ஒற்றைப் பனை மரம் சினிமா விமர்சனம் : ஒற்றைப்பனை மரம் நெருடல் தரும் நெடும் துயரம் | ரேட்டிங்: 2.5/5
ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தணிகைவேல் தயாரித்து இயக்குநர் புதியவன் ராசைய்யா இயக்கி உள்ள ‘ஒற்றைப் பனை மரம்’ படத்தில் புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, நூர்ஜகன், ஜெகன் மாணிக்கம்;, தனுவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைக்க, தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க இலங்கை ஒளிப்பதிவையும் சி.ஜே.ராஜ்குமார் இந்திய ஒளிப்பதிவையும் செய்துள்ளனர்.மக்கள் தொடர்பு குமரேசன் (கே மீடியா).
இலங்கையின் உள்நாட்டுப் போரில் தப்பிய மூன்று ஈழ தமிழர்களின் எழுச்சியூட்டும் கதையைச் சொல்கிற படம் ஒற்றைப்பனைமரம். தனது கர்ப்பிணி மனைவியை இழந்து தவிக்கும் ஒருவர் சுந்தரம் (புதியவன் ராசய்யா), ஒரு போராளி கஸ்தூரி (நவயுகா) மற்றும் மகளாக தத்து எடுத்துக் கொண்ட புல்லாங்குழல் வாசிக்கும் ஆட்டிசம் பாதித்த அனாதையான இளம்பெண் அஜா (அஜாதிகா) இவர்கள் மூவரும் இலங்கையில் 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் காண, தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடும் போது ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி பயணிக்கிறார்கள். விதவையான ஈழ பெண்களுக்கு ஒரு சங்கத்தை உருவாக்கி அவர்களின் எதிர்காலத்திற்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சுந்தரத்தின் முயற்சியை அறிந்து அவரை கடத்திச் சென்று ராணுவத்தினர் சித்ரவதை செய்கிறார்கள். அதே சமயம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வாழ்க்கையை நடத்த சிரமப்படும் ஈழ கைம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தும் கொடூரமும் நடைபெறுகிறது. தனியாக வாழும் கஸ்தூரிக்கும் இந்த இன்னல்கள் ஏற்பட, தனித்து போராடி வாழ்கிறார். சுந்தரத்தை சித்ரவதை செய்து விடுவித்த பின்னர் இளைஞர்களை திரட்டி ஊர்வலத்தை நடத்த ஏற்பாடு செய்யும் முனைப்பில் இருக்கிறார். இறுதியில் சுந்தரத்தின் எண்ணம் ஈடேறியதா? சுந்தரத்திற்கு நடந்த கொடூர தாக்குதல் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, நூர்ஜகன், ஜெகன் மாணிக்கம்;, தனுவன் அனைவருமே ஈழ மண்ணில் நடக்கும் கொடுமைகளை தோலூரித்துக் காட்டியுள்ளனர். அவர்களின் இன்னல்களையும், நடக்கும் கொடுமைகளையும் சொல்லும் போது தமிழர்களை மட்டுமே குறி வைத்து சொல்வது போல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது போல் தெரிகிறது.
அஷ்வமித்ரா இசையும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பும், ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க இலங்கை ஒளிப்பதிவையும் சி.ஜே.ராஜ்குமார் இந்திய ஒளிப்பதிவையும் திறம்பட கையாண்டு படத்திற்கு உகந்த காட்சிகளை கொடுத்துள்ளனர்.
சிறந்த இயக்குனர் விருது பெற்ற ‘மண்’ பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, அதன் பின் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்து சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை உருவாக்கியுள்ளார். ஈழ போரில் புலம் பெயர்ந்த தமிழர்களின் நன்கொடைகளை கபளீகரம் செய்யும் இலங்கையில் வாழும் சில ஈழ தமிழர்களின் செல்வ செழிப்பையும், நடவடிக்கைகளும்,போருக்கு பிறகு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஈழ போராளி இளைஞர்;களை மிரட்டி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள அடியாட்களாக மாற்றி வைத்திருப்பதும், அவர்களை வைத்தே பல கொலைகளை செய்ய தூண்டுவதும், ஈழ தமிழர்களையே அவர்களுக்கு எதிராக சித்தரித்திருப்பதும், ஈழ போராளி பெண்களையும், விதவைகளையும் பாலியல் வன்கொடுமைக்கு ஈழதமிழர்களே உள்ளாக்குவதும், எதிரிகளே பரவாயில்லை என்பது போன்று படத்தில் பல சம்பவங்களை சுட்டிக்காட்டி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் தாய் மண்ணிற்காக ஈழ போராட்டத்தின் போது உயிர் நீத்த போராளிகளை ஏன் இவ்வாறு சித்தரித்திருக்கிறார்? எந்த ஒரு அரசியல் கட்டமைப்பையும், தனி நபர்களையும், சமூகத்தையும் தவறு செய்ததை சுட்டிக் காட்டாமல் மேலோட்டமாக கதையை கொண்டு சென்று தெளிவாக சொல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறார்; இயக்குனர் புதியவன் ராசையா.
மொத்தத்தில் ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தணிகைவேல் தயாரித்திருக்கும் ஒற்றைப்பனைமரம் நெருடல் தரும் நெடும் துயரம்.