டிராகன் சினிமா விமர்சனம் : டிராகன் புத்துணர்ச்சி தரும் வித்தியாசமான திரைக்கதையில் வசீகரிக்கும் | ரேட்டிங்: 4/5

0
1595

டிராகன் சினிமா விமர்சனம் : டிராகன் புத்துணர்ச்சி தரும் வித்தியாசமான திரைக்கதையில் வசீகரிக்கும் | ரேட்டிங்: 4/5

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (பி) லிமிடெட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் தயாரித்திருக்கும் டிராகன் படத்தை அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருக்கிறார்.

இதில் பிரதீப் ரங்கநாதன் – டி ராகவன், அனுபமா பரமேஸ்வரன் – கீர்த்தி, கயாடு லோஹர் – பல்லவி, வி.ஜே.​சித்து – அன்பு, ஹர்ஷத் கான் – கேடி (ஏ) வெற்றி, கே.எஸ்.ரவிக்குமார் – பரசுராம், மிஷ்கின் – மயில்வாஹனன், கௌதம் வாசுதேவ் மேனன் – வேல் குமார், மரியம் ஜார்ஜ் – தனபால், இந்துமதி – சித்ரா, தேனப்பன் – தேனப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம், இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ், ஒளிப்பதிவு இயக்குனர்: நிகேத் பொம்மி, எடிட்டர்: பிரதீப் இ ராகவ், பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன், கோ சேஷா, கானா அபேலோ, சண்டை : விக்கி மற்றும் திலீப் சுப்பராயன், நடனம்: பிருந்தா, சாண்டி, அசார், ஜே.டி, கதை: அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன், திரைக்கதை, வசனம்: அஸ்வத் மாரிமுத்து, ஆடை வடிவமைப்பாளர்கள்: தினேஷ் மனோகரன், பிரவீன் ராஜா,மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

பள்ளியில் முதலிடம் பிடித்து நன்றாக படிக்கும் மாணவன் டி ராகவன் (பிரதீப் ரங்கநாதன்), உடன் படிக்கும் ஒரு மாணவியிடம் தன் காதலை சொல்ல, அந்த மாணவி ராகவனை நிராகரித்து விட்டு கெத்தாக சுற்றி வரும் ஒரு போக்கிரித்தனமான மாணவன் தான் தனக்கு பிடிக்கும் என்று கூறுகிறாள். அதன் பிறகு கல்லூரியில் சேரும் ராகவன் படிப்பில் கவனம் செலுத்தாமல், மாணவன் தலைவனாக அடிதடி, அடாவடி என்று டிராகன் என்ற பெயரில் போக்கிரியாக அட்டகாசம் செய்து கெத்தாக வலம் வருகிறான். கல்லூரி முதல்வர் மயில்வாஹனனுடன் (மிஷ்கின்) ஏற்படும் பிரச்சனையால் 48 அரியர்களுடன் இறுதி ஆண்டு முடியும் தருவாயில் கல்லூரியை விட்டு அரியரை பாஸ் செய்யாமல் வெளியேறுகிறார். மேலும் டிராகனின் இந்த ஊதாரித்தனத்தால் அவரது கல்லூரி காதலி கீர்த்தி (அனுபமா பரமேஸ்வரன்) பிரேக்கப் செய்து பிரிந்து திருமணம் செய்து கொண்டு சென்று விடுகிறார்.ராகவன் 2 வருடங்களாக பட்டதாரி என்று சொல்லிக் கொண்டு வேலை வெட்டி எதுவும் செய்யாமல் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு நண்பர்களிடம் பணம் வாங்கி பெற்றோரை ஏமாற்றி  வேலைக்கு சென்று வருவது போல் பாசாங்கு செய்து வருகிறார். தனது முன்னாள் காதலியால் ஏற்பட்ட அவமானத்தை போக்கி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென திடீரென்று முடிவெடுக்கும் ராகவன் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கிறார். போலி டிகிரி சான்றிதழ்களைப் பயன்படுத்தி, வேல் குமாரின் (கௌதம் வாசுதேவ் மேனன்) பிரபல நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் ஐடி கம்பெனியில் வேலையைப் பெறுகிறார். முறையான பொறியியல் பட்டம் இல்லாத போதிலும், ராகவன் படிப்படியாக வேலையை கற்றுணர்ந்து உழைத்து கைநிறைய சம்பாதித்து துறையில் சிறந்து விளங்குகிறார். அவரது குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சியால் ஈர்க்கப்பட்ட ஒரு பிரபல தொழிலதிபர், பரசுராம் (கே.எஸ்.ரவிக்குமார்) தனது மகள் பல்லவியை (கயாடு லோஹர்) ராகவனுக்கு திருமணம் செய்து வைக்க முன்வருகிறார். திருமண ஏற்பாடுகள் நடைபெறும் வேளையில் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் டிராகனுக்கு எதிர்பாராத வகையில் திடீரென சிக்கல் ஒன்று கல்லூரி முதல்வர் மயில்வாஹனன் மூலம் வருகிறது. அதாவது ஏற்கனவே பகையில் இருக்கும் கல்லூரி முதல்வர் மயில்வாஹனன் டிராகனின் மோசடியைக் கண்டுபிடித்து, டிராகன் மீண்டும் கல்லூரிக்குச் சென்று படித்து 48 அரியர்களையும் எழுதி பாஸ் செய்து உண்மையான பட்டம் பெற்றால் தான் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணிபுரியலாம், அப்படி தோல்வியடைந்தால் அவரது முதலாளி மற்றும் வருங்கால மனைவிக்கு முன்பாக அம்பலப்படுத்தி அவமானப்படுத்துவேன் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கிறார். வேறு வழியில்லாமல், மூன்று மாதங்கள் பெற்றோர் மற்றும் வருங்கால மாமனார் குடும்பத்தில் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக பொய் சொல்லி விட்டு டிராகன் மீண்டும் கல்லூரி வளாகத்திறகு நுழைகிறார். இறுதியில் டிராகன் அரியர்ஸை பாஸ் செய்தாரா? பட்டதாரியாக முடிந்ததா? அதற்காக டிராகன் என்ற முயற்சிகள் செய்தார்? அவரின் படிப்பிற்கு உதவியவர் யார்? அதனால் எத்தகைய இக்கட்டில் மாட்டிக் கொண்டார்? டிராகனின் வாழ்க்கை பழையபடி சந்தோஷமாக வாழ்ந்தாரா? திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே திருப்புமுனை க்ளைமேக்ஸ்.

