கங்குவா சினிமா விமர்சனம் : கங்குவா விஞ்ஞானத்துடன் பண்டைக்கால பின்னணியில் கற்பனை கலந்த பழி வாங்கும் அதிரடி ஆக்ஷன் விஷுவல் ட்ரீட் | ரேட்டிங்: 4/5

0
1185

கங்குவா சினிமா விமர்சனம் : கங்குவா விஞ்ஞானத்துடன் பண்டைக்கால பின்னணியில் கற்பனை கலந்த பழி வாங்கும் அதிரடி ஆக்ஷன் விஷுவல் ட்ரீட் | ரேட்டிங்: 4/5

ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா, வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி ஆகியோர் தயாரித்திருக்கும் கங்குவா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவா.

இதில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ்.அவினாஷ், நடராஜன் சுப்ரமணியம், கயல் தேவராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் :-ஒளிப்பதிவு: வெற்றி பழனிசாமி, எடிட்டிங்: நிஷாத் யூசுப், இசை: தேவி ஸ்ரீP பிரசாத், மக்கள் தொடர்பு : டி ஒன்

திரைப்படம் 1070 மற்றும் 2024 ஆகிய இரண்டு காலக்கட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களாக கதைக்களம் விரிவடைகிறது. 202​4-ல் கோவாவில் பிடிக்க முடியாத குற்றவாளிகளை காவல்துறையினருக்கு பணத்திற்காக பிடித்து தரும் பவுண்டி ஹன்டர் பிரான்சிஸ் (சூர்யா) மற்றும் ஏஞ்சலினா (திஷா பதானி). இருவருக்குள்ளும் முன்னர் காதல் இருந்து முறிந்த பின்னர் தொழில் போட்டி பொறமை இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் முக்கிய குற்றவாளியை பிடிக்க செல்லுமிடத்தில் பிரான்சிஸ் சிறுவன் ஒருவனை பார்க்க, இருவருக்குள்ளும் ஏதோ தொடர்பு முன்ஜென்ம பந்தம் ஒன்று இருப்பதை உணர்கிறார். அத்துடன் சிறுவனைக் காப்பாற்ற தன் உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்குச் செல்கிறார். திரைப்படம் பின்னர் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை (1070) நோக்கி செல்கிறது. ஐந்தீவின் ஒன்றான பெருமாச்சியின் வலிமைமிக்க பழங்குடி இளவரசன் கங்கா என்கிற கங்குவா (சூர்யா). ரோமானியர்கள் ஐந்தீவை தங்கள் படையை நிலை நிறுத்த இடம் தேட முதலில் பெருமாச்சி தீவை நெருங்க நினைக்கிறார்கள். இவர்களுக்கு உதவ முன் வரும் துரோகி கொடவனின் (நட்ராஜ்) உதவியுடன், தந்திரம் மற்றும் புத்திசாலித்தனம் மூலம் தீவின் வீரர்களை வீழ்த்த இதனை அறியும் கங்குவா இனத்தை ஏமாற்றி அழித்த கொடவனுக்கு மரண தண்டனை கொடுக்கிறார். கொடவனுடைய மகனை கங்குவாவிடம் ஒப்புடைத்துவிட்டு கொடவனின் மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அனாதையாகும் கொடவனுடைய மகனை தன் மகன் போல கங்குவா பாவிக்கிறார். அதன் பின் ரோமானியர்கள் கங்குவாவின் படைகளைத் தோற்கடிக்க ஆரத்தி தீவின் தலைவன் உதிரனின் (பாபி தியோல்) உதவியுடன் பெருமாச்சியை தாக்க வரும்போது கங்கா தனது மக்களைப் பாதுகாக்க எதிரிகளுடன் போராடுகிறார்.  கங்குவா தன் குலத்தை காக்க என்ன செய்கிறார்? பெருமாச்சி தீவும் மற்ற தீவுகளில் வசிக்கும் பழங்குடியினரும் ஏன் மோதுகின்றனர்? பிரான்சிஸ் கங்குவாவின் மறு அவதாரமா? கோடுவனுடைய மகன் தான் இன்றைய காலகட்டத்தின் சிறுவனா ? இரண்டு காலகட்டத்திற்கும் இருக்கும் தொடர்பு என்ன? என்ற மர்மத்தை அவிழ்க்க பெரிய திரைகளில் கங்குவாவைப் பாருங்கள்.

