ஆரகன் விமர்சனம் : ஆரகன் மாயாஜால வித்தையால் முதுமையை வெல்ல நினைக்கும் தந்திரக்காரன் | ரேட்டிங்: 2.5/5

0
307

ஆரகன் விமர்சனம் : ஆரகன் மாயாஜால வித்தையால் முதுமையை வெல்ல நினைக்கும் தந்திரக்காரன் | ரேட்டிங்: 2.5/5

ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்திருக்கும் ஆரகன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் கே ஆர்.

இதில் மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, ப்ரீத்தம் சக்கரவர்த்தி, கிருஷ்ணன், யாசர், ஆதித்யா கோபி, கௌரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-விவேக்- ஜெஸ்வந்த், எடிட்டிங்-சசி தக்ஷா, இணை தயாரிப்பு-கிரிஷாந்தி ஹரிஹரன், வரகுணம் பஞ்சலிங்கம், மதுரதன் பஞ்சலிங்கம், பிஆர்ஒ-ஜான்

இளைய இளவரசர் இளந்திரையன் போரில் நாட்டை இழந்து வனப்பகுதியில் தஞ்சம் அடைகிறார். அங்கே கடுந்தவம் செய்யும் மகாமுனிவர் ஒருவரை பாம்பு தீண்ட அவரை காப்பாற்றுகிறார். இதனால் அகமகிழந்த முனிவர் இளந்திரையனை சீடனாக சேர்த்து கொண்டு மந்திரங்கள் மாயங்களை சொல்லிக்கொடுக்கிறார். உயிரை காப்பாற்றிய இளந்திரையனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அந்த இளவரசர் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மகாமுனிவர் இளவரசர் இளந்திரையனுக்கு சக்தி வாய்ந்த யவனகாந்தை வேர் ஒன்றை கொடுத்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளை கூறுவது போல் ஒவிய வரைகலை மூலம் 600 முதல் 700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்துடன் ஆரம்ப காட்சிகள் காட்டப்படுகின்றன.அதன் பின் சென்னையில் கதைக்களம் தொடர்கிறது. மைக்கேல் தங்கதுரை மற்றும் கவிபிரியா மனோகரன் காதலர்கள். கவிபிரியா மகளிர் விடுதியில் தங்கி வேலைக்கு செல்கிறார். திருமணம் செய்து கொள்ளலாம் என்று கவிபிரியா வற்புறுத்த, முதலில் பிசினஸ் தொடங்க 4 லட்ச முதலீடு செய்த பிறகு திருமணம் செய்யலாம் என்று மைக்கேல் தங்கதுரை கூறுகிறார். அதனால்  மைக்கேல் தடுத்தும் அறுபதாயிரம் சம்பளத்தில் மலைக்காட்டில் தனியாக வசிக்கும் ஸ்ரீரஞ்சனியை பார்த்து கொள்ளும் 6 மாத வேலையில் சேர்கிறார். அங்கே தொலை தொடர்பு வசதியில்லாத காரணத்தால் மைக்கேலிடம் சரிவர பேச முடியாமல் தவிக்கிறார். முதலில் மகிழச்சியாக வேலை செய்யும் கவிபிரியா, மாதங்கள் செல்லச் செல்ல அங்கே அமானுஷ்ய சக்தி இருப்பது போல் உணர்கிறார். இறுதியில் கவிபிரியாவால் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முடிந்ததா? மைக்கேல் வந்து கவிபிரியாவை மீட்டாரா? வரலாற்று கதைக்கும் இன்றைய காலகட்டத்தின் கதைக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன? எதற்காக கவிபிரியா இந்த மலைப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டார்? யார் காரணம்? கவிபிரியா உயிரோடு திரும்பி சென்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இதில் இருவித பரிமாணங்களில் மைக்கேல் தங்கதுரை முதல் பாதியில் நல்லவராகவும், இரண்டாம் பாதியில் இவரின் உண்மையான முகம் வெளிப்படும் காட்சிகளில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்.

அப்பாவி காதலியாக கவிபிரியா மனோகரன் காதலனுக்காக சம்பாதிக்க செல்லும் இடத்தில் மாட்டிக் கொண்டு தவிப்பதும், நிலைக்கண்ணாடி இல்லாததால் தன் முகத்தை கூட பார்க்க முடியாதபடி என்ன நடக்கிறது என்பதை அறியாத நிலையில், அம்மா அம்மா என்று வாய்நிறைய கூப்பிட்டபடி வலைய வருவதும், இறுதிவரை வெள்ளந்தியாக இருந்து வயதான தோற்றத்தில் அதற்கான காரணத்தை அறிந்து அதிர்ச்சியாகும் தருணங்களில் அனுபவ நடிப்புடன் மனதை கவர்கிறார்.

மாய தோற்றத்துடன் வயதான பெண்மணியாக ஸ்ரீ ரஞ்சனி, பாழடைந்த வீட்டில் சங்கலியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வயதான தோற்றத்தில் கலைராணி, மற்றும் ப்ரீத்தம் சக்கரவர்த்தி, கிருஷ்ணன், யாசர், ஆதித்யா கோபி, கௌரி ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

இசை-விவேக்- ஜெஸ்வந்த் பரவாயில்லை ரகம்.

இரண்டாம் பாதியில் கொஞ்சம் குழப்பத்துடன் காட்சிகளை தொகுத்துள்ளார் சசி தக்ஷா

வரலாற்று பின்னணி, சித்தர்கள், முனிவர்கள், மூலிகை வேர், காதலி சந்திக்கும் இன்னல்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டி அதில் சஸ்பென்ஸ், அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து முதல் பாதியை விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதியில் தடுமாற்றத்துடன் இயக்கியுள்ளார் அருண் கே.ஆர். பலவீனமானவர்களை சுலபமாக வசியப்படுத்தலாம் என்ற மையக்கருவுடன் இளமையாக இருக்க எடுக்கும் தந்திர வித்தைகள், நாயகனின் உண்மையான தோற்றம், அதற்கு பலிகாடான பெண்களின் நிலையை இன்னும் புரியும்படி தெளிவாக சொல்லியிருந்தால் அழுத்தமான பதிவாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்திருக்கும் ஆரகன் மாயாஜால வித்தையால் முதுமையை வெல்ல நினைக்கும் தந்திரக்காரன்.