டிடி நெக்ஸ்ட் லெவல் (டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்) சினிமா விமர்சனம் : டிடி நெக்ஸ்ட் லெவல் கலாய்க்கும் சினிமா விமர்சகர்களை துரத்தி காலி செய்ய துடிக்கும் திகில் பேய் | ரேட்டிங்: 2/5

0
612

டிடி நெக்ஸ்ட் லெவல் (டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்) சினிமா விமர்சனம் : டிடி நெக்ஸ்ட் லெவல் கலாய்க்கும் சினிமா விமர்சகர்களை துரத்தி காலி செய்ய துடிக்கும் திகில் பேய் | ரேட்டிங்: 2/5

நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து தி ஷோ பீப்பிள் சார்பில் ஆர்யா வழங்க டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பிரேம் ஆனந்த்.

இதில் சந்தானம் – கிஸ்ஸா 47, கீத்திகா திவாரி – ​ஆசை ஹர்ஷினி, செல்வராகவன் – ஹிட்ச் காக் இருதயராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் – ராகவன், கஸ்தூரி – ஷில்பா, யாஷிகா ஆனந்த் – மாயா, நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு: தீபக் குமார் பதி, இசை: ஆஃப்ரோ, எடிட்டர்: பரத் விக்ரமன், கலை: ஏ.ஆர்.மோகன், சண்டைக்காட்சி: சில்வா, ஹரி தினேஷ், நடனம்: கல்யாண், விஎஃப்எக்ஸ் : ஆர். ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோஸ்), ஒலி கலவை: ராஜாகிருஷ்ணன், விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக், நிர்வாக தயாரிப்பாளர்கள்: கே.மதன்ராஜ், ஆடை வடிவமைப்பாளர்: ஜாஸ்மின் ஜோசப், ஸ்டில்ஸ் :  சாய் சந்தோஷ்,மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.

நவீன யூடியூப் விமர்சகர்கள் படங்கள் வெளியானதும் தங்கள் விமர்சனங்களை கொடுத்து கஷ்டப்பட்டு தயாரித்த படங்களை ஒடவிடாமல் செய்வதால் அவர்களால் பாதிக்கப்பட்ட ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) என்ற இயக்குனர் இறந்த பிறகு பேயாக மாறி சினிமா பாரடைஸ் என்ற தியேட்டருக்கு விமர்சகர்களை வரவழைத்து அவர்களை கொல்வதாக படம் தொடங்குகிறது. அதன்படி கிஸ்ஸா 47, என்ற யூடியூப் சேனலில் தாறுமாறாக விமர்சனங்களை வழங்கும் கிருஷ்ணாவிற்கு (சந்தானம்) கோல்டன் டிக்கெட் வழங்கி குடும்பத்துடன் சினிமா பாரடைஸில் படம் பார்க்க அழைப்பு விடுக்கிறார் ஹிட்ச்காக் இருதயராஜ். கிருஷ்ணா அந்த தியேட்டரை கண்டறிந்து பாழடைந்த நிலையில் இருப்பதை அறிந்து ஏதோ மர்மம் இருப்பதாக நினைத்து வீட்டிற்கு வருகிறார். ஆனால் அதற்குள் கிருஷ்ணாவின் காதலி ஹர்ஷினி (கீதிகா திவாரி), அம்மா ஷில்பா (கஸ்தூரி), அப்பா (நிழல்கள் ரவி), தங்கை மாயா (யாஷிகா ஆனந்த்) அனைவருமே படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுவிட அவர்களை தடுப்பதற்காக விரைகிறார் கிருஷ்ணா. ஆனால் அதற்குள் ஹிட்ச்காக் இருதயராஜ் அவரது குடும்பத்தினர் மற்றும் காதலியை திரைப்படக் கதாபாத்திரங்களாக மாற்றி காணாமல் செய்து விடுகிறார். கிஸ்ஸாவும் அவரது நண்பர் வீண் பேச்சு பாபுவும் (ராஜேந்திரன்) குடும்பத்தைக் காப்பாற்ற ஹிட்ச்காக் இருதயராஜ் திரைக்கதையில் நுழைகிறார்கள். அந்த திரைக்கதையில் சொகுசு கப்பலில் பயணிக்கும் தாய் ஷில்பா தெலுங்கு பேசும் மாடர்ன் பெண்மணியாக, தந்தை நிழல்கள் ரவி கப்பல் கேப்டன் மெக்டொனால்டாகவும், சகோதரி மாயா அல்ட்ரா மாடர்ன் கவர்;ச்சி பெண்ணாக துப்பறிவாளன் ராகவன் கௌதம் வாசுதேவ் மேனனை துரத்தி காதலிக்கும் கதாபாத்திரங்களாக இருக்கின்றனர்.இவர்களை ஒவ்வொருவராக கொல்ல முகமூடி அணிந்த கொலையாளி பின் தொடர்ந்து பழி வாங்க துடிக்கிறான். இதனை அறிந்து கொள்ளும் கிஸ்ஸா முகமூடி அணிந்த கொலையாளியை பின் தொடர்ந்து தாக்கி தன் குடும்பத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார். அப்பொழுது கப்பல் பழுதாக, அதில் பயணம் செய்யும் அனைவரையும் ஒரு மர்ம தீவில் பாழடைந்த மாளிகையில்  தங்க வைக்க ஏற்பாடு செய்கின்றனர். அந்த மாளிகையில் தான் காதலி ஹர்ஷினியை மனித மாமிசத்தை உண்ணும் கேனிபல்ஸால் கொல்லப்பட்டு பேயாக இருப்பதை அறிகிறார். ஹர்ஷினி அந்த பங்களாவில் பேயாக திரிவதும், தன்னை கொன்றவர்களை பழி வாங்க சமயம் பார்த்துக் கொண்டிருப்பதும், கிஸ்ஸா மற்றும் அனைவரையும் சேர்த்து கொல்ல துரத்துகிறது. இறுதியில் கிஸ்ஸாவால் குடும்பத்தினரையும், காதலியையும் காப்பாற்ற முடிந்ததா? திரைக்கதை முடிந்து என்ட் கார்ட் போடுதற்குள் அனைவரையும் மீட்டாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சந்தானத்தின் படங்களில் பேய், கற்பனை கலந்த திரைக்கதையோடு கூடிய நகைச்சுவையில் கலக்குவார். ஆனால் இதில் ஸ்டைலீஷ் ஸ்டெப் ஹேர் கட்டிங், நுனி நாக்கு ஆங்கிலத்துடன் ப்ரோ என்று நாகரீக உச்சரிப்புடன் புதுமையான கெட்டப்பில் சினிமா விமர்சகரின் அடையாளங்களோடு களமிறங்கியிருந்தாலும், படத்தில் எதுவும் கவரவில்லை. அனைத்து காட்சிகளிலும் சாதாரணமான சந்தானமாக தெரிகிறாரே தவிர கலகல சந்தானமாக பார்க்க முடியவில்லை.

