குரங்கு பெடல் விமர்சனம் : குரங்கு பெடல் எளிமையான கிராமத்து வாழ்வியலை கோடை விடுமுறையில் சைக்கிளுடன் அனைத்து தரப்பினரும் கொண்டாடி ரசித்து மகிழலாம் | ரேட்டிங்: 3.5/5
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ள குரங்கு பெடல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கமலக்கண்ணன்.
இதில் காளி வெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், சாய் கணேஷ், ரதீஷ், பிரசன்னா பாலசந்திரன், ஜென்சன் திவாகர், தக்ஷனா, சாவித்திரி, செல்லா, குபேரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இணை தயாரிப்பு-சஞ்சய் ஜெயகுமார், கலையரசு, இசை-ஜிப்ரான் வைபோதா, ஒலி வடிவமைப்பு-ஆண்டனி பி. ஜெயரூபன், ஒளிப்பதிவு-சுமீ பாஸ்கரன், எடிட்டர்-சிவநந்தீஸ்வரன், திரைக்கதை-கமலக்கண்ணன், பிரபாகர் சண்முகம், வசனம் -பிரபாகர் சண்முகம், பாடல்கள்-இயக்குனர் பிரம்மா, போ.மணிவண்ணன், என்.டி.ராஜ்குமார், கலை- சதீஸ் சிவன், சுரேஷ் திலகவதி, குழந்தைகள் நடிப்பு பயிற்சி- நந்தகுமார், கலரிஸ்ட்-பாலாஜி, படக்கலவை-சிவகுமார், டிசைன்ஸ்- லோகேஷ் கந்தசாமி, பிஆர்- சுரேஷ்சந்திரா டிஒன்.
1980 களின் காலகட்டத்தில் கத்தேரி கிராமத்தில் நெசவு தொழில் செய்யும் காளிவெங்கட் மற்றும் அவரது மகனைச் சுற்றிப் படம் துவங்குகிறது. கந்தசாமி (காளி வெங்கட்) மனைவி, திருமணமான மகள், மகன் என்று அளவான குடும்பம். கந்தசாமி நெசவு தொழிலாளியாக எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமானாலும் நடந்தே சென்று வருவதாலும், சைக்கிள் கற்றுக் கொள்ளாமல் இருப்பதாலும் அவரை நடராஜா சர்வீஸ் கந்தசாமி என்று கிராம மக்கள் கேலி செய்து அழைக்கின்றனர். அவரின் மகன் மாரியப்பன் (மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன்) தன் நண்பர்களுடன் நீதி மாணிக்கம்(ராகவன்),செல்வம்( ஞானசேகர்), மணி (சாய் கணேஷ்),அங்கு ராசு (ரதீஸ்) பள்ளி கோடை விடுமுறையை ஜாலியாக பொழுது போக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த சமயத்தில் நண்பர்கள் அனைவரும் சைக்கிள் ஒட்டி பழக நினைக்கிறார்கள். அதற்காக மிலிட்டரிமேன் (பிரசன்னா பாலசந்திரன்) நடத்தும் சைக்கிள் கடையில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஒட்டி பழகுகின்றனர். இதில் நண்பன் ஒருவன் சொந்தமாக சைக்கிள் வாங்கி ஒட்ட அவனுடன் மற்ற மூன்று நண்பர்களும் சென்று விட, மாரியப்பன் மட்டும் வாடகைக்கு சைக்கிள் எடுத்து தன்னந்தனியாக ஒட்ட முயற்சி செய்கிறான். இறுதியில் பெரும் முயற்சிக்கு பிறகு சைக்கிள் அதிக உயரம் காரணமாக இரண்டு பெடல்களின் நடுவே காலை வைத்து ஒட்டும் குரங்கு பெடல் மிதித்து நன்றாக ஒட்ட கற்றுக்கொள்கிறான். இவ்வாறு பயற்சி மேற்கொள்ளும் போது தன் நண்பர்களுடன் மலை மீது ஏறும் போட்டிக்கு ஒத்துக் கொள்கிறான். ஒரு நாள் வாடகை சைக்கிளை திருப்பி தரும் நேரம் முடிந்து விட அதற்கான காசை புரட்டுவதற்கு பெரிய முயற்சிகள் செய்கிறான். வீட்டை விட்டு வெளியே செல்லும் மகன் திரும்பி வராததாலும், மிலிட்டரியின் சைக்கிள் திரும்பி வராததாலும் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்படுகிறது. அனைவரும் சேர்ந்து மாரியப்பனை தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மாரியப்பன் எங்கே சென்றான்? வாடகை சைக்கிளின் பாக்கியை தந்தானா? நண்பர்களுடன் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டானா? கிராமத்து மக்கள் மாரியப்பபனை தேடி கண்டுபிடித்தார்களா? மகன் மாரியப்பன் தந்தையின் தேவையில்லாத செலவை தடுத்து நிறுத்தினானா? மாரியப்பனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதா? என்பதே குரங்கு பெடலின் யதார்த்தமான கதைக்களம்.
