அஞ்சாமை சினிமா விமர்சனம் : அஞ்சாமை மருத்துவ தகுதி தேர்வு முறையின் செயல்பாடுகளை தைரியமாக நீதி மன்றத்தில் முறையிடும் துணிச்சலான அஞ்சாநெஞ்ச மாணவன் | ரேட்டிங்: 3.5/5

0
549

அஞ்சாமை சினிமா விமர்சனம் : அஞ்சாமை மருத்துவ தகுதி தேர்வு முறையின் செயல்பாடுகளை தைரியமாக நீதி மன்றத்தில் முறையிடும் துணிச்சலான அஞ்சாநெஞ்ச மாணவன் | ரேட்டிங்: 3.5/5

திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ள அஞ்சாமை படத்தை  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ளார்.

இதில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – கார்த்திக் , எடிட்டிங்- ராமசுதர்சன், இசை- ராகவ் பிரசாத், பின்னணி இசை – கலா சரண், மக்கள் தொடர்பு – ஜான்சன்.

பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அருந்தவம் (கிருத்திக் மோகன்) என்ற அரசு பள்ளி மாணவன் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் வாழும் கூத்து பட்டரை கலைஞர் மற்றும் பூ விவசாயியான சர்க்கார் (விதார்த்) – சரசுவின் (வாணி போஜன்) மூத்த மகன். தனியார் பள்ளிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், மருத்தவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் மகனை அரசு பள்ளியிலேயே சேர்த்து ஊக்கப்படுத்துகிறார். அந்த சமயத்தில் மருத்துவ படிப்பிற்காக அகில இந்திய அளவில் தகுதித் தேர்வின் மூலம் தான் எழுதி வெற்றிப்பெற்று படிக்க முடியும் என்ற மத்திய அரசு அறிவிக்கிறது. அந்த ஆண்டு நடக்கும் தகுதி தேர்வில் கலந்து கொண்டு மதிப்பெண் பெற முடியாத தேர்ச்சியாகாத மாணவர்களின் தற்கொலைகளை கேள்விப்பட்டு தந்தை சர்க்கார் பதறுகிறார். அதனால் தன் விவசாய நிலம், வீடு ஆகியவற்றை அடகு வைத்து நன்றாக படிக்கும் மகன் என்றாலும் மருத்துவ கனவில் வெற்றி பெற தனியார் தகுதி தேர்வு பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்க வைக்கிறார். அகில இந்திய மருத்துவ தகுதி தேர்விற்கு மகன் அருந்தவம் விண்ணப்பிக்க, தமிழ்நாட்டில் தேர்வு மையம் ஒதுக்காமல் ஜெய்ப்பூரில் ஒதுக்கப்படுகிறது. அதற்காக தன் மகன் அருந்தவத்தை அழைத்துக் கொண்டு மொழி தெரியாத ஜெய்ப்பூருக்கு சர்க்கார் இரயிலில் பயணிக்கிறார். இரயில் பயணத்தில் தாமதமாகி தேர்வு மையத்திற்கு கடைசி நேரத்தில் செல்லும் நிலை ஏற்பட்டு, பல சிரமங்களுக்கிடையில் தன் மகனை தேர்வு மையத்தில் எழுத வைத்து விடுகிறார். அதன் பின் சர்க்காருக்கு என்ன ஆனது? மகன் அருந்தவம் மருத்துவ தகுதி தேர்வை நன்றாக எழுதினாரா? ஜெய்ப்பூரில் மகன் அருந்தவத்திற்கு காத்திருந்த பேரதர்ச்சியும், இழப்பும் என்ன? மகன் அருந்தவத்திற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் பதவியை உதறிவிட்டு வழக்கறிஞராக மாற காரணம் என்ன? என்பதே நீதிமன்ற வளாகத்தில் முடியும் க்ளைமேக்ஸ்.

முதல் பாதி கதையின் நாயகனாக விதார்த் கூத்துக் கலைஞர்;, பூ விவசாயி என கிராமத்து வெள்ளேந்தி மனிதராக வாழ்ந்துள்ளார். மகன், மகள் மீது பாசம், மகனின் படிப்பு செலவிற்காக அல்லல்படுவது, மருத்துவ தகுதித் தேர்வால் ஏற்பட்ட மனக்குழப்பம், மகனின் கனவு நனவாக்க எடுக்கும் முயற்சிகள், அதனால் ஏற்படும் கடும் பாதிப்பு என்று நகர, இரண்டாம் பாகத்தில் இவரை மையமாக வைத்து தான் நீதிமன்ற வழக்காடு தளம் அமைந்து கதை ஜரூராக பயணிக்க மையப்புள்ளியாக இருக்கிறார். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதத்தில் பாசக்கார தந்தைகளை நினைவுபடுத்திவிட்டு கண் கலங்க வைத்து விடுகிறார்.

