டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) சினிமா விமர்சனம்: டூரிஸ்ட் பேமிலி படத்தை குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம், கொண்டாடலாம் | ரேட்டிங்: 3/5
மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் சார்பில் பசிலியான் நசரேத், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கும் டூரிஸ்ட் பேமிலி படத்தை எழுதி இயக்கியிருக்கிறர் அபிஷன் ஜீவிந்.
இதில் எம்.சசிகுமார்-தர்மதாஸ், சிம்ரன்-வசந்தி, மதுன் ஜெய் சங்கர்-நிதுஷன், கமலெஷ் ஜெகன்-முள்ளி, யோகிபாபு-பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் – ரிச்சர்ட், ரமேஷ் திலக்-பைரவன், பக்ஸ் (எ) பகவதி பெருமாள்- ராகவன், இளங்கோ குமரவேல் – குணசேகர், ஸ்ரீஜா ரவி- மங்கையர்க்கரசி யோகலட்சுமி-குறல் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஷான் ரோல்டன், படத்தொகுப்பு-பரத் விக்ரமன், ஒளிப்பதிவு-அரவிந்த் விஸ்வநாதன், ஆடை வடிவமைப்பு-நவா ராஜ்குமார், கலை இயக்குனர்-ராஜ் கமல், விளம்பர வடிவமைப்பு- சரத் ஜெ. சாமுவேல், மக்கள் தொடர்பு-யுவராஜ்.
இலங்கையில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியாலும், உயிர் பயத்தாலும், குடும்பத்iத காப்பாற்றவும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தர்மதாஸ் (சசிகுமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), இரு மகன்கள் நிதுஷான்,முள்ளி (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நான்கு பேரும் சட்ட விரோதமாக படகில் ராமேஸ்வரத்திற்குத் தப்பித்து வருகிறார்கள். அங்கிருந்து அவர்களை காப்பாற்றி வசந்தியின் அண்ணன்(யோகி பாபு) இவர்களுக்கு சென்னையில் ஒரு குடியிருப்புப் பகுதியில் வாழ்க்கையை தொடங்க உதவி செய்கிறார். அங்கிருப்பவர்களிடம் ஈழத் தமிழர்கள், அகதிகள் என்பதை மறைத்து அனைவரிடமும் பாசத்தோடு பழகி அவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடக்க, போலீஸ் இலங்கையிலிருந்து வந்தவர்களை திட்டமிட்டு சதி வேலையை செய்ததாக சந்தேகத்தோடு தேட ஆரம்பிக்கிறார்கள். தர்மதாஸ் மற்றும் குடும்பத்தின் அடையாளத்தைப் பற்றி அவர்கள் கண்டுபிடிப்பார்களா? அவர்கள் பயங்கரவாதிகள் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டினார்களா? ராமதாஸ் குடும்பம் அப்பாவிகள் என்பதை நிரூபிக்க முடிந்ததா? அதன் பின் என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு இரண்டு மணி நேரம் 10 நிமிடங்களில் பதில்களை அறிந்து கொள்ளலாம்.
இலங்கை தமிழராக தர்மதாஸாக சசிகுமார் புத்திசாலித்தனம் நிறைந்த மனிதநேயமிக்கவர், அகதியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தாலும், புதிய வாழ்க்கையை வாழ்வதற்காக தன்னுடைய கஷ்டங்களை மறைத்து, மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் ஒரு நல்ல மனிதராக படத்தில் வாழ்ந்திருக்கிறார். அவரின் மேம்பட்ட வசன உச்சரிப்பு, குடும்பத்திற்காக பதறும் காட்சிகள், குழந்தைகளிடம் காட்டும் அன்பு, கண்டிப்பு, சந்தேகத்துடன் பார்க்கும் காவல்துறையை சமாளிக்கும் போதும், கலங்கும் போதும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்.
மனைவி வசந்தியாக சிம்ரன் தன்னுடைய அனுபவ நடிப்பால் சந்தோஷம், துக்கம் என்று அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்து கை தட்டல் பெறுகிறார். கணவன் மனைவி காதலும் அவர்கள் காட்டும் உறவும் படத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரு மகன்களாக வரும் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் பங்களிப்பு அழுத்தமாக காட்சிகளுக்கும், தந்தை-மகன் மோதல் கூட உரையாடலின் மூலம் தீர்க்கப்பட்டு நகைச்சுவையாக கொடுத்திருப்பதும், முள்ளியாக வரும் கமலேஷ் படத்தில் சுட்டித்தனத்துடன், நகைச்சுவை காட்சிக்கும் திருப்புமுனை காட்சிக்கும் தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பால் கூடுதல் மெருகேற்றி படத்திற்கு ப்ளஸ்ஸாக விளங்குகிறார்.
மற்றும் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் (எ) பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலட்சுமி ஆகியோரின் பங்களிப்பு உயிரோட்டமுள்ள கதைக்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையும், பின்னணி இசையும் தத்ரூபமான காட்சிகளுக்கு முழு பங்களிப்பை கொடுத்துள்ளார். வெல்டன்
பரத் விக்ரமன் படத்தொகுப்பு கச்சிதம்.
அரவிந்த் விஸ்வநாதன் இலங்கை, ராமேஷ்வரம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கும் சம்பவங்களை யதார்த்தமாக பதிவு செய்வதுடன், அதற்கான காட்சி கோணங்களில் ஒளிப்பதிவில் அசர வைத்துள்ளார்.
பல நாடுகளிலிருந்து அகதிகளாக புதிய நாட்டிற்கு புலம் பெயரும் குடும்பங்கள் படும் இன்னல்களை அழகாக நகைச்சுவை கலந்து அகதிகள் செழிக்க வாய்ப்புகளை அனுமதித்தால் விஷயங்கள் சிறப்பாக அமையும் என்பதை எடுத்துரைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந். புதிய இடத்தில் வேறுபாடுகள் மிகப் பெரியதாக இருந்தாலும் ஒற்றுமையுடன் இருந்தால் எதுவும் செய்ய முடியாது என்பதைச் சொல்வதோடு, மனிதம், சகோதரத்துவத்துடன் இருந்தால் நன்மை தீமை கலந்தே இருக்கும் இந்த உலகில் நம்பிக்கையுடன் முன்னேறுவதே ஒரே வழி என்பதை முக்கிய கதையுடன் பல கிளைக்கதைகளை ஒருங்கிணைத்து தீர்க்கமாக சொல்லியிருக்கிறார். வாழ்க்கையைப் போலவே, இந்த படம் நகைச்சுவை, தீவிர நிகழ்வுகள், போராட்டங்கள் மற்றும் தீமையை வெல்லும் நன்மை என்று இயக்குனர் அபிஷன் ஜீவிந்தின் ஒரு அற்புதமான கதையில் அண்டை வீட்டாரையும் மனிதகுலத்தையும் நேசிக்க வேண்டும் என்ற உன்னத தத்துவத்தை புதிய முயற்சியோடு கொடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள். இவரின் புதிய முயற்சிக்கு நிச்சயம் மகத்தான வெற்றியும், அங்கீகாரமும் கிடைக்கும்.
மொத்தத்தில் மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் சார்பில் பசிலியான் நசரேத், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கும் டூரிஸ்ட் பேமிலி புதிய கோணத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உணர்ச்சிகள், நகைச்சுவை, மனிதநேயம் நிறைந்த படத்தை குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம், கொண்டாடலாம்.