நடராஜா சர்வீஸ் கந்தசாமியாக காளிவெங்கட் கடின உழைப்பாளியாகவும் நெசவு தொழிலாளியின் வாழ்வியலை பிரதிபலிக்கும் மனிதராகவும், துண்டை உதரி தோலில் போட்டுக் கொண்டு துரத்துவதும், மகனை திட்டிக்கொண்டும், மிரட்டிக் கொண்டும் அதிகார தோரணையுடன் அக்மார்க் கிராமத்து அப்பாவாக வாழ்ந்துள்ளார். மகன் காசு கேட்டால் இழுத்தடிப்பதும்,லாட்டரி டிக்கெட், சூதாட்டம் என்று காசை கரியாக்கும் போது தன்னுடைய கெட்ட பழக்கத்தை மகன் எடுத்துரைக்கும் போது மனதளவில் நொருங்குவதுடன் மகனை காணாமல் பரிதவிக்கும் காட்சிகளிலும் தனித்து நிற்கிறார். மகனின் மனதை புரிந்து கொண்டு நடக்கும் சமயத்திலும் வித்தியாசமான களத்தில் நல்ல 80களின் அக்மார்க் கண்டிப்பான பாசக்கார அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். இறுதியில் மகனின் ஆசையை நிறைவேற்றும் கடைசி காட்சியில் கை தட்டல் பெறுகிறார்.
மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் மகன் மாரியப்பனாக துருதுருகண்கள், குறும்பு செய்யும் மனோபாவம், வெள்ளந்தியாக கேள்வி கேட்கும் தோரணை, தந்தையை கேலி செய்யும் கிராமத்து மக்களிடம் சண்டை போடுவதும், மிலிட்டரியிடம் சைக்கிள் வாங்கிக் கொண்டு பயத்துடன் ஒடுவதும், சென்டர் ஸ்டண்ட் போடுவதற்குள் படாதபாடு பட்டு பெருமூச்சு விடுவதும், சைக்கிள் ஒட்ட கற்று கொண்டபின் ஊர் சுற்றுவது, தந்தை சேமித்து வைத்த உண்டியல் காசை லாவகமாக எடுத்து கொண்டு ஒடுவது, தந்தைக்கே உபதேசம் செய்வது, மிலிட்டரியிடம் தான் பட்ட கடனை தந்தை மேல் சுமத்தாமல் வேலை செய்து அடைத்து விடுவது, பின்னர் நண்பர்களுடன் சைக்கிள் போட்டி என்று ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான கிராமத்து குழந்தைகளின் அட்ராசிட்டிகளை அழகாக செய்து அசத்தியுள்ளார்.
இவருடன் ராகவன், ஞானசேகர், சாய் கணேஷ், ரதீஷ் நண்பர்களாக உடன் பயணித்து சிறப்பு செய்துள்ளனர். மிலிட்டரியாக பிரசன்னா பாலசந்திரன் மற்றும் ஜென்சன் திவாகர் ஆகியோரின் இரண்டாம் பாதியில் நடக்கும் காமெடி கலாட்டா, மற்றும் அக்காவாக தக்ஷனா, அம்மாவாக சாவித்திரி, வாத்தியாராக செல்லா, பொம்மலாட்ட கலைஞராக குபேரன் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலத்துடன் கதை நகர்வுக்கு உதவுகிறது.
