குட் பேட் அக்லி சினிமா விமர்சனம் : குட்பேட்அக்லி ரசிகர்களின் கொண்டாட்டத்தில் குடும்ப சென்டிமெண்ட் கலந்த கேங்ஸ்டரின் கலர்ஃபூல் ரோலர் கோஸ்டர்; ‘தல’ தெறிக்கும் அதிரடி ஆக்ஷன் பயணம் | ரேட்டிங்: 3.5/5

0
1674

குட் பேட் அக்லி சினிமா விமர்சனம் : குட்பேட்அக்லி ரசிகர்களின் கொண்டாட்டத்தில் குடும்ப சென்டிமெண்ட் கலந்த கேங்ஸ்டரின் கலர்ஃபூல் ரோலர் கோஸ்டர்; ‘தல’ தெறிக்கும் அதிரடி ஆக்ஷன் பயணம் | ரேட்டிங்: 3.5/5

மைத்ரி மூவி மேக்கர் சார்பில் நவீன் யேமினி, ஒய் ரவிஷங்கர் தயாரித்திருக்கும் குட்பேட்அக்லி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதில் அஜீத்- ஏ.கே, த்ரிஷா- ரம்யா, சுனில்- குழந்தை (எ) டைசன், பிரசன்னா- ஹேகர், அர்ஜுன்தாஸ் – ஜானி மற்றும் ஜேமி, பிரியாவாரியர் – நித்யா (எ) நாஷ், பிரபு- கN​ணசன், சிம்ரன்- பிரியா, ஷைன்டாம் சாகோ – டாமி, ஜாக்கிஷ்ராஃப் – பாபெல், ரகுராம் – ஜக்காப்பா, கார்த்திகேயன்- விஹான், பிரதீப்கப்ரா – விஹான், ஹாரிஜோஸ் – ஹாரி ஜோஸ், கேஜிஎஃப்அவினாஷ் – கேஜிஎஃப் அவினாஷ், கஸ்டம்ஜித்- வழக்கறிஞர்,உஷாஉதூப் – நீதிபதி, கிங்ஸ்லி- கிங்ஸ்லி, யோகிபாபு – பாபா யோகி, ரகுல்தேவ் – ஜெயில் தாதா, ஷியாஜிஷிண்டே – ஆணையர் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்: இசை: ஜி.வி.பிரகாஷ், ஓளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம், படத்தொகுப்பு: விஜய் வேலுக்குட்டி,ஆடைவடிவமைப்பாளர் : அனு வர்தன், ராஜேஷ் குமாரசு, ஸ்டண்ட்: சுப்ரீம் சுந்தர, ;எழுத்தாளர்:ஆதிக் ரவிச்சந்திரன், ரவி கந்தசாமி, ஹரிஷ் மணிகண்டன், மக்கள்தொடர்பு : சுரேஷ் சந்திரா.

