அகத்தியா சினிமா விமர்சனம் : அகத்தியா பாரம்பரிய சித்த வைத்திய சிகிச்சையின் மாயாஜால வித்தை | ரேட்டிங்: 3.5/5
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வாம் இந்தியா சார்பில் ஐசரி கே. கணேஷ், அனீஷ் அர்ஜுன் தேவ் தயாரித்திருக்கும் அகத்தியா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எழுத்தாளர் பா.விஜய்.
இதில் ஜீவா, ராஷி கன்னா, அர்ஜுன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராதா ரவி, எட்வர்ட் சோனன்ப்ளிக், மட்டில்டா, ரோகிணி, இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை: யுவன் ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவாளர் -தீபக் குமார் பதி, எடிட்டர் – சான் லோகேஷ், கலை இயக்குனர்- பி.சண்முகம், நடன இயக்குனர் -கலைமாமணி ஸ்ரீதர், உடை வடிவமைப்பாளர்- பல்லவி சிங், டினா ரொசாரியோ, ஒலி கலவை- தபஸ் நாயக், பாடல்கள் – பா.விஜய், தலைமை இணை இயக்குநர்- எஸ்.குரு சூர்யா, நிர்வாக தயாரிப்பாளர்- அஸ்வின் குமார், படைப்பு தயாரிப்பாளர்- பிரபு, விளம்பர வடிவமைப்பாளர்- தினேஷ் அசோக், பிஆர்ஒ- நிகில் முருகன்.
பாண்டிச்சேரியில் ஒரு பழைய கைவிடப்பட்ட பிரெஞ்சு அரண்மனையை புதிய கலை இயக்குனர் அகத்தியன் (ஜீவா) தனது முதல் திரைப்படம் என்பதால் தயாரிப்பாளரை நம்பி 30 லட்சம் சொந்தமாக செலவு செய்து புதுப்பித்து வருகிறார். எதிர்பாராத விதமாக, படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்படுவதாக தயாரிப்பாளர் அறிவிக்க முதலீடு செய்த சொந்த பணம் செலவானதை நினைத்து அகத்தியன் அதிர்ச்சியாகிறார். சினிமா தயாரிப்பாளரால் நடுவில் கைவிடப்பட்ட அகத்தியா, தனது முதலீட்டை மீட்டெடுக்க அவரது நீண்ட கால காதலி வீணா (ராஷி கன்னா) மற்றும் நண்பர்கள் ஷாரா, இந்துஜா ஆகியோருடன் இணைந்து பணம் சம்பாதிப்பதற்காக புதிய யூக்தியுடன் பயமுறுத்தல் நிறைந்த ஸ்கேரி ஹவுஸ் ஒன்றை வடிவமைக்கின்றனர். அவர்களின் முயற்சிக்கு பலனாக மக்கள் வந்து கண்டுகளிக்கின்றனர். இதனிடையே அரண்மனை பின்புறத்தில் இருக்கும் பழைய காலத்து பியானோவையும் எடுத்து வைக்க, ஒரு நாள் அந்த பியானோவை ராஷி கண்ணா வாசிக்க தொடங்கியவுடன் அதில் இருந்த மர்ம ரகசிய அறை திறக்க தொடங்குகிறது. அந்த அறையில் எலும்பு கூடு, பழைய துணிகள், டைரி மற்றும் பல நூதன பொருட்கள் கிடைக்கிறது. அந்த டைரியின் மூலம் அரண்மனையின் வரலாற்றை அகத்தியன் கண்டுபிடிக்கத் தொடங்கும் நேரத்தில் ஒரு பேய் ஜாக்குலின் (மட்டில்டா) அவர்களை வெளியேற எச்சரிக்கத் தொடங்குகிறது.இதற்கான காரணம் இரண்டாம் உலகப் போரில் வீரர்களை அழிக்கும் எலும்பு புற்று நோய்க்கு சித்த மருந்து தேட பிரெஞ்சு பிரதமரால் புகழ்பெற்ற சித்த வைத்தியர் சித்தார்த் நியமிக்கப்பட்டு 1940ம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு மூலிகைகளை கண்டுபிடிக்க அனுப்பப்படுகிறார். அப்பொழுது பிரெஞ்சு காலனி ஆதிக்கம் செலுத்தும் ஆளுநர் எட்வின் டூப்ளெக்ஸ் (எட்வர்ட் சோனென்ப்ளிக்) ஒரு சர்வாதிகாரியாக அந்த இடத்தை ஆட்சி செய்வதை அறிகிறார். எட்வினின் தங்கை ஜாக்குலின் முதுகெலும்பு பிரச்சினை காரணமாக முடங்கியிருப்பதை பார்த்து சித்த மருத்துவத்தில் சித்தார்த் குணப்படுத்துகிறார். மெதுவாக, ஆளுநர் எட்வின் நம்பிக்கையை பெற்று அவரின் தங்கையை காதலிக்க தொடங்குகிறார். எலும்பு புற்று நோய்க்கு மூலிகைகளை கொண்டு சித்தார்த் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி திறமையை பார்த்து எட்வின் நட்பு கொள்ளத் தொடங்குகிறார். அதன் பிறகு சித்தார்த்த எலும்பு புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்தாரா? சித்தார்;த்திற்கு என்ன ஆனது? அகத்தியாவிற்கும் சித்தார்த்துக்கும் என்ன தொடர்பு? 85 ஆண்டுகளுக்கு ஒரு முறை நேர்கோட்டில் நிகழும் ஒரு அரிய கிரகநிலையில் அகத்தியாவிற்கு என்ன நடக்க போகிறது? அகத்தியாவை ஜாக்குலின் பேயாக வந்து எச்சரிக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மர்ம முடிவு.
