ஒரு நொடி சினிமா விமர்சனம் : ஒரு நொடி பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் புலனாய்வு க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5
மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பில் அழகர்.ஜி மற்றும் கே.ஜி.ரத்தீஷ் தயாரித்திருக்கும் ஒரு நொடி திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பி.மணிவர்மன்.
இதில் தமன் குமார் – பருதி இளமாறன், வேல. ராமமூர்த்தி – கரிமேடு தியாகு, எம். எஸ். பாஸ்கர் – சேகரன், ஸ்ரீ ரஞ்சனி – சகுந்தலா , பழ. கருப்பையா – திரு ஞான மூர்த்தி (எம்.எல்.ஏ), தீபா சங்கர் – பொன்னாத்தா, நிகிதா – பார்வதி ,அருண் கார்த்திக் – ஜீவா, விக்னேஷ் ஆதித்யா – விநாயகம் , கஜராஜ் – யோக லிங்கம், கருப்பு நம்பியார் – மாணிக்கம் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு : கே. ஜி. ரத்தீஷ், படத்தொகுப்பு : எஸ். குரு சூர்யா, இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம், கலை இயக்குனர் : எஸ்.ஜே. ராம், பாடலாசிரியர்கள் : சிவசங்கர் – ஜெகன் கவிராஜ் – உதயா அன்பழகன், சண்டை பயிற்சி : மிராக்கள் மைக்கில், வழங்குபவர் : ஜி. தனஞ்ஜெயன் (கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்நெர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்) மக்கள் தொடர்பு: பி.ஸ்ரீவெங்கடேஷ்.
மதுரை அலங்காநல்லூரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்) மகளின் திருமண செலவிற்காக தன்னுடைய சொத்தை சுறா கரிமேடு தியாகுவிடம் (வேல ராமமூர்த்தி) அடமானம் வைக்கிறார். எம்.எல்.ஏ திருஞான மூர்த்தியின் (பழ கருப்பையா) பினாமியாக இருக்கும் சுறா கரிமேடு தியாகு அந்த சொத்தை அபகரிக்க பார்க்க, அவர்களிடமிருந்து தனது சொத்தை மீட்க குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை கடன்வாங்கி தயார் செய்து கரிமேடு தியாகுவிடம் கொடுக்க செல்லும் போது சேகரன் காணாமல் போகிறார்.தன் கணவன் சேகரனை கரிமேடு தியாகு தான் கடத்தியிருக்க வேண்டும் என்று புகார் அளிக்கிறார் சேகரனின் மனைவி சகுந்தலா(ஸ்ரீரஞ்சனி). இந்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பருதி இளமாறன்( தமன்குமார்). சந்தேகத்திற்கு இடமான கரிமேடு தியாகுவையும், அவருடைய அடியாட்களையும் கைது செய்து இன்ஸ்பெக்டர் பருதி இளமாறன் விசாரணை மேற்கொள்கிறார். இதனிடையே நகைக்கடையில் வேலை செய்யும் பார்வதி (நிகிதா) அருகே இருக்கும் தென்னந்தோப்பில் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். பார்வதி கொலையையும் சேர்த்து போலீஸ் விசாரிக்க தொடங்குகிறது. கரணாமல் போன சேகரனை கண்டு பிடித்தார்களா? பார்வதியை யார் கொலை செய்தனர்? இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? இதை இன்ஸ்பெக்டர் பருதி இளமாறன் எப்படி துரிதமாக விசாரணையை மேற்கொண்டு குற்றவாளியை கண்டு பிடித்தார்? என்பதே ஒரு நொடியின் பரபரப்பான க்ளைமேக்ஸ்.
இன்ஸ்பெக்டர் பருதி இளமாறானாக தமன்குமார் மிடுக்கான தோற்றத்தில் உருட்டலையும், மிரட்டலையும் பொறுமையாக கடைபிடித்து, எந்த நேரத்தில் காட்டமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவுடன் அர்ப்பணிப்புடன் சாதுர்யமாக செய்;துள்ளார். குற்றவாளியாக கருதி விசாரணை மேற்கொள்ளும் போது நிரபராதிகளாக இருந்தால் என்னவாவது என்ற யோசனையுடன் பக்குவத்துடன் செயல்படும் இன்ஸ்பெக்டர் பருதி இளமாறானின் கதாபாத்திரத்தில் தமன்குமார் கச்சிதமாக பொருந்தி பெருமை சேர்த்துள்ளார்.
வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா இருவரின் அதிகார மிரட்டல்கள்,இடத்தை மீட்க ஆவலாக செல்லும் எம்.எஸ்.பாஸ்கரின் அவல நிலை,கணவனை காணாமல் பரிதவிக்கும் ஸ்ரீ ரஞ்சினி, பார்வதியின் தாயாக தீபா சங்கர், பார்வதியாக நிறைவான நடிப்பில் நிகிதா, மகளின் மீது அளவுகடந்த பாசத்தால் நிலை தடுமாறும் தயாரிப்பாளர் அழகர் என்று அனைவரும் கதைக்கு தேவைப்பட்ட மேம்பட்ட நடிப்பை கொடுத்து படத்தின் விறுவிறுப்பிற்கு வித்துட்டுள்ளனர்.
ஒளிப்பதிவு : கே. ஜி. ரத்தீஷ், படத்தொகுப்பு : எஸ். குரு சூர்யா, இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம், கலை இயக்குனர் : எஸ்.ஜே. ராம், சண்டை பயிற்சி : மிராக்கள் மைக்கில் ஆகிய தொழில்நுட்h கலைஞர்களின் பங்களிப்பு படத்தின் அனைத்து காட்சிகளையும் சுவாரஸ்யத்துடன் செல்ல மிகவும் உதவி செய்கிறது.
மர்மங்கள் நிறைந்த இரண்டு குற்ற சம்பவங்களை விசாரிக்க தொடங்கும் போலீஸ் அதிகாரி எவ்வாறு குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் என்பதை இறுதிக் காட்சிவரை பரபரப்பாகவும், தெளிவாகவும், யூகிக்க முடியாதபடி காட்சிப்படுத்தி பல சாட்சிகளின் வாக்குமூலத்தில் குழப்பிவிட்டு முன்னேறும் போது இறுதியில் ஆரம்ப புள்ளியில் வந்து கதை முடிவடைவதை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் பி.மணிவர்மன். முக்கிய தருணங்களில் கவனக்குறைவாக ஒரு நொடி அசந்தால் என்னவாகும் என்பதையும், அதே சமயம் அந்த ஒரு நொடி பொழுதில் எடுக்கும் விபரீத முடிவு, எத்தகைய சிக்கல்களையும், கொலைகளுக்கும் காரணமாகிறது என்பதையும் மறைமுகமாக சொல்லி, தவறு செய்தால் அதை மறைக்காமல் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் மேலும் பல தவறுகளுக்கு வழி வகுக்கும் என்பதை வலியுறுத்தும் கருத்துடன் கொடுத்துள்ளார் இயக்குனர் பி.மணிவர்மன். வெல்டன்.
மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பில் அழகர்.ஜி மற்றும் கே.ஜி.ரத்தீஷ் தயாரித்திருக்கும் ஒரு நொடி விவேகமான விசாரணையில் வேகமான திரைக்கதையில் அசத்தலான திருப்பங்களுடன் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் புலனாய்வு க்ரைம் த்ரில்லர்.