கீனோ சினிமா விமர்சனம் : கீனோ மிரளும் குழந்தைகளின் மனோநிலைக்கேற்ப கையாளும் திறனை பெற்றோர்களுக்கு புரிய வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது | ரேட்டிங்: 3/5
கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், இசையுடன் ஆர்.கே. திவாகர் இயக்கி இருக்கும் படம் கீனோ.
இதில் மகாதாரா பகவத், மாஸ்டர் கந்தர்வா, ரேணுகா சதீஷ், கண்ணதாசன், ராஜேஷ் கோபிஷெட்டி, மாஸ்டர் சிவ சுகுந்த், சுந்தர் அண்ணாமலை, சிவம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு: ஆலிவர் டேனி, படத்தொகுப்பு : கிருத்திகா காந்தி,மக்கள் தொடர்பு : பெரு துளசி பழனிவேல்.
வேலைக்கும் செல்லும் தந்தை மகாதாரா பகவத், தாய் ரேணு சதீஷ், பள்ளிக்கு செல்லும் 13 வயது மகன் கந்தர்வா என்று அழகான சிறிய குடும்பம் வசதிகள் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியில் நிறைவாக வாழ்கின்றனர்.மழை பெய்யும் ஒரு நாள் இரவு தாய் ரேணு மகனை மாடியில் இருக்கும் துணியை எடுத்து வர அனுப்ப, அங்கே கீனோ என்ற மனித உடல் வித்தியாசமான தலையுடன் கூடிய உருவம் தன்னை அழைப்பதை பார்த்து மிரண்டு கிழே வந்து விடுகிறான். தாயிடம் நடந்ததை சொல்ல, ஒன்றுமில்லை என்று தாய் சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார். அன்று முதல் கந்தர்வா எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்து பயமுறுத்தி மறைந்து விடும் கீனோவினால் பாதிக்கப்படுகிறான். மகனின் நிலையை பார்த்து நடந்தவற்றை அறிந்து கொள்ளும் தந்தை மகாதாரா தீய சக்தி தொந்தரவு செய்வதாக நினைத்து மாந்தீரிகம் செய்து பார்த்தும் ஒன்றும் பிரயோசனமில்லாமல் இருக்கிறது. இந்நிலையில் யார் இந்த கீனோ? எதற்காக கந்தர்வாவை மட்டும் பயமுறுத்துகிறது? என்ன காரணம்? பெற்றோரால் கந்தர்வாவின் பிரச்சனைக்கு தீர்வு காண முடிந்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
பாசமுள்ள தந்தையாக மகாதாரா பகவத் மகனின் நிலையை கண்டு பதறுவதும், அதற்காக எடுக்கும் நடவடிக்கைகள் என்று யதார்த்தமாக வாழ்ந்திருக்கிறார்.
தாயாக ரேணு சதீஷ் வீடு வாங்க செய்யும் அளப்பறைகள், மகனின் நிலை கண்டு கலங்குவது என்று தன் பங்களிப்பை பதிய வைத்துள்ளார்.
மற்றும் 13 வயது மகனாக கந்தர்வா படம் முழுவதும் இவரின் கண்ணோட்டத்தில் செல்வதால், படத்தில் தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான பயமுறுத்தலை விவரித்து ஏன், எதற்கு என்று தெரியாமல் பரிதவிக்கும் காட்சிகளில் கை தட்டல் பெறுகிறார்.
மேலும் ராஜேஷ் கோபிசெட்டி, மாஸ்டர் சிவ சுகுந்த், சுந்தர் அண்ணாமலை, கண்ணதாசன் மற்றும் சிவம் ஆகியோரின் பங்களிப்பு கச்சிதம்.
காட்சிக் கோணங்கள் குறைவு என்றாலும் அதை சுவாரஸ்யமாக மிரட்டலாக காட்டியிருக்கிறது ஓலிவர் டெனியின் ஒளிப்பதிவு, தயாரிப்பாளர் கிருத்திகா காந்தியின் படத்தொகுப்பு, இயக்குனர் ஆர்.கே.திவாகர் இசை மற்றும் பின்னணி இசை ஆகியோரின் பங்களிப்பு படத்தின் த்ரில்லிங் காட்சிகளுக்கும், பதட்டமான சம்பவங்களையும் சிறப்பாக கையாண்டுள்ளனர்.
படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை மட்டுமில்லாமல் பயமுறுத்தும் கீனோவாக நடித்து இயக்கியும் இருக்கிறார் ஆர்.கே.திவாகர். ஒரு குழந்தையில் கண்ணோட்டத்தில் பய உணர்வால் ஏற்படும் கற்பனை உருவத்துடன், வித்தியாசமான கதைக்களத்துடன், பெற்றோர்களின் பொறுப்பையும், அக்கறையையும் தெளிவாக எடுத்துரைத்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கற்பனை கலந்து மிரட்டலுடன் கொடுத்திருந்தாலும் இன்னும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்புடன் இவரின் உழைப்பு பேசப்பட்டிருக்கும்.
மொத்தத்தில் கந்தர்வ செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரித்திருக்கும் கீனோ மிரளும் குழந்தைகளின் மனோநிலைக்கேற்ப கையாளும் திறனை பெற்றோர்களுக்கு புரிய வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.