இரண்டு குழந்தைகளின் தாயாக இயல்பு மாறாமல் அச்சு அசலாக செய்துள்ளார். இரண்டாம் பாதியில் இவரின் பங்களிப்பு பெரிதாக இல்லாமல் போகிறது.

போலீஸ் அதிகாரி மற்றும் வக்கீல் இரண்டு வித பரிணாமங்களில்; ரகுமான் அழுத்தமான உச்சரிப்பு, கருத்துக் கணிப்பு குவியல்கள், மருத்து படிப்பிற்கு தகுதித் தேர்வு ஏன் என்ற கேள்விக்கனைகளுடன், அதற்கான வாதங்கள் எடுத்துரைத்து தடங்கல்கள் ஏற்பட்டாலும் பிடிவாத குணத்துடன் வாதிடும் திறனுடன் கம்பீரமாக அசத்தியுள்ளார்.

மகன் மாணவர் அருந்தவமாக கிருத்திக் மோகன் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில், படம் முழுவதும் வந்து தன்னுடைய தனித்திறமையை வெளிக்கொணர்ந்து மகிழ்ச்சி, சோகம் இரண்டையும் புதுமுகம் அறிமுகம் என்று தெரியாத வண்ணம் யதார்த்தமாகவும் தேர்ந்த நடிப்பில் ஜொலிக்கிறார்.

இவர்களுடன் பாலசந்திரன் ஐஏஎஸ் நடிப்பும் மற்றும் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு மனதில் பதிகிறார்கள்.

கார்த்திக் ஒளிப்பதிவு கிராமத்து மண் மாறாமல் கொடுத்து, நீட் தேர்வால் ஏற்பட்ட வீபரிதங்களை, பாதிப்புகளை, நீதிமன்ற காட்சிகளை யதார்த்தமாக கொடுத்துள்ளார்.

ராகவ் பிரசாத் கொடுத்த பாடல்களின் இசையை விட கலா சரணின் பின்னணி இசை அசர வைத்துள்ளது.

குழப்பம் ஏற்படாத வகையில் நேர்த்தியாக எடிட்டிங் செய்துள்ளார் ராமசுதர்சன்.

மருத்துவ தகுதி தேர்வு (நீட்) அறிமுகப்படுத்திய ஆண்டிலிருந்து ஏற்பட்ட சம்பவங்கள், நடந்த குளறுபடிகள், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் பாகுபாடுகள், தேர்வு பயிற்சி மையங்களின் பேராசை கொள்ளைகள், இழப்புகள், மத்திய மாநில அரசின் செயல்பாடுகள், அலட்சிய போக்குகள், பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலைகள், பெற்றோர்களின் மனஉளைச்சல்கள், மாணவர்களின் தன்னம்பிக்கை சிதறுவது என்பதை திரைக்கதையாக அமைத்து ஒரு சாதாரண மனிதரின் வாழ்க்கையில் நடக்கும் துயர சம்பவங்களை விவரிக்கும் மகனின் பார்வையில் விரிவடைந்து பல நீதிமன்ற விவாதங்கள், அதிகாரி முதல் அமைச்சர் வரையிலான விசாரணைகள், ஆலோசனைகள், கேள்விக்கனைகள் என்று முற்றுப்புள்ளி வைக்காமல் அதில் ஆழமாக பதிலைச் சொல்லாமல் முடிவு நம் கையில் என்று சிந்திக்க வைக்கும் வசனங்களுடன் நடந்த சில உண்மைச் சம்பவங்களை சேர்த்து சிறப்பாக இயக்கியுள்ளார் எஸ்.பி.சுப்புராமன்.வெல்டன்.

மொத்தத்தில் திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியீட்டில் வந்துள்ள அஞ்சாமை மருத்துவ தகுதி தேர்வு முறையின் செயல்பாடுகளை தைரியமாக நீதி மன்றத்தில் முறையிடும் துணிச்சலான அஞ்சாநெஞ்ச மாணவன்.