ஏஸ் சினிமா விமர்சனம் : ஏஸ் சீட்டுக் கட்டில் தொடங்கும் பணத்துக்கான சதுரங்க ஆட்டம் | ரேட்டிங்: 3.5/5

0
972

ஏஸ் சினிமா விமர்சனம் : ஏஸ் சீட்டுக் கட்டில் தொடங்கும் பணத்துக்கான சதுரங்க ஆட்டம் | ரேட்டிங்: 3.5/5

7சிஎஸ் என்டெர்டைன்மெண்ட் சார்பில் ஆறுமுககுமார் தயாரித்திருக்கும் ஏஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆறுமுககுமார்.

இதில் விஜய்சேதுபதி – போல்ட் கண்ணன், யோகி பாபு – அறிவுக்கரசன், ருக்மணி வசந்த் – ருக்மணி, பப்லூ பிரித்திவிராஜ் – ராஜதுரை, திவ்யா பிள்ளை – கல்பனா, பி.எஸ். அவினாஷ் – தர்மா, ராஜ்குமார் – ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவாளர்: கரண் டீ ராவத், பாடல்கள்: ஜஸ்டின் பிரபாகர், பின்னணி இசை – பாடல்கள்: சாம் சிஎஸ், படத்தொகுப்பு: ஃபென்னி ஆலிவர், நடனம்: ராஜு சுந்தரம், லீலாவதி, ஸ்டண்ட் (இந்தியா) : தினேஷ் சுப்புராயன், டான் அசோக், ஸ்டண்ட் (மலேசியா) : ரிக்கி, ஜேம்ஸ் சுங், கலை: ஏ.கே. முத்து, பாடல் வரிகள்: தாமரை, ரட்டி, வெட்டிபையன் வெங்கட், தயாரிப்பு நிர்வாகி : எம். கே. சாயிசுந்தர்,மக்கள் தொடர்பு : யுவராஜ்

போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி) என்ற பெயரில் தன்னுடைய குற்றப்பி​ன்னணியை விட்டுவிட்டு புது வாழ்க்கை வாழ மலேசியாவிற்கு வருகிறார். போலி தொழிலதிபராக முன்னிலைப்படுத்தும் அறிவுக்கரசன்(யோகிபாபு) தன்னுடைய உறவினரின் நண்பன் போலட் கண்ணன் என்று நினைத்து அடைக்கலம் கொடுத்து தன் தோழியான கல்பனாவின் (திவ்யா பிள்ளை) உணவகத்தில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார். கல்பனா தொழில் விரிவாக்கத்திற்காக கடன் வாங்கி பத்து லட்சம் வெள்ளியை கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர். போல்ட் கண்ணன் வீட்டருகே வசிக்கும் ருக்மணியுடன் (ருக்மணி வசந்த்) மோதல் ஏற்பட்டு பின்னர் காதலாக மலர்கிறது. ருக்மணியும் தாய் இறந்த பிறகு தன்னுடைய வளர்ப்பு தந்தை காவல்துறை அதிகாரி ராஜதுரை (பப்லூ பிரித்திவிராஜ்) நடவடிக்கை பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேற பத்து லட்சம் வெள்ளியை கொடுக்க வேண்டிய சூழலில் தள்ளப்படுகிறார். இந்நிலையில் போல்ட் கண்ணன் ருக்மணி வேலை செய்யும் பொட்டிக்கில் வேலையை தற்காத்துக்கொள்ள பத்து ஆயிரம் வெள்ளி கொடுத்து அங்கே உடை வாங்குவதாக உறுதியளித்து விட்டுச் செல்கிறார். உடனடியாக பணம் தேவைப்படுவதால் கந்து வட்டி கொடுக்கும் கேங்ஸ்டர் தர்மாவை (பி.எஸ்.அவினாஷ்) அணுகுகிறார். ஆனால் அங்கே கடன் வாங்கியவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை பார்த்து சீட்டு சூதாட்டத்தில் இறங்கி பணம் சம்பாதிக்க முடிவெடுக்கிறார். முதலில் சில ஆயிரங்கள் ஜெயிக்கும் போல்ட் கண்ணன் பின்னர் லட்சங்களில் ஜெயிப்பதை பார்க்கும் தர்மா தானே முன் வந்து சூதாட்டத்தில் விளையாடுகிறார். குறுக்கு வழியில் ஜெயிக்கும் தர்மா, போல்ட் கண்ணனை லட்சங்களில் கடனாளியாக்கி, பாஸ்போர்ட்டை பறித்து கையெழுத்து வாங்கி அனுப்பி விடுகிறார். போல்ட் கண்ணன் தன்னை ஏமாற்றிய தர்மாவை எப்படி பழிவாங்கி மாட்டி விடுவது என்று திட்டம் தீட்டுகிறார். கல்பனா, ருக்குமணி, போல்ட்கண்ணன் அனைவருக்குமே லட்சங்களில் பணம் தேவைப்படுவதால் வங்கியில் கொள்ளையடிக்க அறிவுக்கரசனின் உதவியை நாடுகிறார்.வங்கி வண்டியில் வரும் பணத்தை கச்சிதமாக ஸ்கேட்ச் போட்டு 40 கோடியை கொள்ளையடித்து தப்பித்து விடுகிறார் போல்ட் கண்ணன். இந்த நேரத்தில் லாட்டரி சீட்டில் 40 கோடி விழ கல்பனாவை அனுப்பி வாங்கச் சொல்கிறார். அதன் பின் போல்ட் கண்ணன் வங்கி பணத்தையும், லாட்டரி பணத்தையும் வைத்துக் கொண்டு தர்மாவையும், ராஜதுரையையும் எப்படி சிக்கலில் மாட்டிவிட்டு போலீஸிடம் சிக்க வைக்கிறார்? பணத்தை வைத்து அனைவரின் கடன்களை அடைத்தாரா? அதன் பின் நடந்தது என்ன? போல்ட கண்ணன் யார்? என்பதே படத்தின் பரபரப்பான க்ளைமேக்ஸ்.