அர்ஜுன் சர்ஜா சித்த மருத்துவர் சித்தார்த்தனாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள் நன்கு வடிவமைக்கப்பட்டு தனது பாத்திரத்தை சரியாக பொருத்தி, அதிக ஈடுபாட்டுடன் சித்த வைத்தியத்தின் பெருமையை விவரிப்பதும், காதலியிடம் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தும் நேரத்தில் நடக்கும் எதிர்பாராத சம்பவம், தன்னை கொல்ல வந்தது யார் என்ற உண்மையை சொல்ல முடியாமல் தவித்து செல்லும் போது ஒரு வலுவான செயல்திறனை வழங்குகிறார்.
ஜீவாவும் அகத்தியா என்ற கதாபாத்திரத்தில் அதிரடி நாயகனாக களமிறங்கி இரண்டுவித கெட்டப்களில் நிகழ்காலம் கடந்த காலத்திற்குகேற்றவாறு கச்சிதமாக பொருந்தி கல்லரையில் எட்வினை கொல்ல எடுக்கும் முயற்சிகள், நீண்ட நாள் நோயில் போராடும் தாயை காப்பாற்ற எடுக்கும் செயல்கள், சித்தார்த்துடன் சேர்ந்து போடும் சண்டைக் காட்சிகள், பறந்து பறந்து எதிரியை தாக்குவது என்று அசத்தலாக யதார்த்தமாக நடிப்பில் தடம் பதித்துள்ளார்.
காதலியாக ராஷி கன்னா, தாயாக ரோகிணி, சில காட்சிகள் வந்து போகும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராதா ரவி, எட்வர்ட் சோனன்ப்ளிக், மட்டில்டா மற்றும் பலர் கற்பனை கலந்த திரைக்கதைக்கு உற்ற துணையாக பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம். இளையராஜாவின் பழைய பாடலின் மறுவடிவ இசை என் இனிய பொன் நிலாவே அசத்தலாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் தீபகயபயவாலய ; குமார் பதி காணாமல் போகும் பிற தெய்வீக மனிதர்கள், பண்டைய எகிப்திய சடங்குகள், ஒரு புராண பியானோ, பிரெஞ்ச் ஆளநரின் நயவஞ்சகம் மற்றும் ஒரு அரிய காலவரையறை நிகழ்வு ஆகியவற்றைக் காப்பாற்றிய ஒரு சித்தர், சண்டைக் காட்சிகள் கிராபிக்ஸ் என்று காட்சிக்கோணங்களில் வர்ணஜாலம் செய்து அசத்தியுள்ளார்.
படத் தொகுப்பாளர் சான் லோகேஷ் இன்னும் கச்சிதமாக கொடுத்திருக்கலாம்.
இறுதிக் காட்சியில் வி.எஃப்.எக்ஸ் குழுவின் மோஷன்-கேப்சர் அனிமேஷன் மற்றும் 3 டி விளைவுகளின் கிட்டதட்ட பத்து நிமிட நீளமான சண்டைக்காட்சிக்கு கை தட்டல் கொடுக்கலாம்.
இரண்டு வித காலகட்டங்களில் நடக்கும் கதைக்களத்தில் தெய்வீகத்தன்மை, ஜோதிடம், காலனித்துவ போராட்டங்கள் மற்றும் இன அடக்குமுறை வரை எல்லாவற்றையும் விவரித்து முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் ஒரே படத்தில் திணித்து போல தோன்றி முடிவில் கணிக்கக்கூடியதாக இருந்தாலும் விஎஃப் எக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியால் லாஜிக்கில்லா மேஜிக் செய்து ஈர்க்கக்கூடிய வகையில் கொடுத்துள்ளார் கவிஞரும் இயக்குனருமான பா.விஜய். திகில் மற்றும் காதல்,செண்டிமெண்ட், தேசபற்று கலந்து இரண்டு வித காலகட்டங்களின் நிகழ்வாக அனைவரும் ரசிக்கும் வண்ணம் பலவித ஆராய்ச்சி தகவல்களின் குவியலாக படைத்துள்ளார் இயக்குனர் பா.விஜய்.
மொத்தத்தில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வாம் இந்தியா சார்பில் ஐசரி கே. கணேஷ், அனீஷ் அர்ஜுன் தேவ் தயாரித்திருக்கும் அகத்தியா பாரம்பரிய சித்த வைத்திய சிகிச்சையின் மாயாஜால வித்தை.