குடும்பஸ்தன் சினிமா விமர்சனம் : குடும்பத்தினர் அனைவரும் தியேட்டருக்கு சென்று சிரித்து மகிழலாம் கொண்டாடலாம் | ரேட்டிங்: 4/5

0
495

குடும்பஸ்தன் சினிமா விமர்சனம் : குடும்பத்தினர் அனைவரும் தியேட்டருக்கு சென்று சிரித்து மகிழலாம் கொண்டாடலாம் | ரேட்டிங்: 4/5

சினிமாகாரன் சார்பில் எஸ். வினோத்குமார் தயாரித்திருக்கும் குடும்பஸ்தன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜேஷ்வர் காளிசாமி.

இதில் மணிகண்டன் – நவீன், குரு சோமசுந்தரம் – ராஜேந்திரன், சான்வே மேகனா – வெண்ணிலா, ஆர்.சுந்தரராஜன் – பழனிசாமி, குடச்சனத் கனகம் – சுப்புலட்சுமி, நிவேதிதா ராஜப்பன் – அனிதா, ஷன்விகா ஸ்ரீ – அனிதா ராஜேந்திரனின் மகள், முத்தமிழ் – சிம்சன், பிரசன்னா பாலச்சந்திரன் – மனோகரன், ஜென்சன் திவாகர் – அமீர், அனிருத் – குட்டி தம்பி, பாலாஜி சக்திவேல் – மோகன் ராம், அபிலாஷ் – மாணிக்சந்த், டிஎஸ்ஆர் ஸ்ரீPனிவாசன் – பதிவாளர், காயத்திரி – வீட்டு உரிமையாளர், வர்கீஸ் – ராஜேந்திரனின் எம்.டி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : ஓளிப்பதிவு : சுஜித் என் சுப்ரமணியம், படத்தொகுப்பு : கண்ணன் பாலு, இசை : i​வசாக், இணை திரைக்கதை : என்.கிருஷ்ணகாந்த், வசனம்  : பிரசன்னா பாலச்சந்திரன், கதை – திரைக்கதை : பிரசன்னா பாலச்சந்திரன், ராஜேஷ்வர் காளிசாமி, ஒலி வடிவமைப்பாளர் : அந்தோணி பி.ஜே.ரூபன்,சண்டைப் பயிற்சி : தினேஷ் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளர் : மீரா. எம், கலை இயக்குனர் : சுரேஷ் கல்லேரி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர், டி.ஒன்