1980களின் கால கட்டங்களை நம் கண் முன்னே காட்சிப்படுத்தி, கிராமத்து எழில் கொஞ்சும் மண் குடிசைகள், பள்ளிகள், சைக்கிள் கடை, விளையாட்டு தளங்கள்,ஒடம், தெருக்கூத்து, கடல் நடுவே, மேம்பாலம், மலைக்கோயில், சிறுவர்களின் கிணற்றுக் குளியல், கிராமத்து வாழ்வியலை சைக்கிளோடு இணைத்து ஒருசேர காட்சிக்கோணங்களில் பரவசத்தோடு ஒளிப்பதிவு செய்துள்ளார் சுமீ பாஸ்கரன்.
இயக்குனர் பிரம்மா, போ.மணிவண்ணன், என்.டி.ராஜ்குமார் பாடல்களின் மாயாஜால வரிகளில் ஜிப்ரானின் மயக்கும் இசையில், ஆண்டனி பி. ஜெயரூபனின் ஒலி வடிவமைப்பில் படக்காட்சிகளில் மெய்மறக்க வைத்துள்ளனர்.
திரைக்கதை-கமலக்கண்ணன், பிரபாகர் சண்முகம், வசனம் -பிரபாகர் சண்முகம், கலை- சதீஸ் சிவன், சுரேஷ் திலகவதி, எடிட்டர்- சிவநந்தீஸ்வரன் ஆகியோர் படத்தின் அனைத்து காட்சிகளையும் திறம்பட செதுக்கி உள்ளனர்.
குழந்தைகள் நடிப்பு பயிற்சி கொடுத்த நந்தகுமாரின் முயற்சி படத்தின் மிகப்பெரிய சிறப்பு.
எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் என்ற சிறுகதையை தழுவி இரண்டு மணி நேர படமாக விறுவிறுப்பாக எடுத்துள்ளார் இயக்குனர் கமலக்கண்ணன். ஆறு வயதில் எழுத்தாளர் ராசி அழகப்பனுக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நடந்த சைக்கிள் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட சிறுகதையை சுவாரஸ்யமான கிராமத்து சம்;பவங்களை இணைத்து 80களில் சிறுவர்களின் மனநிலை, விளையாட்டுக்கள், குறும்புகளை திறம்பட காட்சிப்படுத்தி இன்றைய இளைய தலைமுறைகளுக்கு அந்தக்கால கட்டத்து வாழ்க்கையை ஞாபகப்படுத்தி, சைக்கிள் என்பது கிராமம், நகரம், தேசம், உலகம் என்று அனைத்து மக்களையும் இணைக்கும் பாலம், எளிய மக்களின் கனவு வாகனம் என்பதை தெளிவுபடுத்தி கிராமத்து எளிமையோடு நயம்பட கொடுத்துள்ளார் இயக்குனர் கமலக்கண்ணன். படம் ஆரம்பிக்கும் போது விளையாட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து, 80களில் வசதிகள் இல்லாத போது கிடைத்த சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அனைவரின் நீங்கா நினைவலைகளை தட்டி எழுப்பி இன்றைய தலைமுறையினருக்கு கிடைக்கும் வசதிகள் அன்றைக்கு இல்லை என்பதை அறியபடுத்தியிருக்கும் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு பாராட்டுக்கள். இவரின் உழைப்பிற்கும், கடின முயற்சிக்கும் பல விருதுகள் கிடைப்பது உறுதி. வெல்டன்.
மொத்தத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ள குரங்கு பெடல் எளிமையான கிராமத்து வாழ்வியலை கோடை விடுமுறையில் சைக்கிளுடன் அனைத்து தரப்பினரும் கொண்டாடி ரசித்து மகிழலாம்.