ஜோரா கைய தட்டுங்க சினிமா விமர்சனம் : ஜோரா கைய தட்டுங்க பழி வாங்கும் தந்திரக்காரன் | ரேட்டிங்: 2.5/5
வாமா என்டர்டைன்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரித்து, கதை திரைக்கதை வசனத்தை வினீஷ் மில்லினியம் மற்றும் கே. பிரகாஷ் இணைந்து எழுதி, வினீஷ் மில்லெனியம் இயக்கி இருக்கும் படம் ஜோரா கைய தட்டுங்க.
இதில் யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பேரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழுவினர்கள்:-கோ பேனர்-ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ், கோ தயாரிப்பாளர்-ஜி சரவணா, இசை – எஸ்.என் அருணகிரி, பின்னணி இசை – ஜித்தின் கே ரோஷன், ஒளிப்பதிவாளர் – மது அம்பாட், எடிட்டர் – சாபு ஜோசப், பாடல் வரிகள் – மணி அமுதவன், ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா, நடனம் – விஜய் சிவசங்கர்,வாடிக்கையாளர் – ராதாகிருஷ்ணன், கலை : எஸ் அய்யப்பன், இணை இயக்குனர் – ஸ்ரீனிவாஸ், வண்ணம் – ரகு ராம், ஸ்டில்ஸ் – மணிவண்ணன், மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் (எஸ்2 மீடியா)
மலைபிரதேசத்தில் பிரபலமான மேஜிக் கலைஞர் யோகி பாபுவின் தந்தை தீயில் செயற்கரிய வித்தையை செய்யும் போது தீக்காயங்களுடன் இறந்து விடுகிறார். மகன் யோகி பாபு சிறு வயதிலிருந்தே தந்தையின் விந்தையை பார்த்து வளர்ந்தவர். அவரின் சில வித்தைகளை கற்றுக் கொண்டிருக்கும் போதே தந்தை இறந்து விட, தனக்கு தெரிந்த வித்தைகளை செய்து பிழைப்பை நடத்தினாலும் அவரால் அந்த தொழிலில் பிரகாசிக்க முடியவில்லை. தன் தந்தையின் நினைவாக பாழடைந்த பங்களாவில் தனிமையில் வசிக்கிறார். அவர் வீட்டருகே மூன்று இளைஞர்கள் சதா குடித்து கொண்டு யோகி பாபுவை கிண்டல் செய்து கொண்டு, வெறுப்பேற்றி வருகின்றனர். இந்நிலையில் யோகி பாபுவின் மேஜிக்கால் ஒரு குழந்தை பாதிக்கப்பட மக்கள் கொந்தளிக்கிறார்கள். இதனால் யோகி பாபுவை போலீசார் கைது செய்து அடித்து அனுப்பி விடுகிறார்கள். இவரின் மேஜிக்கை பற்றி ஆராய்ச்சி செய்ய வரும் நாயகி சாந்தி ராவ், வாய்ப்புக்கள் தேடி தந்தாலும் சரியாக மேஜிக் செய்ய முடியாமல் யோகி பாபு தவிக்கிறார். தொழில் விஷயமாக அடிக்கடி பார்க்க வரும் சாந்தி ராவை கிண்டல் செய்யும் அந்த மூன்று இளைஞர்களில் ஒருவரை அடித்து விடுகிறார் யோகிபாபு. அதன் பிறகு அந்த இளைஞர் ரவுடியை வைத்து யோகி பாபுவின் கையை வெட்ட அவரால் மேஜிக் செய்ய முடியாமல் போகிறது.அதே சமயம் யோகி பாபுவுக்கு நெருக்குமான சிறுமியை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறது. இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் யோகி பாபு தன் தந்திர திறமையால் ரவுடி மற்றும் மூன்று இளைஞர்;களையும் சட்டத்தில் சிக்காமல் எப்படி பழி தீர்த்தார் என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
யோகி பாபு மேஜிக்மேனாக உடம்பை வறுத்தாமல் வித்தைகளை முடிந்தவரை செய்துள்ளார். இயக்குனரின் விருப்பப்படி சொல்லியதை செய்து எந்த ஒரு மெனக்கெடலும் பெரிதாக செய்யாததால் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. தந்தை சென்டிமெண்ட், பழி வாங்கும் நோக்கம் காட்சிகளில் அழுத்தம் எதுவும் இல்லாததால் வொர்க்அவுட் ஆகவில்லை.
சாந்தி ராவ், ஹரீஷ் பேரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார் ஆகியோரை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் இயக்குனர்.
தந்திரக் காட்சிகள், மலைப்பிரதேசங்களின் அழகு, தனிமையான பங்களா என்று ஒளிப்பதிவாளர் மது அம்பாட் தான் படத்திற்கு ஆறுதல். இசையமைப்பாளர் எஸ்.என். அருணகிரி, பின்னணி இசையமைப்பாளர் ஜித்தின் கே ரோஷன், எடிட்டர் சாபு ஜோசப், கலை இயக்குநர் எஸ். அய்யப்பன், ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா ஆகியோர் தொழில்நுட்ப ரீதியாக சரியான பங்களிப்பை கொடுத்திருந்தாலும் படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளது.
அப்பாவியான மேஜிக்மேனின் வாழ்க்கை மற்றும் ஒரு சிறுமியின் உயிர் என்று மூன்று இளைஞர்களால் பறிக்கப்பட அவர்களை பழி வாங்கவும், சட்டத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் தந்திர ஜாலங்களை பயன்படுத்துவதை திரைக்கதையாக எழுதி இயக்கியிருக்கிறார் வினீஷ் மில்லெனியம். நகைச்சுவை, சென்டிமெண்ட், மேஜிக், காதல், பழி வாங்குதல் என்று எதையும் சரியாக பதிவு செய்யப்படாமல் இருப்பதால் ஆரம்பம் முதல் முடிவு வரை துண்டு துண்டாக காட்சிகள் தொடர்பு இல்லாமல் கதையில் தோய்வை ஏற்படுத்திவிடுகிறது.
மொத்தத்தில் வாமா என்டர்டைன்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரித்திருக்கும் ஜோரா கைய தட்டுங்க பழி வாங்கும் தந்திரக்காரன்.