டீன்ஸ் சினிமா விமர்சனம் : டீன்ஸ் இளம் வயதினரை ஈர்க்கும் வெற்றி வாகை சூடும் | ரேட்டிங்: 2.5/5
கால்டுவெல் வேல்நம்பி, டாக்டர் பாலா சுவாமிநாதன், டாக்டர் பிஞ்சி சீனிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் டீன்ஸ்.
இதில் ஜனார்த்தனனாக ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தணிகாசலமாக யோகி பாபு, ஆதித்யனாக தீபேஸ்வரன் ஜி, அஃபிலாக பிராங்கின்ஸ்டன், கே.எஸ். அய்யன்காளியாக தீபன், அபூர்வாவாக விஸ்ருதா ஷிவ், திலனாக எல்.ஏ.ரிஷி ரத்னவேல், நஃபிலாக சில்வென்ஸ்டன் , நைனிகாவாக அஸ்மிதா மகாதேவன், நக்ஷத்ராவாக டி.அம்ருதா, நிஷாந்தாக உதயபிரியன் கே, சாராவாக பி.கிருத்திகா, சர்வேஷாக டி.ஜான் போஸ்கோ, ஷானாக ரோஷன், டீனாவாக பிரஷிதா நசீர் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழு: இசையமைப்பாளர்: டி. இம்மான், ஒளிப்பதிவு: கேவெமிக் ஆரி ,அதிரடி – ஸ்டண்ட் சில்வா, முகேஷ், விளம்பர வடிவமைப்பாளர் – கண்ணதாசன் டி.கே.டி, கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள்: கீர்த்தனா பார்த்தீபன் அக்கினேனி,மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
டீனேஜ் வயதுடைய பதின்மூன்று சிறுவர், சிறுமியர்கள் ஒரே காலனியில் வசித்து ஒரே பள்ளியில் படிப்பவர்கள். இவர்கள் அனைவரும் பெற்றோரின் கண்டிப்பும், சுதந்திரம் இல்லாமல் கட்டப்பாடு விதிக்கும் முறையையும் விமர்சித்து, தாங்கள் குழந்தைகள் இல்லை பெரியவர்கள் என்பதை பெற்றோர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக ஊரில் சக தோழியின் பாட்டி வீட்டிற்கு சென்று அங்கே கிணற்றில் பேய் இருப்பதை தைரியமாக எதிர்கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர். மறுநாள் பள்ளிக்கு சென்று பதிமூன்று பேரும் வேறு உடை மாற்றிக் கொண்டு பள்ளியிலிருந்து தப்பித்து பேருந்தில் செல்ல திட்டமிடும் போது சொதப்பலாகி பாதை மாறி காட்டுப் பகுதிக்கு சென்று விடுகின்றனர். பின்னர் நடை பயணத்தின் போது ஒருவர் பின் ஒருவராக மாயமாகி போக மீதமுள்ள சிறுவர்களுக்கு பயமுண்டாகிறது. அப்பொழுது தன்னுடன் இருந்த சிறுமி அவர்கள் கண் முன்னே சிறிய உருவமாக மாறி ஒரு புதுவித சிறிய வண்டியில் பயணிப்பதையும் கவனிக்கின்றனர். அதே சமயம் ஏரோபிசிசிஸ்ட்டாக ஏலியன் உலகத்தைப் பற்றி அறிவியல் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் பார்த்திபனை பார்க்கின்றனர். அதன் பின் என்ன ஆனாது? சிறுவர்கள் தங்கள் நண்பர்களை கண்டுபிடித்தார்களா? இவர்களுக்கு பார்த்திபன் உதவி செய்தாரா? மாயமான சிறுவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்களை கடத்திக் கொண்டு போகும் அமானுஷ்ய சக்தி யார்? காரணம் என்ன? என்பதே படத்தின் முடிவு.
படத்தில் நடித்த சிறுவர், சிறுமியர்கள் தீபேஸ்வரன் ஜி, பிராங்கின்ஸ்டன், தீபன், விஸ்ருதா ஷிவ், ரிஷி ரத்னவேல், சில்வென்ஸ்டன், அஸ்மிதா மகாதேவன், டி.அம்ருதா, உதயபிரியன், பி.கிருத்திகா, டி.ஜான் போஸ்கோ, ரோஷன், பிரஷிதா நசீர் ஆகியோர் முதல் காட்சியிலேயே வயதுக்கு மீறிய பேச்சுக்கள், வசனங்களால் நெருடலை கொடுத்தாலும், பின்னர் அவர்களின் பயணத்தில் ஏற்படும் தடங்கல்களை பார்த்து பயந்து, அலறும் காட்சிகளிலும், பிறருக்காக உதவி செய்யும் நேரத்திலும் மனதில் நிற்கிறார்கள். இடையே விடலை பருவ காதலை சொல்லியிருக்கும் விதம் நெருடலாக உள்ளதை தவிர்த்திருக்கலாம்.
ஏலியன் உலகத்தை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி ஜனார்தனனாக ராதாகிருஷ்ணன் பார்த்திபன் பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத ஏலியன் இருப்பிடத்தை பலவித ஆராய்ச்சி கருவிகளை வைத்துக் கொண்டு ஒருவித புவிஈர்ப்பு சக்திகள் ஒரு இடத்தில் இருப்பதை உணர்ந்து பரவசப்பட்டு அதை நோக்கி தன்னுடைய பைக்கில் பயணிப்பதும், அதற்காக விதவிதமாக கண்ணாடிகளை அணிந்து கொண்டு பார்ப்பது, அடிக்கடி உடல் சோர்விற்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, பின்னர் ஏலியனிடமிருந்து சிறுவர்களை காப்பாற்ற முயற்சி செய்வது என்று புத்தம் புது தோற்றத்துடனும் பொலிவுடனும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை மிகையில்லாமல் வழங்கி சிறப்பு செய்திருக்கிறார்.
தணிகாசலமாக யோகி பாபு கதைக்கு தேவையில்லாத கதாபாத்திரம்.
இம்மான் இசையில் முதலில் வரும் சிறுவர்களின் பெயர்களை வைத்து வரும் பாடலும், இறுதியில் குழந்தைகளின் துள்ளல் பாடலும் கவனிக்க வைக்கிறது. கேவெமிக் ஆரி ஒளிப்பதிவு படத்தின் அறிவியல் ஆராய்ச்சி ம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
டீனேஜ் சிறுவர்களின் மனநிலையை பிரதிபலித்து, அதில் அமானுஷ்யம் அறிவியல் தொழில்நுட்பம் கலந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து புதிய கோணத்தில் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் படைப்பு சிறப்பு.பட்ஜெட்டுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை வைத்து, சாதுர்யமாக கொடுத்திருக்கும் இவரின் அபரிதமான உழைப்பு, முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் கால்டுவெல் வேல்நம்பி, டாக்டர் பாலா சுவாமிநாதன், டாக்டர் பிஞ்சி சீனிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்து தயாரித்துள்ள டீன்ஸ் இளம் வயதினரை ஈர்;க்கும் வெற்றி வாகை சூடும்.