பாலாஜி சக்திவேல் நடத்தும் தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரியும் நவீன் (மணிகண்டன்) தன்னுடைய ஐடியாவிற்கு மதிப்பில்லாமல் இருக்க வேண்டா வெறுப்போடு வேலை செய்து கொண்டிருக்கிறார். இதனிடைய வேறு ஜாதியைச் சேர்ந்த வெண்ணிலாவை (சான்வே மேகனா) காதலித்து அவசர அவசரமாக நண்பர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். இதை கேள்விப்படும் இரு குடும்பத்தாரும் வயிற்றெச்சல் பட்டு சாபமிட இவர்கள் முன் நன்றாக வாழ வேண்டும் என்று நவீன் சபதமிடுகிறார். பிறகு தம்பதியினர் நவீனின் பெற்றோருடன் வசிக்கச் செல்கிறார்கள். நவீனின் அக்கா திருமணம் செய்து கொண்டு வசதியாக தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். நவீன் தாயார் சுப்புலட்சுமி (குடச்சனத் கனகம்) மருமகள் வெண்ணிலாவிடம் ஜாதி மற்றும் அவரது பிறந்த வீட்டை சாடி தினமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சண்டை சச்சரவிற்கு இடையே நவீன் உதவியுடன் வெண்ணிலா ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். நல்ல வேலை, அதிக சம்பளம் வாங்கும் அக்கா கணவர் ராஜேந்திரன் (குரு சோமசுந்தரம்) நவீனின் வேலையையும், அவரையும் எப்போதும் கிண்டலடித்து நக்கல் சிரிப்புடன் அவமானப்படுத்தி வருகிறார். இதனால் மாமா ராஜேந்திரனிடம் அதிகம் பழகாமல் கோபத்துடன் இருக்கிறார் நவீன்.வெண்ணிலா கர்ப்பமாகும் போது, தம்பதியினர் குழந்தைக்காக எதிர்காலத்தில் சம்பாதித்து வசதியாக வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.  இதனிடையே வேலையின் போது நண்பர் அவமானப்படுத்தப்பட, இதனை தட்டி கேட்கும் நவீனுக்கு வேலை பறி போகிறது. தந்தையின் பழைய வீட்டை சரி செய்யவும், தாயின் ஆன்மீக பயணத்திற்கு செலவிற்கும், வெண்ணிலாவின் படிப்பிற்கும் தடை ஏற்பட்டு விடும் என்பதற்காக வேலை இழந்ததை மறைக்கிறார் நவீன்.  புதிய வேலையை தேடி சேர்ந்து விடலாம் என்று அலையும் போது நவீனின் வங்கிக் கணக்கு காலியாக தன் நண்பனின் யோசனைப்படி போன் செயலி மூலம் கடன் வாங்குகிறார். நவீன் முதலில் ₹20,000 கடனுடன் தொடங்க குடும்பத் தேவைகளை சமாளிக்க அது எப்படியோ ₹3 லட்சம் வரை கடன் சென்று விட மாமாவின் மூலம் வீட்டிற்கு வேலையில்லாத விஷயம் தெரிந்து விடுகிறது. அதன் பின் மாமாவின் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தாயின் உதவியுடன் பேக்கரி கடை ஆரம்பிக்கிறார். இறுதியில் அவரால் வெற்றிகரமாக பேக்கரி கடையை நடத்த முடிந்ததா? கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தாரா? நவீன் சந்தித்த நெருக்கடிகள் என்ன? அதிலிருந்து மீண்டு வந்தாரா? என்பதே படத்தின் கலகலப்பான கதைக்களம்.

நவீன் கதாபாத்திரத்தில் மணிகண்டன் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒடும் நடுத்தர இளைஞனாக வாழ்ந்துள்ளார். வேலையில் காட்டும் கோபம், அப்பாவிற்கு பயந்து குடிகார நண்பர்களை வீட்டை பழுது பார்க்க அனுப்புவது, அம்மாவை சமாதானம் செய்ய பயணத்திற்கு ஏற்பாடு செய்வது, மனைவியின் படிப்பிற்காக செலவு செய்வது, மனைவி, அம்மா இருவரையும் சமாளிக்க முடியாமல் தவிப்பது, வேலை பறி போனவுடன் சோர்வடையாமல் தன்னம்பிக்கையுடன் வேலை தேடுவது, வேறு வழியில்லாமல் கடன் வாங்கி சமாளிப்பது, மாமாவை எதிர்த்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் மேம்பட்ட நடிகராக மிளிர்கிறார். திடீரென்று எழும் பிரச்சனையை சமாளித்தவுடன் சமாதானமடைவது, குளியலறைக்கு சென்று தனியாக புலம்புவது, பிறக்கப்போகும் குழந்தையிடம் எந்த முடிவை எடுத்தாலும் பேசி மகிழ்வது என்று படம் முழுவதும், கடன் வாங்குவதில் தேர்ந்தவராக பல குரலில் பேசி சமாளிப்பது என்று தன் தோளில் படம் முழுவதும் சுமந்து சீரியஸான காட்சிகள் என்றாலும் அதில் நகைச்சுவை இழையோடு குடும்ப பாசமிக்க இளைஞராக அசத்தலாக நடித்திருப்பது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.  கதை தேர்வில் அசாதர முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

காதல் மனைவியாக, மாமியாரின் சண்டையை கண்டு கொள்ளாமல் படிப்பிலே கவனம் செலுத்துவதும், குழந்தைக்காக மனக்கோட்டை கட்டுவது, கணவனிடன் சண்டை போடுவது, புகுந்த வீட்டின் சொந்தங்கள் அவமானப்படுத்தினாலும் தாங்கிக் கொள்வது, கணவனை அரவணைத்து செல்வது என்று இறுதிக் காட்சியில் நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார் சான்வே மேகனா.

