அடியே விமர்சனம் : அடியே கால சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் காதலை சுவாரஸ்யமாக புதுக் கோணத்தில் அணுகும் வித்தியாசமான முயற்சியை பார்க்கலாம் ரசிக்கலாம் | ரேட்டிங்: 3/5

0
405

அடியே விமர்சனம் : அடியே கால சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் காதலை சுவாரஸ்யமாக புதுக் கோணத்தில் அணுகும் வித்தியாசமான முயற்சியை பார்க்கலாம் ரசிக்கலாம் | ரேட்டிங்: 3/5

மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் அடியே படத்தை எஸ் பிக்சர்ஸ் வெளியிட எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.

இதில் ஜி.வி.பிரகாஷ்குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட்பிரபு, மதும்கேஷ், ஆர்.ஜே.விஜய், சுவேதா வேணுகோபால் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு –கோகுல் பினாய், திரைக்கதை-விக்னேஷ் கார்த்திக், கிஷோர் ஷங்கர், இசை-ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டிங்-முத்தயன், பிஆர்ஒ- யுவராஜ்.

நிஜ உலகத்தில் ஜீவா (ஜி.வி.பிரகாஷ்குமார்) வாழ்க்கையில் அனைத்தும் இழந்து அனாதையாக நண்பர்களின் தயவில் வாழ்கிறார். விரக்தியில் இருக்கும் ஜீவா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். அப்பொழுது பள்ளி தோழியான செந்தாழினியின் பேட்டியை தொலைக்காட்சியில் காண்கிறார். அதில் முகம் தெரியாத நண்பர் பள்ளி நாட்களில் தனக்கு கொடுத்த முதல் ரசிகன் கடிதத்தை பற்றி விவரித்து அவரை சந்திக்க ஆசைப்படுவதாக சொல்கிறார். பள்ளிப் பருவத்தில் ஒரு தலையாக செந்தாழினியை காதலித்து கடிதத்தை கொடுத்தது ஜீவா என்பதால் மீண்டும் செந்தாழினியை சந்தித்து காதலை புதுப்பிக்க முயல்கிறார். அவரை சந்திக்க செல்லும் வழியில் விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்திற்கு சிகிச்சை செய்யும் போது அறிவியல் ஆராய்ச்சியாளர் ஜி.கே கொடுக்கும் கைபேசிமூலம் ஆல்டர்நேடிவ் ரியாலிட்டிக்கு அதாவது கற்பனை இணை உலகத்திற்கு சென்று விடுகிறார். கற்பனை உலகத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக அர்ஜுன் பிரபாகரனாகவும், மனைவியாக செந்தாழினியும் இருக்கிறார்கள். நிஜ உலகத்தில் நினைத்தது நடக்காதவை எல்லாம் கற்பனை உலகத்தில் சாத்தியமாகிறது. இதனால் மனக்குழப்பத்தில் இருக்கும் அர்ஜுனுக்கு நேர வளைய கால மாற்றத்தால் மீண்டும் நிஜ உலகத்திற்கு வருகிறார்.  அங்கே ஜீவாவின் உயிர் நண்பனே பொய் சொல்லி செந்தாழினியை திருமணம் செய்து கொள்ளும் ஏற்பாடு நடைபெறுவதை பார்த்து அதிர்ச்சியாகிறார். இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தவும், தன் பழைய காதலை மீட்டெடுக்கும் முயற்சியில் கற்பனை உலகத்தில் நடந்த சம்பவங்களை மீண்டும் நடைபெறுவது போல் செய்ய கைபேசி மூலம் முயற்சிகள் செய்கிறார். இறுதியில் காதலி செந்தாழினியை ஜீவா திருமணம் செய்தாரா? அதற்காக ஜீவா எவ்வளவு முயற்சிகள் செய்து பழைய சம்பவங்களை மீண்டும் உருவாக்கி காதலியை மீட்டெடுத்தார்? என்பதே படத்தில் எதிர்பார்க்கும் க்ளைமேக்ஸ்.

ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி ஜி கிஷன் ஆகியோர் அந்தந்த பாத்திரங்களில் பிரகாசித்து கச்சிதமாக பொருந்தி இருப்பது படத்திற்கு பலம். இவர்களின் காதல் கெமிஸ்ட்ரியை பிரதிபலித்திருப்பது கவித்துவமாக உள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் ஜீவா மற்றும் அர்ஜுன் பிரபாகரன் என்று இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிக்கித் தவிக்கும் விதம், என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது, பின்னர் குழப்பத்திலிருந்து விடுபட்டு காதலியை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவது என்று அசத்தலாக செய்துள்ளார். கௌரி கிஷன் காதலியாகவும், மனைவியாகவும் படம் முழுவதும் தன் இயல்பான நடிப்பாலும் ஆழ்ந்த வசனங்களாலும் வசீகரிக்கிறார்.

நிஜ  உலகில் விஞ்ஞானி ஜி.கேவாகவும் மற்றும் கற்பனை உலகத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனாகவும் கலகலக்க வைத்துள்ளார் வெங்கட்பிரபு. இவர்களுடன் நண்பனாக மதும்கேஷ், பஞ்ச் காமெடியில் சிரிக்க வைத்திருக்கும் ஆர்.ஜே.விஜய், சுவேதா வேணுகோபால் மற்றும் பலர் படத்தின் காட்சிகளுக்கு நன்கு பொருந்தி கதைக்களத்திற்கு மதிப்பு சேர்த்துள்ளனர்.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவு இரு வேறு உலகத்தின் வேறுபாட்டை குழப்பமில்லாமல் கொடுத்துள்ளார்.

படம் முழுவதும் காதல் காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை, படத்தின் முதுகெலும்பாக விளங்கி ரசிக்க வைத்து இன்னிசை மழையில் நனைய வைத்துள்ளார்.

ரியாலிட்டி மற்றும் அல்டர்நேடிவ் ரியாலிட்டி ஆகிய இரண்டையும் தெளிவாக விவரிக்க வேண்டிய கதைக்களத்தை முதல் பாதியில் வேறுபடுத்தி காட்டாமல் பின்னர் இரண்டாம் பாதியில் அதை கச்சிதமாக விவரமாக காட்சிகளை கொடுத்து சிக்கலான திரைக்கதையை புரியும்படி தன்னுடைய திறமையால் சிறப்பாக காட்சிகளை தொகுத்து கொடுத்துள்ளார் எடிட்டர் முத்தயன்.

நிஜத்தில் கைகூடாத காதல், கற்பனையில் தான் நினைத்தது எல்லாம் கைகூடும் திரைக்கதையில் அறிவியல் கற்பனை கலந்து புனைக்கதையுடன் டைம் லுப், டைம் டிராவலுடன் காமெடி கலந்து ரசிக்கும்படி அசத்தலுடன் கொடுத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.கற்பனை உலகத்தில் அவர் காண்பிக்கும் ‘ஹுண்டாய் பிரஷ், பகார்டி பேஸ்ட், கோல்டு ஃபிளேக் டெட்டால், கக்காபிக் பாத்ரூம் கிளீனர் என பொருட்களுக்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளதோடு, நடிகர் ரொனால்டோ, கிறிஸ்டஃபர் நோலன் மற்றும் ஷங்கர் இணைந்து படம் இயக்கும் அறிவிப்பு, தமிழ் திணிப்புக்கு மத்திய அரசு எதிர்ப்பு, விஜய்யின் யோஹன் பட காட்சிகள், ஃபார்முலா கார் ரேஸர் அஜித்குமார், கால்பந்து வீரர் சச்சின் டெண்டுல்கர், பிரதமராக கேப்டன், ட்ரோன் டெலிவரி, மியூசிக் டைரக்டராக பயில்வான் ரங்கநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டை போட்டு ஆஸ்கர் வெல்வது, பல ஹிட் அடித்த பாடல்களை தான் இசையமைத்தாக காட்சிப்படுத்தியிருப்பது, சென்னையில் பனிபொழிவு என படம் முழுக்க கற்பனை வளத்தால் சிரிக்க ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். தேர்ந்த நடிகர்கள், ஜஸ்டின் பிரபாகரனின் இசை, நேர்த்தியான கச்சிதமான எடிட்டிங், நகைச்சுவை ஆகியவை படத்தின் வெற்றிக்கு பெரிய ப்ளஸாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் அடியே கால சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் காதலை சுவாரஸ்யமாக புதுக் கோணத்தில் அணுகும் வித்தியாசமான முயற்சியை பார்க்கலாம் ரசிக்கலாம்.