கோட் சினிமா விமர்சனம் : கோட் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் அதிரடி ஆக்ஷன் களத்துடன் திருப்பங்கள் நிறைந்த மாஸ்டர் பிளாஸ்ட் படம் | ரேட்டிங்: 3.5/5

0
1786

கோட் சினிமா விமர்சனம் : கோட் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் அதிரடி ஆக்ஷன் களத்துடன் திருப்பங்கள் நிறைந்த மாஸ்டர் பிளாஸ்ட் படம் | ரேட்டிங்: 3.5/5

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் (பி) லிட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரித்திருக்கும் கோட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு.

இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், மீனாக்ஷி சௌத்ரி, பார்வதி நாயர், வைபவ், ‘யோகி’ பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் வாசுதேவன், ‘விடிவி’ கணேஷ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், அபியுக்தா மணிகண்டன் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : அர்ச்சனா கல்பாத்தி, இணை கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளர் : எஸ். எம். வெங்கட் மாணிக்கம், இசை : யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு : சித்தார்த்தா நுனி, கலை இயக்கம் : ராஜீவன், சண்டைப் பயிற்சி : திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு : வெங்கட் ராஜன், வசனம் : விஜி, வெங்கட் பிரபு, கூடுதல் திரைக்கதை-வசனம் : கே. சந்துரு – எழிலரசு குணசேகரன், இணை கலை இயக்கம் : பி.சேகர் மற்றும் சூர்யா ராஜீவன்,பாடல்கள் : கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக், நடனம் : ராஜு சுந்தரம், சேகர் வி ஜே, சதீஷ், உல்லி, ஆடை வடிவமைப்பு : வாசுகி பாஸ்கர் மற்றும் பல்லவி சிங், படங்கள் : டி. மானெக்ஷா,விளம்பர வடிவமைப்பு : கோபி பிரசன்னா, தயாரிப்பு நிர்வாகிகள் : எம்.செந்தில்குமார், கோவிந்தராஜ், ராம்குமார் பாலசுப்ரமணியன்,மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத், நிகில் முருகன்

சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை (ளுயுவுளு) தலைவர் நசீர் (ஜெயராம்) தலைமையில் குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.காந்தி (விஜய்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் (பிரபுதேவா) மற்றும் அஜய் (அஜ்மல் அமீர்) ஆகியோர் பணி செய்கின்றனர்.  உமர் மற்றும் ராஜீவ் மேனன் (மோகன்) தலைமையிலான பயங்கரவாதிகளின் குழுவிடமிருந்து யுரேனியத்தை சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை குழு மீட்டெடுக்க 2008 இல் கென்யாவிற்கு புறப்பட்டு செல்கின்றனர். உமர் மற்றும் ராஜீவ் மேனன் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் இரயிலில் நடக்கும் சண்டையில் இறந்து விட, சாட்ஸ் குழு இந்தியாவுக்கு திரும்பி வருகிறார்கள். காந்தி தன் நிறைமாத கர்ப்பிணி மனைவி அனுவிடம் (சினேகா) தன்னுடைய ஆபத்தான வேலையை பற்றி சொல்லாமல் மறைக்கிறார். தம்பதிகளுக்கு 6 வயதில் மகன் ஜீவன் இருக்கிறார். வேலை காரணமாக காந்தியின் செயல்பாடுகளில் மிகவும் சந்தேகம் கொண்ட கர்ப்பிணி மனைவியான அனுவை (சினேகா) சமாதானப்படுத்த வேலை நிமித்தமாக தாய்லாந்து செல்லவிருக்கும் காந்தி தன் குடும்பத்தையும் இன்பச் சுற்றுலா என்று சொல்லி அழைத்துச் செல்கிறார். அதன் பின் காந்தியின் வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்கள் அரங்கேறுகிறது. காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு கும்பலால் தாக்கப்பட அனு மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட இந்த சிக்கலில் மகன் ஜீவன் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத காந்தி நிலைகுலைந்து போகிறார். ஆண்டுகள் பல கடந்தாலும் சோகத்திலிருந்து மீளாத தம்பதிகள் காந்தியும் அனுவும் பிரிந்து வாழ்கிறார்கள். மகளை மட்டும் பார்க்க காந்தி அடிக்கடி வந்து வெளியே அழைத்துச் செல்கிறார். தன் சாட்ஸ் வேலையை விட்டு விட்டு ஏர்போர்ட்டில் பாஸ்போர்ட்டை சரி பார்த்து வழங்கும் வேலையில் சேர்கிறார். இந்நிலையில் ரஷ்யாவிற்கு முக்கிய வேலை நிமித்தமாக அனுப்பப்படுகிறார்.அங்கு நடக்கும் கலவரத்தின் போது காந்தி , தற்செயலாக இறந்துவிட்டதாக நினைத்த (சஞ்சய் என்ற பெயரில் இருக்கும்) மகன் ஜீவனை (இளம் விஜய்) உயிருடன்; பார்க்க நேரிட அதிர்ச்சியாகிறார். காந்தி வர மறுக்கும் ஜீவனை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வருகிறார். மகனை பார்த்த மகிழ்ச்சியில் அனு காந்தியுடன் இணைய சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அதன் பின் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை உறுப்பினர்கள் ஒவ்வொருவராக குறி வைத்து தாக்கி கொல்லப்படுகின்றனர். இறந்ததாக கருதும் எதிரி மேனனை (மோகன்) உயிருடன் காண நேரிடும் காந்தி மேனனை எதிர்கொள்ள மீண்டும் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை குழுவில் இணைந்து உண்மையை  கண்டறிய முற்படுகிறார். இந்த தேடலில் காந்தி சந்திக்கும் முக்கிய குற்றவாளி யார்? ஜீவன் இந்தியாவிற்கு வரும் நோக்கம் என்ன? ஜீவனுக்கும் மேனனுக்கும் உள்ள தொடர்பு என்ன? காந்தி தன் எதிரிகளை துணிந்து வீழ்த்தினாரா? என்பதே பல திருப்பங்கள் நிறைந்த க்ளைமேக்ஸ்.

இளைய தளபதி விஜய் தந்தை காந்தியாகவும் மகன் ஜீவனாகவும் இரு வேடங்களில் இரு வேறு பரிமாணங்களில் தனித்து தெரியுமாறு தன் தோற்றத்திலும், வசன உச்சரிப்பிலும் அசத்தியுள்ளார். பாசத்தால் தவிக்கும் தந்தை, வேஷத்தால் தாக்கும் மகன் என்று பல காட்சிகளில் விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் படம் முழுவதும் தன்னுடைய தோளில் சுமந்து சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்துள்ளார். விஜய்யின் ட்ரேட்மார்க் வசீகரம், உணர்வு, ஆக்ஷன், நடனம் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றை முழுவதுமாக பயன்படுத்தி அவரது ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஈர்த்துள்ளார். ஒரே சாயலில் நெகடிவ் கேரக்டர் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த நடிப்பு கவனிக்கப்படாமல் போனதை இந்தப் படத்தில் அதை மாற்றி வெற்றி படமாக கொடுத்துள்ளார்.

அந்தகன் பிரசாந்த் இப்பொழுது தான் ஒரு சூப்பர் வெற்றியுடன் களமிறங்கியவர், கோட் படத்தின் மூலம் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளது சூப்பர் ஸ்பேஷல் விருந்து. சக தோழனாகவும், ஆபத்தான நேரத்தில் தோள் கொடுத்து, மகளை இழந்த சோகத்திலும் தன் நண்பனை விட்டுக் கொடுக்காமல் பேசும் இடத்திலும் முக்கியமான ரோலில் தன்னுடைய தனித்திறமையால் தனித்து தெரியுமாறு நடிப்பில் அசத்தியுள்ளார்.