கல்லூரி மாணவராக பிரதீப் ரங்கநாதன்  மேம்பட்ட நடிப்பை கொடுத்து டிராகன் மற்றும் ராகவனாக அடாவடி அலப்பரை செய்து கொண்டு, படிப்பை உதாசீனம் செய்வதும், கவலையின்றி வெட்டி பந்தாவுடன் உலா வருவது, நண்பர்களிடம் உரிமையோடு அதட்டி பணம் வாங்கிச் செல்வது, பெற்றோர்கள் ஏமாற்றுவது என்று அத்தனை இம்சைகளையும் கொடுக்கும் கதாபாத்திரம். அதன் பின்னர் எடுக்கும் முடிவு, சுலபமாக வேலை கிடைக்க எடுக்கும் தப்பான வழிமுறைகள், அதனால் ஏற்படும் சிக்கல்கள், அவசர சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நிராசையாகும் தருணங்கள் என்று அச்சு அசலாக இக்கால இளைஞர்கள் சிலரின்  குணாதிசயங்களை தன்னுடைய துள்ளலான நடிப்பின் மூலம் அசத்தியுள்ளார்.

படத்தில் மற்றொரு ஹீரோவாக கல்லூரி முதல்வர் மயில்வாஹனனாக நடிக்கும் மிஷ்கின் ஆரம்பம் முதல் இறுதி வரை கம்பீரமான கல்லூரியின் முதல்வராக மாணவனை நல்வழிப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள், விடுக்கும் சவால்கள், நய்யாண்டிகள், மிரட்டல்கள், நல்ல மாணவனை உருவாக்க எடுக்கும் முயற்சிகள் என்று அத்தனையையும் சுலபமாக தேர்ந்த நடிப்பில் மூலம் வெளிப்படுத்தி படத்திற்கு உயிர் கொடுத்து படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.

முதலில் கல்லூரி மாணவி, முன்னாள் காதலி, விரிவுரையாளராக அனுபமா பரமேஸ்வரன் முதல் பாதியில் கவலையின்றி சுற்றித் திரியும் காதல் பறiவாக வலம் வந்து பின்னர் யதார்த்த உலகை புரிந்து கொண்டு பிரிந்து செல்லும் இடத்திலும், தன் முன்னாள் காதலனின் படிப்பிற்காக பெரு முயற்சிகள் செய்து ஜெயிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள் என்று இரண்டாம் பாதியில் அனுபவ நடிப்பு கை கொடுத்துள்ளது.

வருங்கால மனைவி பல்லவியாக கயாடு லோஹர் அழகாக வந்து சில காட்சிகளுக்கு தன்னுடைய பங்களிப்பை கொடுத்துள்ளார்.

பிரதீப்பின் பாசமிகு தந்தையாக ஜார்ஜ் மரியன் அப்பாவித்தனத்துடன் மகனை அரவணைக்கும் கதாபாத்திரம் மனதை ஈர்க்கும்.

விஜே சித்து, ஹர்ஷத் கான், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், இந்துமதி, தேனப்பன் உட்பட அனைவரும் படத்திற்கு அசுர பலம் சேர்த்துள்ளனர்.

விக்னேஷ் சிவன், கோ சேஷா, கானா அபேலோ ஆகியோரின் பாடல் வரிகள் லியோன் ஜேம்ஸ் இசையில் அசத்தல் ரகம். பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு கை கொடுத்துள்ளது.

ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு, பள்ளி, ஐடி, கல்லூரி வளாககங்களில் தன் தனித்திறமையை கையாண்டு காட்சிக் கோணங்களில் செதுக்கியுள்ளார்.

பிரதீப் இ ராகவின் எடிட்டிங்  திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

ஒரு மாணவன் கல்லூரி வாழ்க்கையை எப்படி வாழக் கூடாது என்பதையும், பட்டம் பெறாமல் மோசடி செய்து செய்யும் எந்த ஒரு காரியமும் இன்னல்களைத் தான் தரும் என்பதையும், படிப்பின் அவசியத்தையும், மற்றவர்களை ஏமாற்றாமல், குறுக்கு வழியில் செல்ல நினைக்காமல் இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ்ந்தாலே அனைத்தும் கிட்டும் என்பதை ஆணித்தரமாக, நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் இயக்கியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

மொத்தத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (பி) லிமிடெட் தயாரித்துள்ள டிராகன் புத்துணர்ச்சி தரும் வித்தியாசமான திரைக்கதையில் வசீகரிக்கும்.