நக்கல், நய்யாண்டி கலந்து நவீனின் மாமாவாகவும் வரும் குரு சோமசுந்தரம் சீனா செல்ல எடுக்கும் முயற்சிகள், கற்றுக்கொள்ளும் மொழி, உணவு என்று அவர் பண்ணும் ரகளை, நவீனின் ஆபிசிற்கு வந்து விசாரிப்பது, குடுகுடுப்பக்காரன் சொல்வதால் மாமானாருக்கு 60வது கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்து படும் அவஸ்தை, அதன் பின் நவீனை பழி வாங்க செய்யும் தந்திரம், மனைவியை படுத்தும் பாடு இறுதியில் மனம் திருந்தி நல்ல மாப்பிள்ளையாகுவது வரை அனுபவ நடிப்பை நகைச்சுவையுடன் ரசிக்கும்படி வழங்கியுள்ளார்.

மகனின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை கொடுக்க முயலும் தந்தையாக ஆர்.சுந்தரராஜன் (பழனிசாமி), படம் முழுவதும் தன்னுடைய இயல்பான தத்ரூபமான அதட்டலான தாயாக மலையாள நடிகை குடச்சனதம் கனகம் (சுப்புலட்சுமி), ராஜேந்திரனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் மனைவியாக நிவேதிதா ராஜப்பன் (அனிதா), ஷன்விகா ஸ்ரீ (அனிதா ராஜேந்திரனின் மகள்), முத்தமிழ் (சிம்சன்), சிரிப்பிற்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொள்ளும் பிரசன்னா பாலச்சந்திரன் (மனோகரன்) மற்றும் ஜென்சன் திவாகர் (அமீர்), அனிருத் (குட்டி தம்பி), பாலாஜி சக்திவேல் (மோகன் ராம்), அபிலாஷ் (மாணிக்சந்த்), டிஎஸ்ஆர் ஸ்ரீPனிவாசன் (பதிவாளர்), காயத்திரி (வீட்டு உரிமையாளர்), வர்கீஸ் (ராஜேந்திரனின் எம்.டி) மற்றும் பலர் குடும்ப செண்டிமென்ட் கலந்த படத்திற்கு மேலும் மெருகு சேர்த்துள்ளனர்.

வைஷாக்கின் பின்னணி இசையும், சுஜித் என். சுப்பிரமணியன் ஒளிப்பதிவும் படத்தின் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் அனைவரும் ரசிக்கும்படி திறம்பட கொடுத்துள்ளனர்.

படத்தொகுப்பாளர் கண்ணன் பாலு இரண்டாம் பாதியில் சில காட்சிகளை குறைத்திருக்கலாம்.

கதை, திரைக்கதை : பிரசன்னா பாலச்சந்திரன், ராஜேஷ்வர் காளிசாமி. இப்படத்தில் வசனத்திற்கும் உறுதுணையாக இருந்துள்ளார் பிரசன்னா பாலச்சந்திரன். ஆரம்பம் முதல் இறுதி வரை குடும்பத்தில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும், வேலையில்லாமல் இருந்தால் எத்தனை கஷ்டம் என்பதையும், வீட்டில் அனுபவிக்கும் வேதனைகளையும், கடனால் ஏற்படும் விபரீதங்களையும், அதை சமாளிக்க சொல்லும் பொய்கள், எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும்,  சொந்த தொழிலில் ஏற்படும் போட்டியை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுவது, பிடிக்காத வேலையை குடும்பத்திற்காக சகித்துக் கொண்டு செய்வது என்று ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி அழகான மாலையாக தொடுத்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் நகைச்சுவை கலந்து லாஜிக் பார்க்காமல் ரசித்து மகிழும்படி வெற்றி வாகை சூடி முதல் படத்திலேயே தன் முத்திரையை பதித்துள்ளார் ராஜேஷ்வர் காளிசாமி.

மொத்தத்தில் தயாரிப்பாளர் எஸ். வினோத்குமார் தயாரித்துள்ள குடும்பஸ்தன் அனுபவம் வாய்ந்த நடிகர்கள், சிறப்பான தொழில் நுட்ப கலைஞர்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வித்தியாசமான கதைக்களத்துடன் குடும்பத்தினர் அனைவரும் தியேட்டருக்கு சென்று சிரித்து மகிழலாம் கொண்டாடலாம்.