நடுத்தர வயதுடைய குடும்ப தலைவியாக சிம்பிளாக வரும் கஸ்தூரி கப்பலுக்குள் நுழைந்தவுடன் தெலுங்கு பேசும் மாடர்ன் கவர்ச்சி தூக்கலான திருடியாக கலக்கி உள்ளார்.

ஆட்டோ டிரைவராக அப்பா நிழல்கள் ரவி படத்துக்குள் கப்பலின் கேப்டனாக தன்னுடைய பாணியில் சிரிக்க வைக்க முயற்சிசெய்துள்ளார்.

காதலியாக கீத்திகா அழகு பேயாக வந்து பயமுறுத்தவதில் பாதி ஜெயித்திருக்கிறார்.

அடக்கத்தின் மறுஉருவமாக வரும் தங்கை யாஷிகா ஆனந்த் பின்னர் அழகான காதல்  தேவதையாக கவர்ச்சி தூக்கலுடன் வலம் வருகிறார்.

கௌதம் மேனன் ராகவனாக, வித்தியாசமான கெட்டப்பில் ஹிட்ச்காக் இருதயராஜ் பேயாக செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமாக எடுத்துச் சென்று பின்னர் முக்கியத்துவம் இல்லாதது போல் படைக்கப்பட்டிருக்கிறது.

ஆஃப்ரோவின் இசை மற்றும் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் தீபக் குமார் கேமரா கோணங்கள், படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன், ஸ்டண்ட் சில்வாவின் ஆக்ஷன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் அபரிதமான உழைப்பு அனைத்து காட்சிகளிலும் குறை சொல்ல முடியவில்லை.

சந்தானத்தின் ஹிட் அடித்த டிடி வரிசையில் டிடி நெக்ஸ்ட் லெவல் (டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்) ஒரு மைல்கல் நகைச்சுவையில் கலக்கும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் செல்லும் ரசிகர்களுக்கு, படத்தில் கற்பனை கலந்த தியேட்டர் பேய், காதல், பழி வாங்குதல், கவர்ச்சி, திகில் நிறைந்து புதிய கோணத்தில் படத்திற்குள் படமாக கொடுக்க முயற்சித்திருந்தாலும் போதிய காமெடி காட்சிகள் படத்தில் குறைவாக இருப்பதால் தோய்வை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த். இரண்டாம் பாதியில் படத்தை எப்படி முடிப்பது என்ற குழப்பத்தில் நீண்டு கொண்டே போகும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

மொத்தத்தில் நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் (டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்) கலாய்க்கும் சினிமா விமர்சகர்களை துரத்தி காலி செய்ய துடிக்கும் திகில் பேய்.