விட்னஸ் விமர்சனம் : விட்னஸ் சாட்சியங்கள் இருந்தும் சாதிக்க முடியாத கிடைக்காத நல்ல தீர்ப்பு  | ரேட்டிங்: 3.5/5

0
286

விட்னஸ் விமர்சனம் : விட்னஸ் சாட்சியங்கள் இருந்தும் சாதிக்க முடியாத கிடைக்காத நல்ல தீர்ப்பு  | ரேட்டிங்: 3.5/5

தி பீப்பிள் மீடியா பேக்டரி  சார்பில் டிஜி விஸ்வ பிரசாத் தயாரிப்பில் விட்னஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தீபக். இப்படம் சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் – தீபக், இசை – ரமேஷ் தமிழ்மணி,எடிட்டிங் – பிலோமின் ராஜ்,பாடல் வரிகள் – கபிலன், கலை – சதீஷ், ஒலி வடிவமைப்பு – விவேக் ஆனந்தன், ஒலி கலவை – லாரன்ஸ் ஜி (ஆர்டி ஸ்டுடியோஸ்), டிஐ – டெக்கான் ட்ரீம்ஸ், ஸ்டில்ஸ் – கோமளம் ரஞ்சித், இணை இயக்குனர்கள் – விடிவெள்ளி, சோம்சைநாதன்,இணை ஒளிப்பதிவாளர்கள் – வினோத் ஜே, அவந்தி, நிர்வாகத் தயாரிப்பாதயாரிப்பாளர் – டிஜி விஸ்வ பிரசாத், இணை தயாரிப்பாளர் – விவேக் குச்சிபோட்லா, திரைக்கதை – முத்துவேல், ஜே.பி.சாணக்யா, மக்கள் தொடர்பு – குணா.

இந்திராணி (ரோகிணி) துப்புரவுப் பணியாளர் அவருடைய மகன் கல்லூரி மாணவன் மற்றும் நீச்சல் வீரரான பார்த்திபன். இந்திராணிக்கு தெரியாமல் பார்த்திபன் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் செல்லும் போது உயிரிழக்கிறார். தனது ஒரே மகன் பார்த்திபனை சட்டவிரோதமாக கூட்டிச்சென்று மலக்குழிக்குள் இறக்கிவிடப்பட்டு அந்தப் பணியில் ஈடுபடுத்தி, கொல்லப்பட்டதை அறிந்த அவரது தாய் ரோகிணி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார். பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக இருந்து வழக்கு தொடுக்க உதவி செய்கிறார். இன்னொருபுறம், விபத்து நடந்த குடியிருப்பில் குடியிருக்கும் பார்வதி என்ற இளம் கட்டடக் கலைஞர் இந்திராணியிடம் முக்கியமான சில வீடியோ ஆதாரங்களை ஒப்படைக்கிறாள். அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், இந்திராணியும், நீதிமன்றத்தை நாடுகின்றனர். அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவுநீர்ப்பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மூலம் இந்திராணிக்கும், பார்வதிக்கும், தொழிற்சங்கத் தலைவருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இருக்க தொல்லைகள் கொடுக்கிறார்கள். அதன் விளைவாக மூவருக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதன் பின் ஒராண்டுகளுக்கு மேலாக வழக்கு நடக்கிறது. இறுதியாக இந்திராணிக்கு ஆதரவாக தீர்ப்பும் நீதியும் கிடைத்ததா? அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் ஜெயித்ததா? என்பதே விட்னஸ் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ்.

ரோகிணி இறந்து போன மகனின் அம்மாவாக நீதிக்காக போராடுவது அருமை. தன் கதாபாத்திர தேர்வு மூலம் தனி முத்திரை பதித்து பன்முக தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கை, படும் துன்பங்கள், பாலியல் சீண்டல்கள், ஏச்சு பேச்சுக்கள், அவமானங்கள் அத்தனையும் கண் முன்னே நிறுத்தி நடிப்பில் அசத்துகிறார்.  பல விருதுகள் இவருக்காக காத்திருக்கிறது.

நகர்ப்புற தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்கொள்ளும் மற்றொரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீPநாத் ஜொலிக்கிறார்.

மற்றும் அழகம்பெருமாள், வழக்கறிஞராக வரும் சண்முகராஜான், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக வரும் ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் உள்ளிட்டடோர் அந்தந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர்.

ரமேஷ் தமிழ்மணியின் இசை, கபிலனின் பாடல் வரிகள், மற்றும் பிலோமின் ராஜ் எடிட்டிங் படத்தின் உண்மைத்தன்மை மாறாமல் இருக்க அளவான தொழில்நுட்பத்தை வழங்கி பலம் சேர்த்துள்ளனர்.கலைப்படைப்பும் ஆடை வடிவமைப்பும் கச்சிதம்.

முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதிய கதை மற்றும் திரைக்கதையை அறிமுக இயக்குனர் தீபக் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். தீபக்கின் ஒளிப்பதிவு நம்மைச் சுற்றியுள்ள சூழலை சிந்திக்க வைக்கிறது.விட்னஸ் அதன் நோக்கத்திற்காகவே கொண்டாடப்பட வேண்டிய கதைகளில் ஒன்றாகும். படத்தில ஸ்வச் பாரத் மிஷனின் பிரமாண்டமான விளம்பரப் பலகையில் கேமரா பெரிதாக்கப்பட்டு, நள்ளிரவில் தெருக்களை சுத்தம் செய்துகொண்டிருக்கும் பெண்களின் கூட்டத்தை நம்மைச் சுற்றியுள்ள கழிவுகளை சுத்தம் செய்வதன் மூலம் வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும், சாதியால் பாகுபடுத்தப்பட்ட, ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கையைப் பற்றி பேசும் படம் இது. துப்புரவு மற்றும் மனித துப்புரவு என்ற பெயரில் நடக்கும் அனைத்து கொடூரங்களுக்கும் ஒரு சமூகமாக நாம் சாட்சியாக இருக்க அதற்கான தீர்வு எட்டப்படாமல் இருப்பதும், ஒரு குறிப்பிட்ட சமூகம் துன்பப்படுவதையும் சுட்டிக்காட்டி   க்ளைமேக்ஸ் காட்சியை சிறப்பாக இயக்கியுள்ளார் தீபக்.

மொத்தத்தில் தி பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள விட்னஸ் சாட்சியங்கள் இருந்தும் சாதிக்க முடியாத கிடைக்காத நல்ல தீர்ப்பு.