விஜய்  சேதுபதி போல்ட் கண்ணன் பெயர் காரணத்தை விதவிதமாக ஒவ்வொருவரிடமும் சொல்லும் விதத்திலிருந்து ஆரம்பிக்கும் அவரது அசால்டான கலாட்டா படம் முழுவதும் படருகிறது. தன்னுடைய தனித்துவமான நடிப்பிலும், இயல்பான வசனத்தாலும், காதல், மோதல், ஆக்ஷன் என்று படம் முழுவதும் அமைதியாகவும், ஆர்ப்பாட்டமில்லாமலும் அதகளம் செய்துள்ளார்.

ஆரம்ப காட்சி முதல் க்ளைமேக்ஸ் காட்சி வரை விஜய் சேதுபதியுடன் பயணிக்கும் அறிவுக்கரசன் யோகி பாபு தன்னுடைய ஸ்டைலில் காமெடி பன்ச் வசனத்துடன் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் கொடுத்து படத்தின் பல காட்சிகளுக்கு இருவரும் சேர்ந்து  கவனத்தை ஈர்த்துள்ளனர்.

நாயகியாக ருக்மணி வசந்த் சோகத்தையும், துக்கத்தையும் தன்னுள்ளே தாங்கி வெறித்த பார்வையுடன் ஆழ்ந்த சிந்தனையுடன் வசீகரிக்கும் தோற்றத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

யோகி பாபுவின் தோழியாக திவ்யா பிள்ளை, வில்லத்தனத்தில் மிரட்டும் பி.எஸ்.அவினாசும், பப்லு பிரித்விராஜ் படத்திற்கு பலம்.

கரண் பி. ராவத்தின் ஒளிப்பதிவில் மலேசியாவின் எழில் கொஞ்சும் அழகையும், கட்டிடங்களையும், சூதாட்ட இடங்களையும், வங்கி கொள்ளை, மலேசிய பைக், கார் சேசிங் என்று காட்சிக் கோணங்கள் படத்திற்கு பக்கபலமாக பலத்த தூணாக இருந்து தாங்கி பிடித்துள்ளார்.

ஃபென்னி ஆலிவரின் எடிட்டிங் படத்தின் அனைத்து காட்சிகளையும் திறமையாக செதுக்கி தந்துள்ளார்.

பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அசத்தல் என்றால் சாம் சி எஸ்சின் பின்னணி இசை மிரட்டல் ரகம்.

மலேசியாவை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையில் காதல், மோதல், துரத்தல், ஆக்ஷன், கொள்ளை, ஜாக்பாட், சூதாட்டம் கலந்து எதிரிகளை சிக்க வைக்கும் மாஸ் ஆக்ஷனில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் காமெடி கலந்து பொழுது போக்கு படமாக லாஜிக் இல்லா மேஜிக்குடன் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆறுமுக குமார்.

மொத்தத்தில் 7 சி எஸ் என்டெர்டைன்மெண்ட் சார்பில் ஆறுமுககுமார் தயாரித்திருக்கும் ஏஸ் சீட்டுக் கட்டில் தொடங்கும் பணத்துக்கான சதுரங்க ஆட்டம்.