அஸ்திரம் சினிமா விமர்சனம் : அஸ்திரம் சதுரங்கத்துடன் நடக்கும் த்ரில்லிங்கான ஆடுபுலி ஆட்டம் | ரேட்டிங்: 3/5

0
321

அஸ்திரம் சினிமா விமர்சனம் : அஸ்திரம் சதுரங்கத்துடன் நடக்கும் த்ரில்லிங்கான ஆடுபுலி ஆட்டம் | ரேட்டிங்: 3/5

பெஸ்ட் மூவீஸ் தனசண்முகமணி தயாரித்திருக்கும் அஸ்திரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அரவிந்த் ராஜகோபால்.

இதில் ஷாம், நீரா, நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜேஆர் மார்ட்டின், வெண்பா, விதேஷ் யாதவ், ரஞ்சித் டி. ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ், ஒளிப்பதிவு: கல்யாண் வெங்கட்ராமன், படத்தொகுப்பு: பூபதி வேதகிரி, மக்கள் தொடர்பு : ஏ.ஜான்

கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக இருக்கும் அகிலன் (ஷ்யாம்) செயின் கொள்ளை​யனை பிடிக்கும் போது தோள் பட்டையில் காயம்பட்டு மருத்துவ விடுப்பில் இருக்கிறார். அகிலனின் பத்திரிகையாளர் மனைவி நிரா குழந்தை இறந்த விரக்தியிலும், மீண்டும் கரு தரிக்க முடியாது என்ற காரணத்தால் இருவரும் மனஉளைச்சலில் இருக்கின்றனர்.  இந்நிலையில் கொடைக்கானல் பார்க் ஒன்றில் இளைஞன் ஒருவன் தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்தி கிழித்து கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். மேலும் இரண்டு பேர் வௌ;வேறு இடங்களில் வயிற்றை கிழித்துக்கொண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  இந்த குற்ற வழக்கை விவாரிக்கும் பொறுப்பை எஸ்பி அருள் சங்கர் விடுப்பில் இருக்கும் ஷாமிடம் ஒப்படைக்கிறார்.இறந்த மூன்று பேரும் ஒரே மாதரி வயிற்கை கிழித்துக் கொண்டு இறந்ததும், இவர்களுக்குள் பரிச்சயம் ஏற்படவில்லை என்பதும் தெரிய வருகிறது. இவர்கள் வீட்டிற்கு விசாரணை மேற்கொள்ளும் போது அகிலன், இவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை செஸ் விளையாடுவது மட்டுமே என்பது மட்டும் தெளிவாக புரிந்து கொள்கிறார். இந்நேரத்தில் அகிலனின் பள்ளி நண்பர் வீட்டிற்கு வந்து நடந்த தற்கொலை சம்பவங்களை விவரித்து விட்டு இதற்கு காரணம் மார்டின் (விதேஷ் ஆனந்த்)  தான் என்று கூறி விட்டு தானும் வயிற்றை கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். இந்த தற்கொலைக்கான காரணங்களை தேடும் போது மனநல மருத்துவர் ருத்ரன் (நிழல்கள் ரவி), பணக்கார தொழிலதிபர் ஜேம்ஸ் (ஜீவா ரவி) மற்றும் அவரது புதிரான மகன் மார்ட்டின் (விதேஷ் ஆனந்த்) ஆகியோருக்கான தொடர்பை கண்டறியும் போது பண்டைய ஜப்பானிய சடங்கு தற்கொலை மரபுகளை விவரிக்கும் ‘செஸ் – தி சீக்ரெட்’ என்ற ஒரு மர்மமான புத்தகத்தை கண்டுபிடிக்கிறார். அந்த புத்தகம் என்ன? அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் என்ன? யார் இந்த தற்கொலைகளை செய்ய தூண்டினார்கள்? உண்மையான குற்றவாளியை நெருங்கினாரா அகிலன்? இதற்கெல்லாம் காரணமான மர்ம நபர் யார் ? ஏன் அகிலனை குறி வைத்தார்கள்? என்ற முக்கிய கேள்விக்கான விடையை இரண்டாம் பாகத்தில் பதில் சொல்ல முடிகிறது கதைக்களம்.

படம் ஆரம்பத்தில் கையில் கட்டுடன் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ஷாம் அமைதியுடன் விசாரணை மேற்கொள்வதும், சோகமான நேரத்திலும் தன்னுடைய பணியை மேற்கொள்வதும், புரியாத புதிராக இருக்கும் விசாரணையை திறம்பட கையாண்டு துப்பு துலக்கும் போது ஏற்படும் அதிர்ச்சிகர ஃபிளாஷ்பேக் சம்பவம் என்று நேர்த்தியான நடிப்பில் மிளிர்கிறார்.

மனைவியாக நீரா, ஷாமுக்கு உதவி செய்யும் போலீசாக வரும் சுமந்த், மனநல மருத்துவராக நிழல்கள் ரவி, போலீஸ் அதிகாரியாக அருள்ஜோதி, கொடூர சைக்கோ கொலையாளியாக விதேஷ், தந்தையாக ஜீவா ரவி, ஜேஆர் மார்ட்டின், வெண்பா, ரஞ்சித் டி ஆகியோர் கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ் இசை, பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரி ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;கள் த்ரில்லர் படத்தின் விறுவிறுப்பை குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

ஜப்பானிய அரசர் ஒருவர் தன்னிடம் செஸ் ஆடித் தோற்றவர்களை, தங்களைத் தாங்களே வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலை செய்ய வைக்கும் கதையின் விவரிப்புடன் ஆச்சர்யமான சம்பவங்களுடன் படம் ஆரம்பிக்கிறது. அதே பாணியில் நிகழ்காலத்தில் தற்கொலை சம்பவங்கள் நடக்கும் பின்னணியை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியின் கதையோடு சதுரங்க ஆட்டத்தையும் இணைத்து, ஒரு பழமை வாய்ந்த புத்தகத்தை மையப்படுத்தி மறைமுகமாக இருந்து கொண்டு இறப்புகளை திட்டமிடும் மர்ம நபர் என்று புதிய சிந்தனையுடன் சஸ்பென்ஸ் கலந்து முடிந்த வரை சிறப்பாக கொடுத்து களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால். இரண்டாம் பாகத்தில் முக்கிய வில்லனின் அதிரடி ஆட்டத்தை காட்டப்போவதாக முடித்துள்ளது சிறப்பு.

மொத்தத்தில் பெஸ்ட் மூவீஸ் சார்பில் தனசண்முகமணி தயாரித்திருக்கும் அஸ்திரம் சதுரங்கத்துடன் நடக்கும் த்ரில்லிங்கான ஆடுபுலி ஆட்டம்.