தன் குலத்துக்குக் கொடுத்த வாக்குறுதிக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்யும் 1070ஆம் கால கட்டத்தின் போர்வீரனாக கங்குவா மற்றும் 2024ஆம் காலகட்டத்தில் பவுண்டி ஹன்டராக பிரான்சிஸ் என்ற இரட்டை வேடத்தில் சூர்யா அசத்தி அதகளம் செய்துள்ளார். பிரமாண்டமான காட்சிகள், ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களில் பழங்குடி வீரனாக வரும் கங்குவாக வரும் சூர்யாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. பிரான்சிஸ் கதாபாத்திரம் பணத்திற்காக எதையும் துணிந்து செய்து முடிப்பவன், கங்குவா தன் பழங்குடி மக்களின் நலனுக்காக போராடுபவன் என்று வௌ;வேறு மாறுபட்ட பரிணாமங்களில் ஜொலிக்கிறார் சூர்யா.

பாலிவுட் நடிகை திஷா பதானி தனது கதாநாயகி கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து சில காட்சிகள் மட்டும் அழகாக கவர்ச்சி விருந்து படைத்துவிட்டு சென்று விடுகிறார்.

பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக சிறப்பாக நடித்திருந்தாலும் படத்தில் முழுமையாக பயன்படுத்தவிப்படவில்லை.

நடராஜன் சுப்ரமணியமும் மிகச் சிறப்பாக நடித்து கவனத்தை ஈர்த்து படத்தின் முக்கிய திருப்புமுனையை அமைத்து கொடுத்து விட்டு சென்று விடுகிறார்.

கயல் தேவராஜ் தன்னுடைய இயல்பான நடிப்பால் சில காட்சிகள் என்றாலும் தனித்து தெரிந்து முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளார்.

இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் வருவதும் மற்ற கதாபாத்திரங்கள் அவை வந்து போகும் போது உங்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது.இறுதியில் ஆச்சரியமூட்டும் கேமியோ பார்வையாளர்களுக்கு ஒரு நிச்சயமான விருந்தாகும்.

ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமியின் காட்சியமைப்பு கங்குவா படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும். படத்தின் முக்கியமான காட்சிகளுடன், சுப்ரீம் சுந்தரின் மீதமுள்ள ஆக்‌ஷன் காட்சிகளும் கதை மற்றும் காலகட்டத்திற்கு ஏற்ப அழகாக பிரமாண்டமாக படமாக்கப்பட்டு கண்களுக்கு விருந்து படைத்திருக்கின்றனர்.

நிஷாத் யூசுப்பின் எடிட்டிங்கும் சிறப்பாக உள்ளது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள பாடல்களும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது.

3டி தொழில்நுட்பம், கலை ஆக்கம், சிகை அலங்காரம், மலைவாழ் பழங்குடியினரின் ஆடைகள் மற்றும் செட்டுகள் படத்தின் காட்சிகளுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

விஷ{வல் எஃபெக்ட்ஸ் தரமானது ஒரு சிலிர்ப்பான அனுபவத்தை வழங்குவதோடு, தனித்துவமான ஆக்‌ஷன் காட்சியானது படத்தின் பிரம்மாண்டத்தை அதிகரிக்கிறது.

ஐந்தீவு பழங்குடி மக்களுக்கும் அவர்களின் உலகங்களுக்கும் இருக்கும் வேறுபாட்டையும்,  ஒட்டுமொத்த படத்திற்கு இடையிலான காலகட்டங்களின் வேறுபாட்டையும் லட்சிய சிந்தனைகள் கொண்ட படமாக கங்குவாவை இயக்கியுள்ளர் சிவா. கங்குவா ஒரு மனிதனின் உணர்ச்சிகரமான கதை, கங்குவாவின் பின்னணி, ஒரு குழந்தையுடனான பிரிக்கமுடியாத உறவு, அவர்கள் சந்திக்கும் பேரிடர், நெருங்கி வரும் துரோகம் ஆகியவற்றில் மிகவும் ஆழமாக ஆராய்ந்து, காலப் பகுதிகள் மற்றும் ஐந்து குலங்களுக்கு இடையிலான பழி வாங்கும் கதைக்களமாக சிவா கதாசிரியர் மற்றும் இயக்குனராக நியாயம் செய்திருக்கிறார். படத்தில் தொடர்பில்லாத காட்சிகளின் கேள்விகளுக்கான விடையை இரண்டாம் பாகத்திற்கான அடித்தளம் அமைத்துள்ளனர்.

பிரமாண்ட தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கங்குவா படத்தை தனது பேனரில் மறக்க முடியாத படமாக மாற்ற எந்த விஷயத்திலும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

மொத்தத்தில் ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா, வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி ஆகியோர் தயாரித்திருக்கும் கங்குவா விஞ்ஞானத்துடன் பண்டைக்கால பின்னணியில் கற்பனை கலந்த பழி வாங்கும் அதிரடி ஆக்ஷன் விஷுவல் ட்ரீட்.