சர்ப்ரைஸ் கேரக்டராக வலம் வரும் பிரபுதேவா, வில்லத்தனத்தில் முதலில் மிரட்டினாலும் சரணடைந்த பிறகு அடங்கி போகும் ராஜீவ் மேனனாக மோகன்,கண்டிப்புடன், ஜாலியாக எப்பொழுதுமே வழி நடித்தி உயிரை கொடுக்கும் தலைவராக  ஜெயராம், சந்தேக கண்ணோட்டத்துடன் பயணிக்கும் மனைவியாக சினேகா, பிரசாந்தின் டாக்டர் மனைவியாக லைலா, நண்பனாக அஜ்மல் அமீர் ஆகியோருடன் மீனாக்ஷி சௌத்ரி, பார்வதி நாயர், வைபவ், யுகேந்திரன் வாசுதேவன், ‘விடிவி’ கணேஷ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், அபியுக்தா மணிகண்டன் (அறிமுகம்)மற்றும் பலரின் சரிசமமான சிறிய பங்களிப்பு என்றாலும் கவனிக்க வைத்துள்ளனர்.

இவர்களுடன் ‘யோகி’ பாபு, பிரேம்ஜி அமரன் சில காட்சிகள் என்றாலும் நகைச்சுவைக்கு கியாரண்டி.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் பிஜிஎம் மற்றும் பழைய பாடல்களின் பின்னணி படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

கென்யாவில் நடக்கும் இரயில் சண்டை பயணம், தாய்லாந்தில் துரத்தல் காட்சிகள், ரஷ்யாவில் நடக்கும் பைக் சேசிங் காட்சிகள் மற்றும் மெட்ரோ ரயில் சண்டை, கிரிக்கெட் மைதானத்தில் க்ளைமேக்ஸ் காட்சி என்று  தனிப்பட்ட முத்திரை பதித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி.

கலை இயக்கம் : ராஜீவன் பரவாயில்லை.

கோட் படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆக்ஷன் காட்சிகள் அதிகம் என்றாலும் எதுவும் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை என்றாலும் முழு பங்களிப்பை கொடுத்து கவனிக்க வைத்துள்ளார் சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன்.

இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன்.

கேப்டன் விஜயகாந்த், மறைந்த அண்ணன் மகள் பவதாரிணி, இளமை பருவம் விஜய் என்று ஏஐ தொழில்நுட்பத்துடன் சிறப்பாக கொடுக்க முயற்சித்துள்ளனர். வெங்கட் பிரபுவின் திரைக்கதையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் மற்றும் அவரது கடந்தகால படங்கள் மற்றும் அவரது அனைத்து முத்திரை காட்சிகளுடனான வசனங்களை கொடுத்து, மங்காத்தா படத்தின் ஹ{க் ஸ்டெப்ஸ் என்று சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. சூழ்ச்சி, சஸ்பென்ஸ், நகைச்சுவை, உணர்வு மற்றும் மாஸ் மசாலா ஆகியவற்றின் சரியான கலவையுடன் ஒரு நிமிடத் திருப்பமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற வெங்கட் பிரபு க்ளைமேக்ஸ் காட்சியில் அதை நிறைவாக செய்துள்ளார். முதல் பாதி ஆபத்தான வேலை, நட்பு, குடும்பம் என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இடைவேளைக்குப் பிறகு, காந்திக்கும் சஞ்சய்க்கும் இடையே ஒரு மோதலுடன் படம் தொடங்கி அதை வேகமாக வைத்திருக்க முயற்சித்து க்ளைமேக்சில் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் சண்டைக் காட்சிகள் என்று பரபரவென்று காட்சிப்படுத்தி பல திருப்பங்கள் நிறைந்த இறுதிக் காட்சியில் க்ளொனிங் முறையில் முடித்திருக்கிறார். அடுத்த படத்திற்கான லீடுடன் படத்தை முடித்துள்ளது எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது என்றாலும் அரசியல் பிரவேசம் காரணமாக விஜய்யின் திரைப்பிரவேசத்தை பொறுத்து தான் உள்ளது.

மொத்தத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் (பி) லிட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரித்திருக்கும் கோட் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் அதிரடி ஆக்ஷன் களத்துடன் திருப்பங்கள் நிறைந்த மாஸ்டர் பிளாஸ்ட் படம்.