கூரன் சினிமா விமர்சனம் : கூரன் நீதியை நிலை நாட்டிய நாயின் தாய் பாசம் தடைகளை தாண்டிய உணர்ச்சிகளின் பிம்பம் அனைவரும் பார்க்கலாம் | ரேட்டிங்: 3/5
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நிதின் வேமுபதி.
இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, இந்திரஜா, இயக்குனர் நிதின் வேமுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-திரைக்கதை வசனம் எஸ். ஏ. சந்திரசேகர், மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு, சித்தார்த் விபின் இசை, கலை இயக்கம் வனராஜ். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்.
கொடைக்கானலில் சாலை ஓரமாக ஜான்சி என்கிற நாய் தன் குட்டியுடன் நடந்து செல்லும் போது போதையில் கார் ஓட்டி வந்த நபர் குட்டி மீது மோத தாய் கண் முன் குட்டி துடிதுடித்து இறந்து விடுகிறது. அந்தத் தாய் நாய் குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது. அதன் பின் தனது குட்டியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு கொடைக்கானல் காவல் நிலையத்தில் தாய் நாய் புகார் அளிக்க காவல் நிலையத்தையே சுற்றி திரிகிறது. இந்நிலையில், வேறு ஒரு விஷயத்திற்காக காவல் நிலையம் வரும் மூத்த வழக்கறிஞர் தர்மராஜ் (எஸ்.ஏ.சந்திரசேகர்) வருகை தர, அவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஜான்சி (தாய் நாய்) அவரைப் பின்தொடர்கிறது. முதலில் தர்மராஜ் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், பின்னர் அதன் நடவடிக்கையின் மூலம் தாய் நாய் விபத்து நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. அங்கே புதைக்கப்பட்டிருக்கும் இறந்த நாய் குட்டியை கண்டவுடன் தனது குட்டியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடும் தாய் நாய் என்பதை தர்மராஜ் புரிந்து கொள்கிறார். இதற்கு யார் காரணம் என்று விசாரணையில் இறங்கும் போது குட்டி நாய் சாவுக்கு செல்வாக்கு மிக்க தொழிலதிபர் சேகர் ராஜாவின் (கவிதா பாரதி) மகன் ரஞ்சித் ராஜா (இயக்குனர் நிதின் வேமுபதி) தான் என்பதை தெரிந்துக் கொள்கிறார். 10 அண்டுகள் எந்த வழக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கும் தர்மராஜ் தாய் நாய்க்கு ஆதரவாக வாதாட களமிறங்குகிறார். அதன் பின் தர்மராஜால் இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளையும், ஆவணங்களையும் சமர்பிக்க முடிந்ததா? தாய் நாய்க்கு நீதி கிடைத்ததா? ரஞ்சித் ராஜாவிற்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே மீதிக்கதை.
நீதியும் நேர்மையும் மிக்க மூத்த வழக்கறிஞர் தர்மராஜ் கதாபாத்திரத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பொருமையான மனிதராக, நிதானமாக யோசித்து முடிவெடுத்து தன் எடுத்த வழக்கை திறம்பட வாதிட்டு, அதற்கான சாட்சியங்களை சேகரித்து, தாய் நாயான ஜான்சிக்கு நீதியை வாங்கி கொடுக்கும் மனித நேயமிக்க மனிதராக வாழ்ந்துள்ளார்.
கூரன் என்றால் தமிழில் நாய்க்கு இன்னொரு பெயர்.அதில் ஜென்ஸி மற்றும் பைரவா என்ற கதாபாத்திரத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி மனிதர்களுக்கு புரிய வைக்கும் அனுபவ நடிப்பு வாய்ந்த நாய்க்கும், அதனை நன்றாக புரிய வைத்து நிதானமாக பயிற்சி செய்ய வைத்த பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள்.
இயக்குனர் நிதின் வேமுபதி போதை ஆசாமியாக காரை ஒட்டி விபத்து ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் மேம்போக்காக அழுத்தமில்லாமல் தடுமாற்றத்துடன் நடித்துள்ளார்.
ரஞ்சித் ராஜாவின் தந்தையாக கவிதா பாரதி, நீதிபதியாக ஒய்.ஜி. மகேந்திரன், ரஞ்சித் ராஜாவின் வழக்கறிஞரரக பாலாஜி சக்திவேல், நாயின் குரைப்பு ஒலியை மொழிபெயர்க்கும் பாத்திரத்தில் சத்யன், படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் பார்வையற்ற ஆண்டனியாக ஜார்ஜ் மரியான், சரவண சுப்பையா, எஸ்ஏசியை குரு என்று அழைத்து அவருடன் பயணிக்கும் பெண்ணாக இந்திரஜா மற்றும் பலர் கதைக்கான பங்களிப்பை திறம்பட கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மார்டின் தன்ராஜ், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், கலை இயக்குனர் வனராஜ் மற்றும் பீ. லெனின் மேற்பார்வையில் படத்தொகுப்பாளர் மாருதி மற்றும் பல n;தாழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளனர்.
ஒரு ஒய்வு பெற்ற நீதிபதி தனது வாழ்க்கையில் மறக்க முடியாத வழக்கை பற்றி தொலைக்காட்சிக்கு தன் மலரும் நினைவுகளை பகிரும் விதமாக கதைக்களம் ஆரம்பமாகிறது.அந்த வழக்கைப்பற்றி சொல்வது போல் முழு படத்தின் கதைகளமாக இயக்கியிருக்கிறார் நிதின் வேமுபதி. ஒரு பெண் நாய் தன் குட்டியை கொன்ற போதை ஆசாமிக்கு வக்கீல் உதவியுடன் தண்டனை வாங்கி கொடுத்து நீதியை நிலைநாட்டுவதை கதைக்களமாக அமைத்து மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் பிணைப்பை நினைவூட்டி, அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இந்த உலகில் வாழ உரிமையிருக்கிறது என்பதை திறமையாக சொல்லி இயக்கியிருக்கிறார் நிதின் வேமுபதி. மனிதர்களுக்கு இருக்கும் அத்தனை குணங்களும், புரிந்து கொள்ளும் திறனும் அபரிதமாக விலங்குகளுக்கும் உண்டு என்பதையும், விலங்குகளாலும் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதை நீதிமன்றக் காட்சிகள், கூர்மையான சட்ட புத்திசாலித்தனம், உணர்ச்சி ஆழத்துடன் அறிவார்ந்த சூழ்ச்சிகள், சஸ்பென்ஸ் கலந்த திருப்பங்களுடன் இறுதி காட்சிகள் என்று திரைக்கதையில் கவனம் செலுத்தினாலும், சில இடங்களில் வேகத்தடைகள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் ஒரு விலங்கை வைத்து புதுமையாக கதைக்களத்தை யோசித்து இயக்கியுள்ள இயக்குனர் நிதின் வேமுபதி முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் கனா புரொடக்ஷன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ள கூரன் நீதியை நிலை நாட்டிய நாயின் தாய் பாசம் தடைகளை தாண்டிய உணர்ச்சிகளின் பிம்பம் அனைவரும் பார்க்கலாம்.