மும்பையில் ரெட் டிராகன் என்றும் அழைக்கப்படும் ஏ.கே (அஜித் குமார்) பிரபல சர்வதேச டான். 2008 ஆம் ஆண்டு காதல் மனைவி ரம்யா (த்ரிஷா கிருஷ்ணன்) பிரசவத்தின் போது மகன் பிறக்கிறார். மகனை பார்க்க சந்தோஷமாக வரும் ஏ.கேவிடம் தாதா தொழிலை விட்டு விட்டு வந்தால் மட்டுமே மகனை தொடவேண்டும் என்று ரம்யா நிபந்தனை விதிக்கிறார். இதனால் ஏ.கே. தாதா தொழிலை விட்டு விலகி பதினெட்டு ஆண்டு காலம் கழித்து மகன் விஹானை வந்து சந்திக்கும் போது பெருமைப்படும்படி செய்வேன் என்று சபதமிட்டு செல்கிறார். அதன் பின் போலீசிடம் சரணடைந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதனிடையே ரம்யா மகன் விஹானை அழைத்துக் கொண்டு ஸ்பெயினில் வேலையில் சேர்ந்து மகனை படிக்க வைக்கிறார். மகனிடம் தந்தை தொழிலதிபராக இருப்பதாக பொய் சொல்லி வளர்கிறார், அதே சமயம் ஏ.கே மகனிடம் சிறையிலிருந்து கொண்டே போனில் தொடர்பு வைத்து பேசி வருகிறார். 2025 ஆம் ஆண்டு மகனுக்கு பதினேழு வருடம் ஆகும் போது, தந்தையை பார்க்க விரும்புதாக மகன் விஹான் வற்புறுத்த, சிறையிலிருந்து ஏ.கே விடுதலையாகி வெளியே வருகிறார். மும்பையில் ஏ.கே வெளியே வந்தவுடன், அவரை சந்திக்க வரும் மனைவியுடன் காரில் செல்லும் போது அவரை கொல்ல பல கும்பல்கள் துரத்த, இதனால் பயந்து போகும் மனைவி ரம்யா, பகையை தீர்த்து விட்டு வருமாறு சொல்லி அங்கிருந்து ஸ்பெயினுக்கு சென்று விடுகிறார். தன் எதிரிகளை துவம்சம் செய்து கொண்டிருக்கும் போது, ஏ.கேவின் மகன் கடத்தப்பட்டுவிட்டதாக தகவல் வருகிறது. அங்கிருந்து ஏ.கே ஸ்பெயினுக்கு பறக்க, மகன் கண்டுபிடிக்கப்பட்டு, போதை வழக்கில் சிக்கி சிறார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். இதனால் மனைவி ரம்யா கோபத்தில் இதற்கு காரணம் ஏ.கே தான் குற்றம் சாட்டுகிறார். மகனை போதை வழக்கில் சிக்க வைத்த மறைமுக எதிரி யார் என்பதை கண்டுபிடிக்க களமிறங்குகிறார் ஏ.கே. சிறார் சிறையில் ஏ.கே. தனது மகன் விஹானை சந்தித்து  நடந்த சம்பவத்தை கேட்கிறார். அப்பொழுது விஹான் தன் காதலி நித்யாவுடன் (பிரியா பிரகாஷ் வாரியர்) காரில் செல்லும் போது மர்ம கும்பல் ஒன்று நித்யாவை கொலை செய்து தன்னை கடத்தியது என்றும், அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெரியாது என்றும் தந்தையிடம் கூறுகிறார்.  தன் மகனுக்காக தாதா தொழிலை துறந்த ஏ.கே. மீண்டும் தனது மகனுக்காக ரெட் டிராகனாக அவதாரம் எடுக்கிறார். இதற்கெல்லாம் காரணம் டார்க் வுல்வ்ஸ் என்ற சட்டவிரோத கும்பல் என்பதும் தன் மகனை வழக்கில் சிக்க வைத்தது இரட்டை சகோதரர்களான ஜாமி மற்றும் ஜானி (அர்ஜுன் தாஸ்) என்பதை தெரிந்து கொள்கிறார். அதன் பின் ஜாமி மற்றும் ஜானியை எப்படி சாமர்த்தியமாக கண்டுபிடித்தார்? அவர்களை என்ன செய்தார்? இந்த கடத்தலுக்கு காரணம் யார்? எதற்காக? எதிரிகளை எப்படி துவம்சம் செய்து தன் மகனை சிறையிலிருந்து போதை, கொலை பழியிலிருந்து மீட்டார்? என்பதே குட் பேட் அக்லி படத்தின் விசில் பறக்கும் க்ளைமேக்ஸ்.ரெட் டிராகன் ஏ.கேவாக அஜித் முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை தன்னுடைய காந்த ஸ்டைலிஷ் நடிப்பில் கவர்கிறார். ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை காட்சிகள் மாறும் போது எண்ணற்ற வில்லன்களை அடித்து நொறுக்குவது, எதிரியை நெருங்கும் அவர்களது இடத்தில் மொட்டை மேனேஜரை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு பண்ணும் அளப்பறைகள், இவரின் பேரை கேட்டவுடன் தலை தெறிக்க ஒடும் பெரிய தாதாக்கள், மகனை கடத்தியதற்கு தான் காரணம் இல்லை மனைவி தான் காரணம் என்பதை அறியும் போது எடுக்கும் பெருமூச்சு, அவருடைய வின்டேஜ் பிளாக்பஸ்டர் படங்களிலிருந்து வரும் காட்சிகள், பழைய சூப்பர் ஹிட் கலந்த பாடல்களில் போடும் ஆட்டம், ஆக்ஷன் அதிரடி காட்சிகளில் மாஸாக க்ளாஸாக யதார்த்தமான நடிப்பில் தன்னுடைய ரசிகர்களுக்கு புது வருட ஸ்பெஷல் விருந்து படைத்துள்ளார்.

