சுமோ சினிமா விமர்சனம் : சுமோ சுவாரஸ்யம் குறைவு | ரேட்டிங்: 2/5
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் சுமோ படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ஹோசிமின்.
இதில் சிவா, பிரியா ஆனந்த், யோஷினோரி தாஷிரோ,‘யோகி’ பாபு, சதிஷ்,‘விடிவி’ கணேஷ், ‘நிழல்கள்’ ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேத்தன்,ஸ்ரீநாத், பெசன்ட் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவு : ராஜீவ் மேனன், இசை : நிவாஸ் கே.பிரசன்னா, வசனம் மற்றும் திரைக்கதை : சிவா, படத்தொகுப்பு : பிரவீன் கே எல், கலை இயக்கம் : கார்த்திக், நடன இயக்கம் : கல்யாண், சண்டைப் பயிற்சி : பிரதீப், பாடல்கள் : ஏ.மோகன் ராஜன், ஆடை வடிவமைப்பு : பான்சி மற்றும் காவ்யா, ஒப்பனை : சசிகுமார், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : கே.ஆர்.பிரபு, நிர்வாக தயாரிப்பாளர் : கே.அஷ்வின் குமார், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ்.
சென்னை கடற்கரை பகுதியில் ஜாக் (விடிவி கணேஷ்) உணவகம் நடத்திக் கொண்டிருக்க அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் சிவா(மிர்ச்சி சிவா) நல்ல சர்.ஃபிங் விளையாட்டு வீரர். சிவா வெளிநாட்டில் செட்டிலாகி தன் காதலி கனிமொழியை (பிரியா ஆனந்த்) திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்நிலையில் கடற்கரையோரம் பிரம்மாண்ட உருவத்துடன் ஒரு வெளிநாட்டவர் (யோஷினோரி தாஷிரோ) சுயநினைவின்றி கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அவரை காப்பாற்றி உணவு, உடை கொடுத்து கணேஷ் என்று பெயர் சூட்டி தன்னுடன் வைத்துக் கொள்கிறார். அந்த வெளிநாட்டவர் ஒரு குழந்தையை போல் நடந்து கொள்வதும், எப்பொழுதும் சிவாவின் கைவிரலை பிடித்துக் கொண்டு, எந்நேரமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்.அவருக்கு செலவு செய்ய முடியாமல் தவிக்கும் சிவா, அவரை வைத்தே சாப்பாட்டு போட்டியில் பங்குகொள்ள வைத்து ஒரளவு பணம் சம்பாதித்து சமாளித்து வருகிறார். ஒரு நாள் கடைத்தெருவில் ஜப்பான் நாட்டின் கொடியை பார்த்து பிரமை பிடித்தது போல் நின்று விடும் அந்த வெளிநாட்டுக்காரர் செய்கையை கண்டு சிவா ஜப்பானுக்கு சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்கும் ஸ்ரீநாத்தின் உதவியை நாடுகிறார். அவர் கொடுக்கும் தகவலின்படி கணேஷ் ஜப்பான்காரர் என்பதையறிவதும்,அவர் ஒரு சுமோ விளையாட்டில் பிரபலமான மல்யுத்த வீரர் என்பதையறிகிறார் சிவா. அதனால் ஊர் மக்களிடம் பணம் வசூலித்து ஜாக், சிவா, மல்யுத்த வீரர் கணேஷ் மூவரும் ஜப்பான் பயணமாகிறார்கள். தன் நினைவுகளை மறந்த அந்த வீரருக்கு சிறப்பான சிகிச்சை ஜப்பானில் அளிக்க, சிறிது சிறிதாக பழைய நினைவுகள் திரும்ப ஆரம்பிக்கின்றன. அங்கே சுமோ மல்யுத்த வீரரை கொல்ல சதி நடக்கிறது. இறுதியில் சிவா சுமோ வீரரை காப்பாற்றினாரா? சுமோ போட்டியில் கலந்த கொள்ள வைத்து ஜெயிக்க வைத்தாரா? எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்தாரா? என்பதே படத்தின் முடிவு.
சிவா எப்பொழுதும் போல் ஜாலியாக சிரிக்க வைக்க முயற்சி செய்தாலும், கூடவே ஜப்பான்காரரை சமாளிப்பதிலேயே கவனம் செலுத்துவதால் படத்தில் அவரால் அழுத்தமான பதிவை கொடுக்க முடியாமல் போய் விடுகிறது.
ஜப்பான் சுமோ விளையாட்டின் மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோ படத்தின் மையப்புள்ளி என்றாலும், அவரை சரிவர பயன்படுத்த தவறியதால், இந்தியாவிலும் சரி ஜப்பானிலும் சரி இவரின் முக்கியத்துவத்தை உணர முடியாத வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காதலியாக பிரியா ஆனந்துக்கு போதிய வேலையில்லை. விடிவி கணேஷ், ஸ்ரீPநாத், ‘யோகி’ பாபு, சதீஷ் ஆகிய காமெடி நட்சத்திரங்கள் இருந்தும் நகைச்சுவை பஞ்சம் ஏற்பட்டு ரசிக்க முடியாமல் போகிறது.
இவர்களுடன் ‘நிழல்கள்’ ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேத்தன், பெசன்ட் ரவி மற்றும் வெளிநாட்டவர்கள் பலர் இருந்தும் படத்தின் கதைக்கு விறுவிறுப்பை கூட்ட முடியவில்லை.
நிவாஸ் பிரசன்னாவின் இசை, பின்னணி இசையால் படத்தை ஒரளவு தாங்கி பிடித்துள்ளார்.
ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு, எடிட்டர் பிரவீன் கே.எல் எடிட்டிங் கூடுதல் உழைப்பை கொடுக்க தவறிவிட்டனர்.
ஜப்பானில் பிரபல சுமோ வீரரின் புகழையும், வெற்றியையும் தடுக்க அவரின் எதிரிகள் செய்யும் சூழ்ச்சியால் சுயநினைவுகள் இழந்து இந்திய கடலோரம் கண்டுபிடிக்கப்படுபவரை காப்பாற்றி அவரின் அடையாளத்தை மீட்டெடுத்து சொந்த நாட்டிற்கே அழைத்துச் சென்று மீண்டும் வெற்றி வீரராக சாதிக்க வைத்து மனிதாபிமானம், சகோதர தத்துவத்தை நிலைநாட்டும் இளைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி கதையை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி. ஹோசிமின். புதிய முயற்சியாக சுமோ விளையாட்டை கலந்து நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக கொடுத்த நினைத்திருந்தாலும் விறுவிறுப்பு, திருப்புமுனை இல்லாமல் காட்சிகளை அமைத்துள்ளதால் ரசிக்க முடியவில்லை.
மொத்தத்தில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள சுமோ சுவாரஸ்யம் குறைவு.