கல்கி 2898 ஏடி சினிமா விமர்சனம் : கல்கி 2898 ஏடி புராணம் கலந்த அறிவியல் தொழில்நுட்பத்தில் மின்னிடும் ஆக்ஷனில் பிரம்மாண்ட வர்ண மாயாஜாலம்| ரேட்டிங்: 3.5/5

0
1202

கல்கி 2898 ஏடி சினிமா விமர்சனம் : கல்கி 2898 ஏடி புராணம் கலந்த அறிவியல் தொழில்நுட்பத்தில் மின்னிடும் ஆக்ஷனில் பிரம்மாண்ட வர்ண மாயாஜாலம்| ரேட்டிங்: 3.5/5

வைஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் சி அஸ்வினி தத் தயாரித்திருக்கும் கல்கி 2898 ஏடி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாக் அஸ்வின்

இதில் பிரபாஸ் – பைரவா, அமிதாப் பச்சன் – அஸ்வத்தாமா, கமல்ஹாசன் – சுப்ரீம் யாஸ்கின், தீபிகா படுகோன் – சுமதி, திஷா பதானி – ரக்சி, ஷோபனா – மரியம், பசுபதி-வீரன், பிரம்மானந்தம் – ராஜன் மற்றும் பலர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச், இசை – சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு – கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ், வெளியீடு – என்.வி. பிரசாத் – ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ்,மக்கள் தொடர்பு – யுவராஜ்

மகாபாரதப் போருக்குப் பிறகு ஆறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, காசி உலகின் கடைசி நகரமாக மாறுகிறது. அங்கே காசியில் ஏழைகள் வறுமையிலும், பணக்காரர்கள் தனியாக காம்ப்ளக்ஸ் என்ற உலகத்தில் செல்வ செழிப்புடன், ஆடம்பரமாக வாழ அதற்கு தலைவராக சுப்ரீம் யாஸ்கின் (கமல்ஹாசன்) ஆளுகிறார். வலுவிழந்து இருக்கும் சுப்ரீம் யாஸ்கின், பிராஜக்ட் கே என்ற பெயரில் அறிவியல் தொழில்நுட்பம் கலந்த கருத்தரித்தல் மையத்தில் பல பெண்களை கருஉருவாக்கம் செய்து அதிலிருந்து சக்திகளைப் பெற ஒரு மந்திர சீரம் பயன்படுத்துகிறார். அந்த சீரம் யாஸ்கின் உடலில் செலுத்தி வலு பெற பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கருவுற்ற பெண்ணின் வயிற்றில் மூன்று மாதங்கள் மட்டுமே கரு தங்குகிறது அதற்கு பிறகு கரு கலைந்துவிடுகிறது. அதனால் தகுதியான பெண் யார் என்ற தேடலில் சம்80 என்ற சுமதி (தீபிகா படுகோன்) சிக்குகிறார். ஐந்து மாத கர்ப்பிணியான சுமதி தன்னையும், குழந்தையையும் காப்பாற்றிக்கொள்ள காம்ளக்ஸ் இடத்திலிருந்து தப்பித்து விடுகிறார். அவருக்கு சம்பாலா ரீபல்ஸ் குரூப் உதவி செய்கிறது.  இதனிடையே பைரவா (பிரபாஸ்) காம்ப்ளக்ஸ்க்கு வர வேண்டும் என்பது லட்சியக்கனவுடன் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாலாக சிறிய வேலைகளை செய்து கொண்டும் சண்டையிட்டும் பல யூனிட்களை சேகரித்து பவுண்ட்டியாக மாற்றி காம்ளக்ஸிற்கு போக சேர்த்து வைக்கிறார். அவருக்கு உறுதுணையாக புஜ்ஜி என்ற சிறிய பேசும் ரோபோ மற்றும் வித்தியாசமான வடிவமைப்புடன் வண்டியும் வைத்திருக்கிறார். வேறு யுகத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்), கல்கியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால் தொடர்ந்து வாழ்கிறார்.  சுமதி வயிற்றில் சுமப்பது கல்கி என்பதை உணர்ந்து அவளை காப்பாற்ற முயல்கிறார். 5 மில்லியன் யூனிட்களை வெகுமதியாக பெறுவதற்காக பைரவா சுமதியை தேடி வருகிறார். அஸ்வத்தாமாவிற்கும் பைரவாவிற்கும் நடக்கும் சண்டையில் சுமதியை கடத்தி செல்கிறார் பைரவா. சுப்ரீம் யாஸ்கினிடம் சுமதியை ஒப்படைத்தாரா பைரவா? அஸ்வத்தாமாவுக்கும் பைரவாவிற்கும் என்ன சம்பந்தம்? சுப்ரீம் யாஸ்கின் பலம் பெற வதம் பண்ண என்ன முடிவு செய்தார்? என்பது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பம் என்பது க்ளைமேக்ஸ் காட்சி.

பைரவாவாக பிரபாஸ் டோலிவுட்டின் ‘டார்லிங்,’ நகைச்சுவை கலந்த பேச்சு, சம்பாதிக்க பேராசை மற்றும் தந்திரமான ஆளுமை கொண்ட மிரட்டல் கலந்த சண்டையில் வல்லவராக தான் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார், மேலும் அவரது டிஜிட்டல் துணையான புஜ்ஜியுடன் (கீர்த்தி சுரேஷ் குரல்) கதைக்குகேற்ற எதிர்கால தொழில்நுட்ப கார், படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. பிரபாஸின் மற்றொரு மகாபாரத சஸ்பென்ஸ் கதாபாத்திரம் பெரிய திரையில் மட்டுமே அனுபவிக்க வேண்டிய ஆச்சரியம். இடைவேளைக்கு பின் தான் அமிதாபுடன் நடக்கும் ஆக்ஷன் அவதாரம் களை கட்டி விறுவிறுப்புடன் கதை நகர உதவுகிறது.

அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன் இவரின் திரைப்பிரவேசம் படத்திற்கு பிளஸ். துரோணாச்சாரியாரின் எட்டடி கொண்ட மகன் மரணமில்லாத போர்வீரன் அஸ்வத்தாமா இந்த வேடத்தில் அமிதாப் நடிக்கப் பிறந்தவர் போல் இருக்கிறது. அவரது மெக்னடிக் பிரசன்ஸ் மற்றும் அளவான வசன உச்சரிப்பு, துணிகள் சுற்றிய முகத்தில் தெரியும் கண்களின் கூர்மை, நெற்றியில் பதித்த ஒளிரும் கல், அவரின் சண்டைக் காட்சிகளில் மெய் மறக்கும் மாயாஜாலம்,  பிரபாஸ் இடையிலான மோதல் காட்சிகள் அப்ளாஸ் அள்ளுகிறது.வெல்டன்

முக்கிய கதாபாத்திரங்களில் சுமதியாக நடிக்கும் தீபிகா படுகோனே, ஓடிப்போகும் கர்ப்பிணிப் பெண்ணாக தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக தப்பித்து செல்வதும், பயத்தில் மிரளுவதும் என்று அசத்தலான நடிப்பு. சாஸ்வத சாட்டர்ஜி வில்லன் தளபதியாக மிரட்டுகிறார்.

கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற எதிரியாக ஒரிரு காட்சிகள் வந்தாலும் நச்சென்று மனதில் பதிகிறார். வில்லத்தனத்தை இரண்டாம் பாகத்தில் காண ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டார்.

ராஜேந்திர பிரசாத், பசுபதி, சோபனா, அன்னா பென் போன்ற துணை நடிகர்கள் கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை மெருகேற்றுகிறார்கள். எஸ்.எஸ்.ராஜமௌலி, ராம் கோபால் வர்மா, அனுதீப், மிருணால் தாக்கூர், விஜய் தேவரகொண்டா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரின் கேமியோக்கள் மகிழ்ச்சிகரமான சில நொடி ஆச்சரியங்கள்.

பிரபாஸ் மற்றும் திஷா பதானி இடையே சுவாரஸ்யமில்லாத காட்சிகள், காம்ப்ளெக்ஸில் அமைக்கப்பட்ட பாடல் தேவையற்றதாக தெரிகிறது.

ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் மெய் மறக்கும் அனுபவத்தை தந்து சிறப்பாக உள்ளது. கோட்டா வெங்கடேஸ்வர ராவின் எடிட்டிங் நன்றாக இருந்தாலும், குறிப்பாக முதல் பாதியில் பல தேவையில்லாத காட்சிகளை வெட்டி படத்தின் வேகத்தை மேம்படுத்தியிருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு பக்க பலமாக உதவி செய்துள்ளது.

வைஜெயந்தி மூவீஸின் தயாரிப்பு தரத்தில் மதிப்பு மிக்கவையாக தந்திருக்கிறது. கலைத் துறை, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப குழு, போஸ்ட் புரொடக்‌ஷன் குழுவினர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் அனைவரும் படத்தை ஒரு சிறந்த அனுபவமாக மாற்றியிருக்கிறார்கள்.

மகாபாரத காலத்தில் நடந்த குருக்ஷேத்திரப் போரில் கதை தொடங்க அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்) பகவான் கிருஷ்ணரால் அழியா சாபம் பெற 6000 ஆண்டுகளில் கல்கியாக கடவுள் மறுபிறவி எடுக்கும் போது, குழந்தையைப் பாதுகாப்பதன் மூலம் அவர் தனது தவத்தை நிறைவேற்றி சாபத்திலிருந்து விடுபடுவார் என்று தொடங்கும் திரைக்கதை பின்னர் காசியில் பயணித்து, காம்ளக்ஸ் உலகத்தில் அடியெடுத்து வைத்து, கர்ப்பிணியை காப்பாற்ற போராடும் கதைக்களத்துடன் திறமையான நடிகர்கள் மற்றும் படக்குழவினரின் உதவியுடன் மெய் சிலிர்க்க வைத்துள்ளார் இயக்குனர் நாக் அஸ்வின்.படத்தின் இரண்டாம் பாதி உங்கள் இருக்கையின் நுனியில் விட்டுச்செல்லும் உயர்-ஆக்டேன் தருணங்களால் நிரம்பியுள்ளது. மகாபாரதக் காட்சிகள் விதிவிலக்காக தரத்தோடு கொடுக்கப்பட்டுள்ளன, கிளைமாக்ஸ் மற்றும் கிளிஃப்ஹேங்கர் முடிவு குறிப்பாக பிரமிக்க வைக்கிறது. நாக் அஸ்வின் மற்றும் அவரது குழுவினரின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் சில காட்சிகள் தனித்து நிற்கின்றன.

மொத்தத்தில் வைஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் சி அஸ்வினி தத் தயாரித்திருக்கும் கல்கி 2898 ஏடி புராணம் கலந்த அறிவியல் தொழில்நுட்பத்தில் மின்னிடும் ஆக்ஷனில் பிரம்மாண்ட வர்ண மாயாஜாலம்.