சாலா சினிமா விமர்சனம் : சாலா ஒல்டு வைன் வித் நியூ பாட்டில் | ரேட்டிங்: 3/5
பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி.விஸ்வபிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ள சாலா திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.டி.மணிபால்.
இதில் சாலாவாக தீரன், புனிதாவாக ரேஷ்மா வெங்கடேஷ், தங்கதுரையாக சார்லஸ் வினோத், தாஸ்ஸாக ஸ்ரீPநாத், குணாவாக அருள்தாஸ் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-இணை தயாரிப்பு – விவேக் குச்சிபோட்லா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – வி. ஸ்ரீ நட்ராஜ், நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய ராஜேஷ், ஒளிப்பதிவு – ரவீந்திரநாத் குரு, இசையமைப்பாளர் – தீசன், ஆசிரியர் – புவன்,கலை இயக்குனர் – வைரபாலன், ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ மற்றும் ரக்கர்ராம், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.வட சென்னையிலுள்ள ராயபுரத்தில் மதுக்கடையை நடத்தும் குணா (அருள்தாஸ்) மற்றும் சத்யா இருவருக்குள்ளும் பகை இருக்கிறது. இதில் பார்வதி பார் என்ற மதுக்கடையை குத்தகைக்கு எடுத்து நடத்தும் பிரச்சனையில் சத்யா கொல்லப்பட, கோஷ்டி மோதலில் குணாவின் உயிரை காப்பாற்றும் சாலாவை(தீரன்) தத்தெடுத்து வளர்கிறார். பார்வதி பார் மூடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இதனிடையே சத்யாவின் உறவினர் தங்கதுரை (சார்லஸ் வினோத்) குணாவை எப்படியாவது கொல்ல வேண்டும், பார்வதி பாரை நடத்த வேண்டும் என்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதே போல் சாலாவும் வளர்ந்து பார்வதி பாரை வழக்கு முடிந்தவுடன் குணாவிற்கு குத்தகைக்கு எடுத்து கொடுத்து நன்றி கடன் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில், அனாதை குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்கும் பள்ளி ஆசிரியர் புனிதா (ரேஷ்மா வெங்கடேஷ்). சமூக ஆர்வலருமான புனிதா பள்ளிகள், கோயில்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட தீவிரமாக எதிர்த்து குரல் கொடுத்து போராடுகிறார். சாலா நடத்தும் மதுக்கடைக்கு முன்பும் புனிதா மதுவுக்கு எதிரான பிரச்சாரம் செய்கிறார். முதலில் கோபப்படும் சாலா பின்னர் புனிதாவின் சமூக அர்ப்பணிப்பை கண்டு வியந்து காதலிக்க தொடங்குகிறார். 23 ஆண்டுகளாக நடந்த வழக்கில் மீண்டும் பார்வதி பார் குத்தகைக்கு விடலாம் என்று தீர்ப்பு வருகிறது. பார்வதி பார் மதுக்கடையை மீண்டும் சாலாவின் உதவியோடு தன் வசப்படுத்துகிறார் குணா. இதனால் கோபமாகும் தங்கதுரை பணம் சம்பாதிக்க ஆபத்தான ரசாயனங்கள் கலந்த சட்டவிரோத மதுபானத்தை விற்கத் தொடங்குகிறார். குணாவையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார். இறுதியில் சாலாவால் குணாவை காப்பாற்ற முடிந்ததா? என்ன நடந்தது? தங்கதுரையின் ரசாயன மதுபானத்தால் ஏற்பட்ட பேராபத்து என்ன? தங்கதுரைக்கு தண்டனை கிடைத்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
சாலாவாக தீரன் உயரத்திற்குகேற்ற உடல்பலத்துடன் அதற்கேற்ற சிகையலங்காரத்துடன் பார் உரிமையாளராக கச்சிதமாக பொருந்தியுள்ளார். பத்து பேரை அடித்தாலும் நம்பும்படியாக அவருடைய உடல்மொழி உள்ளது. முரட்டு தனத்துடன் கூடிய இளகிய மனதும், உதவும் குணமும், ஆக்ரோஷமாக சண்டைக் காட்சிகளிலும், பாசத்திலும் தேர்ந்த நடிகர் போல் சிறப்பாக செய்துள்ளார்.
புனிதாவாக ரேஷ்மா வெங்கடேஷ் மதுக்கடையை எதிர்க்கும் போர்வாளாக வசனங்களை பேசி, போஸ்டர்களை கிழித்து அழுத்தமான பதிவை படத்தில் கொடுத்து இறுதியில் பரிதாபத்தை அள்ளுகிறார்.
வில்லத்தனத்தில் மிரள வைத்து மிரட்டும் தங்கதுரையாக சார்லஸ் வினோத், சாலாவின் நண்பன் தாஸ்சாக நகைச்சுவை பேச்சில் கவனிக்க வைக்கும் ஸ்ரீPநாத், முரட்டுத்தனம் மற்றும் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் குணாவாக அருள்தாஸ் மற்றும் மூன்று பள்ளிக்கூட மாணவர்களின் மது குடிக்க நடக்கும் கலாட்டாவும், அதன் பின்னர் அவர்களுக்கு ஏற்படும் துயரம் படத்திற்கு முக்கிய சாட்சி.
ஒளிப்பதிவு – ரவீந்திரநாத் குரு, இசையமைப்பாளர் – தீசன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் காட்சிகளை கச்சிதமாக தூக்கி நிறுத்துகிறது.
மதுக்கடை குத்தகையில் ஆரம்பிக்கும் இரண்டு பேரின் பகை தீவிரமடைந்து எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை திரைக்கதையாக அமைத்து இயக்கியுள்ளார் எஸ்.டி.மணிபால். மதுப்பழக்கத்தால் சந்திக்கும் சமகால சமூகப் பிரச்சினையை சிறப்பாக கையாண்டு, வசனத்திலும் திரைக்கதையிலும் அழுத்தமான பதிவுடன், திருப்பங்களுடன் சமூக அக்கறையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பரபரப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.டி.மணிபால்.
மொத்தத்தில் பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி.விஸ்வபிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ள சாலா ஒல்டு வைன் வித் நியூ பாட்டில்.