த்ரிஷா கண்டிப்பு, கோபம் நிறைந்த காதல் மனைவி ரம்யாவாக முக்கியத்துவம் இல்லையென்றாலும் வரும் காட்சிகளில் தனித்து தெரிகிறார்.ஜானி மற்றும் ஜேமியாக இரட்டை சகோதர தாதாக்களாக அர்ஜுன்தாஸ் வில்லத்தனத்தில் இரட்டை குழல் துப்பாக்கியாக பாய்ந்திருக்கிறார். அவரது திறையிருப்பு படத்தின் பல காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது குரலும் அதற்கு துணை போகின்றது.இவருடன் சேர்ந்து ஜாக்கி ஷெராஃப், ராகுல் தேவ், ரகுராம், டின்னு ஆனந்த், ஷைன் டாம் சாக்கோ, மற்றும் பிரதீப் கப்ரா ஆகியோர் முக்கிய தாதாக்களாக ஏகப்பட்ட பேர் களமிறங்கி ஏ.கேவிற்கு எதிரியாகவும், நண்பர்களாகவும் வந்து போகின்றனர்.வக்கீலாக சுனில்,  அவினாஷ், ஒரே காட்சியில் வரும் விமான நிலைய அதிகாரி யோகி பாபு, மச்சானாக பிரசன்னா, குடும்ப நண்பராக பிரபு, பெண் தாதாவாக சிம்ரன், மகனாக கார்த்திகேயன், தாதா காதலியாக பிரியா வாரியர், ஹாரி ஜோஸ், கஸ்டம்ஜித், நீதிபதியாக உஷா உதூப், கிங்ஸ்லி, ஷியாஜி ஷிண்டே என்று நட்சத்திர பட்டாளங்களின் அணிவகுப்பு குறைந்த நேரமே என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை நகர உதவியுள்ளனர்.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை அஜித்தின் அனைத்து காட்சிகளுக்கும் நியாயம் சேர்த்து ஒவர் பில்டப்பை தக்க வைத்துள்ளது. அது மட்டுமல்ல ‘பஞ்சு மிட்டாய்’ ரீமிக்ஸ் முதல் விக்ரம் படத்திலிருந்து ‘என் ஜோடி’, நாட்டுப்புறப்பாட்டு படத்திலிருந்து ‘ஓத்த ரூவா’ ரீமிக்ஸ், ‘சகலகலா வல்லவன்’ மற்றும் எதிரும் புதிரும் படத்திலிருந்து ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ போன்ற பல பழைய ஹிட் பாடல்களின் தொகுப்புடன் ஆக்ஷன் களத்துடன் கலந்து கொடுத்து ஜி.வி.பிரகாஷ் மெனக்கெடாமல் ரசிக்க வைத்து அசத்தியுள்ளார்.அபினந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு சுவாரஸ்யத்துடன் தாதாக்களின் பெருங்கூட்டத்தையும், மும்பை, ஸ்பெயின் பகுதிகளையும், சிறைச்சாலையையும், கார் சேசிங், பரபரக்கும் அதிரடி காட்சிகளையும் தீப்பொறி பறக்க கொடுத்து காட்சிக்கோணங்களில் திறமையாக வலம் வந்துள்ளார்.

அனுவர்தன் அஜித்தின் ஆடை வடிவமைப்பு படத்திற்கு ஸ்டைலிஷான தோற்றத்தை கொடுத்து மெருகேற்றியுள்ளார்.

விஜய் வேலுகுட்டியின் எடிட்டிங் தோய்வில்லாமல் விறுவிறுப்புடன் காட்சிகளை தொகுத்து கொடுத்ததில் வெற்றிபெற்றிருக்கிறார்.

பிரபல தாதாவும், உயர் பதவியில் இருக்கும் மனைவியும் சேர்ந்து பொய் வழக்கில் சிக்கியிருக்கும் மகனை காப்பாற்ற எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார்களா என்பதை தாதாக்களின் ராஜ்ஜியத்தோடு இணைத்து, அதிரடி ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்து பொழுதுபோக்குபடமாக ரசிகர்கள் குதூகலத்துடன் கொண்டாடும் அளவிற்கு அஜித்தின் தீவிர ரசிகராக இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப்படத்தில் திரைக்கதை அஜித்தின் பார்வையில் பல கோணங்களாக செல்ல, அதில் அவரின் முந்தைய படங்களான பில்லா, வரலாறு, மங்காத்தா, வில்லன், அமர்களம், வாலி, ரெட், கிரீடம் போன்ற பிற வெற்றிப் படங்களின் காட்சிகள், வசனங்களோடு களமிறங்கி, நினைத்த நேரத்தில் பாட்டு, அதிரடி ஆக்ஷனின் லாஜிக்கில்லா மேஜிக்கை வழங்கி தல என்ற வார்த்தை படத்தில் அத்தனை காட்சிகளுக்கும் உந்து சக்தியாக இருந்து வெற்றி வாகை சூட்டியிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். ஃப்ரான்க் இல்ல பிராங்க், போட்டோ ஷ_ட், வயலன்ஸ், மொட்ட பேங்க், ஏஐ மூலம் மனைவியின் வாய்ஸ்யை உருட்டு என்று கிண்டலடிப்பதும் என்று பல இடங்களில் பஞ்ச் வசனங்கள் கலகலப்பூட்டுகிறது. பழைய படத்தில் தல என்று மகாநதி ஷங்கர் அழைக்க, அவரைப் வைத்தே முதல் காட்சியில் இந்தப்படத்தின் சம்பவங்களை விவரிப்பது போல் சொல்லியிருப்பதும், ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்கு வரைபடமாக விவரிப்புடன் கொடுத்து சட்டென்று முடித்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யேமினி, ஒய் ரவிஷங்கர் தயாரித்திருக்கும் குட்பேட்அக்லி ரசிகர்களின் கொண்டாட்டத்தில் குடும்ப சென்டிமெண்ட் கலந்த கேங்ஸ்டரின் கலர்ஃபூல் ரோலர் கோஸ்டர்; ‘தல’ தெறிக்கும் அதிரடி ஆக்ஷன் பயணம்.