்தூர் இன்ஸ்பெக்டராக இருக்கும் காஸ்ட்ரோ (சிபிராஜ்) தடயங்கள் இல்லாத குற்றங்களை கண்டுபிடிப்பதில் வல்லவராக இருக்க, அவரால் தற்போது கண்டுபிடிக்க முடியாத வழக்கில் கவலையோடு இருப்பதைப் பார்த்த எஸ்ஐமணி (கஜராஜ்) அவருக்கு உத்வேகம் தந்து பேசுவது போல் கதைக்களம் தொடங்குகிறது. அதற்கு காரணம் மறுநாள் சபரிமலைக்கு செல்ல மாலை போட்டிருக்கும் பக்தர் காஸ்ட்ரோவிற்கு வரும் சோதனையான வினோதமான கொலை சம்பந்தப்பட்ட புகாரை பத்து மணி நேரத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டிய சூழ்நிலை தான். முதலில் ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மகளை காணவில்லை என்று தாயும், தாத்தாவும் புகார் தருகிறார்கள். இதனை விசாரிக்க கிளம்பும் காஸ்ட்ரோவிற்கு சென்னையிலிருந்து சேலம் வரும் ஐம்பொன் டிராவல் ஆம்னி பேருந்தில் ஒரு இளம் பெண் துன்புறுத்தப்படுவதாக தகவல் வருகிறது. காஸ்ட்ரோ பேருந்தின் பதிவு எண்ணை வைத்து 25 பயணிகளுடன் செல்லும் அந்த ஆம்னி பேருந்தை மடக்கி பிடிக்கிறார். ஆனால் அந்த பேருந்தில் தேடி வந்த பெண் இல்லாமல் ஒருஆண் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடக்கிறார். அதனால் அந்த பேருந்தில் பயணம் செய்த 25 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையை தொடங்குகின்றார். அவர்கள் தரும் தகவல்கள் எந்த தடயமும் கிடைக்காமல் திணறுகிறார் காஸ்ட்ரோ. காணாமல் போன பெண், துன்புறுத்தப்பட்ட பெண் மற்றும் கொலை செய்யப்பட்ட இளைஞர்; இவர்களைச் சுற்றிய விசாரணையில் யார் குற்றவாளி என்று கண்டுபிடித்தார்களா? இத்தனை சம்பவங்களுக்கும் காரணமான நபர் யார்? காஸ்ட்ரோவினால் தடயமே இல்லாத கொலையை டென் ஹவர்ஸில் எப்படி துப்பறிந்தார்? என்பதே படத்தின் ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.
படத்தில் வரும் இன்ஸ்பெக்டர்கள் எப்போதும் சிகரெட், டீ என்று அருந்திக்கொண்டே விசாரணையை நடத்துபவர்களாக காட்டும் காட்சிகளில் இந்தப் படத்தில் சபரிமலை செல்லும் பக்தராக இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோவாக சிபிராஜை உருவகப்படுத்தி கோபம் வரும்போது அடித்து துவம்சம் செய்வதும், சாந்தமாக இருக்கும் போது திருநீரை நெற்றியில் பூசிக் கொண்டு தெளிவாக விசாரிக்க செல்வது என்று படம் முழுவதும் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் கவனிக்க வைத்துள்ளார். இந்தப் படம் சிபிராஜ்ஜிற்கு ஒரு மைல்கல் எனலாம். படம் முழுவதும் இவரின் ஆர்ப்பாட்டமான அமைதியான நடிப்பு படத்திற்கு பலம்.
எஸ்ஐ மணியாக கஜராஜ், ஆம்னி பஸ் கிளீனர் மாரியாக முருகதாஸ், அரசியல் வில்லனாக திலீபன், ஜீவாவாக ராஜ் அய்யப்பா, தங்கதுரை, டாக்டராக வரும் ஜீவா ரவி, சரவணசுப்பையா, உதயா, ஷருமிஷா, நிரஞ்சனா சிபிராஜ் உடன் பயணித்து தீவிரமான குற்ற பின்னணி கொண்ட படத்திற்கு தங்களது இருப்பால் கூடுதல் பலம் சேர்த்து திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்திற்கு பெரும்பங்காற்றியுள்ளனர்.
கே.எஸ். சுந்தரமூர்த்தி இசை, ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு, லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங், ஸ்டண்ட் சக்தி சரவணன் மற்றும் கலை இயக்கம் அருண்ஷங்கர் துரை க்ரைம் த்ரில்லர் பாணி கதைக்களத்திற்கேற்ற காட்சிகளுக்கும், ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களுக்கும், சேசிங், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கும் இரண்டு மணி நேரத்திற்குள் படத்தை முடித்து தொழில்நுட்ப கலைஞர்;களாக தங்களது உழைப்பை கொடுத்து பரபரப்பை கூட்டியுள்ளனர்.
காணாமல் போகும் பெண்ணை தேடும் முயற்சியில் ஒரு பெண், ஒரு ஆண், மற்றும் சக காவலர்கள் என்று கொலைகள் தொடர, இதற்கு காரணமாக இருக்கும் முக்கிய புள்ளி யார்? எதற்காக? என்பதை தடயமே இல்லாத விசாரணையில் சாதுர்யமாக செயல்பட்டு டென் அவர்ஸ்ஸில் ஒரே இரவில் குற்றவாளியை கைது செய்வதே படத்தின் கதைக்களமாகயமைத்து கூடுதல் சிறப்புடனும், திருப்பங்களுடனும் சாதுர்யத்துடன் இயக்கி கை தட்டல் பெறுகிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள்.பல கிளைகளாக விரியும் கதைக்களத்தில் ஒரு மையப்புள்ளியில் தேர்தல், அரசியலை இணைத்து தோய்வில்லாமல் கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில் டூவின் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்; சார்பில் லதா பாலு மற்றும் துர்கைனி வினோத் ஆகியோர் தயாரித்துள்ள டென் ஹவர்ஸ் வேகமும், விறுவிறுப்பும் க்ரைம் கலந்த திருப்பங்கள் நிறைந்த கடத்தல் பயணம்.