வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்
வால்வாட்சர் பிலிம்ஸ் புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் தமிழில் வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி என்ற பெயரில் எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். எட்டு எவிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
இதில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர், சஞ்சனா, விவேக் பிரசன்னா, வைபவ் முருகேசன், ஸ்ம்ருதி வெங்கட், அவினாஷ் ரகுதேவன், அஷ்வின் குமார், விக்கி ஆதித்யா, சி. சுஜாதா, ஹரீஷ் பெராடி, குமரன் தங்கராஜன், ஜி. ஜெய் பாபு, எம். மீரான் மிதீன், பிரதீப் குமார், திலீப் சுப்பராயன், அருவி பாலாஜி, மகேஸ்வரன், குலபுலி லீலா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : சரவணன் ராமசாமி, இசையமைப்பாளர் : சைமன்.கே.கிங், படத்தொகுப்பு-ரிச்சர்ட் கெவின், சண்டை-தினேஷ் சுப்பராயன் மற்றும் திலீப் சுப்பராயன், தயாரிப்பு வடிவமைப்பாளர்-அருண் வெஞ்சரமுடு, நிர்வாக தயாரிப்பாளர்-கவுதம் செல்வராஜ், இணை தயாரிப்பாளர்கள்-எஸ்.குஹப்பிரியா மற்றும் எஸ்.நந்தகுமார், ஆடை-சுபஸ்ரீ கார்த்திக் ஜெய், ஒளி வடிவமைப்பு-சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன், பிஆர்ஒ யுவராஜ்.
கன்னியாகுமரியில் காற்றாலைகள் நிறைந்த அடர்வாழ் மலைப்பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. அங்கே மூன்று நாட்களுக்கு முன் இறந்த ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பெண் அபடத்தில் நடிக்கும் கதாநாயகி தான் என்றெண்ணி ஊடகங்களும், போலீஸ் விசாரணையும் பரபரப்பாகிறது. ஆனால் இறந்து கிடக்கும் பெண் நடிகையல்ல வேலோனி என்ற பதினேழு வயது அழகான பெண் என்று தெரியவருகிறது. இந்த கேசை சிறப்பு காவல் அதிகாரி எஸ்.ஜே.சூர்யாவிடம் ஒப்படைக்க சப் இன்ஸ்பெக்டர் விவேக் பிரசன்னாவும் இணைந்து விசாரணையை தொடங்குகிறார். ஏன்ஜல் லாட்ஜ் என்ற பெயரில் தங்கும் விடுதி நடத்தும் ஆங்கிலோ இந்திய விதவைப்பெண் லைலாவின் மகள் தான் (சஞ்சனா) வெலோனி பலதரப்பட்ட மக்கள் அங்கே வந்து தங்கிவிட்டுப்போக, வெலோனியும் கல்லங்கபடமில்லாமல் பழகுகிறாள். அனைவருமே அவளது அழகில் மயங்கி ரசிகர்களாகவே வலம் வருகின்றனர். லைலா வெலோனிக்கு லாட்ஜில் தங்கியிருக்கும் குமரனை மணமுடிக்க நிச்சயம் செய்கிறார். வெலோனிக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் தாயின் சொல்லை தட்ட முடியவில்லை. லைலா தன் மகளிடம் அனைத்து விஷயங்களிலும் கண்டிப்பாக நடந்து கொள்வதால், வெலோனிக்கு தாயின் மேல் இருக்கும் அன்பு வெறுப்பாக மாறுகிறது.சுதந்திரமாக வாழ நினைக்கும் வெலோனிக்கு அவளது வீடு சிறைச்சாலை போல் இருக்கிறது. அவளின் தனிப்பட்ட வாழ்க்கை, நடந்து கொள்ளும் விதம், எண்ணம் எல்லாம் மற்றவர்களுக்கு புரியாத புதிராக தான் இருக்க, அதன் பின் ஒருநாள் வெளியே செல்லும் வெலோனி கொல்லப்படுகிறாள். இத்தகைய தகவல்களை சேகரிக்கும் எஸ்.ஜே.சூர்யாவால் உண்மையான குற்றவாளி யார் என்பதில் பல குழப்பங்கள் நீடிக்கிறது. வெலோனிக்கு நிச்சயிக்கப்பட்ட குமரனும் தற்கொலை செய்து கொள்கிறார். நாளுக்கு நாள் கொலையாளியை கண்டுபிடிக்க உயர் மட்ட காவல் அதிகாரியின் அழுத்தத்தால் கொலை செய்தது குமரன் தான் என்று முடிவு செய்து கேசை முடித்து வைக்கின்றனர். ஆனால் எஸ்.ஜே.சூர்யா மனஉளைச்சல் ஏற்பட்டு குற்றவாளியை தனிப்பட்ட வகையில் கண்டுபிடிக்க களமிறங்குகிறார். இதில் வெற்றி பெற்றாரா? உண்மையில் நடந்தது என்ன? வெலோனிக்கு நீதி கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.
போலீஸ் அதிகாரி விவேக் என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மிடுக்கான தோற்றத்தில், தனக்கே உரித்தான வசன உச்சரிப்பு, மென்மை ப்ளஸ் கண்டிப்பு நிறைந்த விசாரணை, அழகான பெண்ணைப்பற்றி தவறாக சித்தரித்து தங்களின் இஷ்டப்படி கட்டுக்கதைகள் உலா வருவதை எண்ணி வருந்துவது, இது தன்னுடைய சொந்த வாழ்க்கையையே பாதிக்க, அதிலிருந்து மீண்டு பின் கொலையாளியை தேடிச் செல்வது என்று எட்டு எபிசோடுகளுக்கும் இவரின் பங்களிப்பு அதிகம். அதை சமார்த்தியமாக தன் நடிப்பு திறமையால் செவ்வேன செய்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
கதை நாவலாசிரியர் நாசர் கதை தொடக்கம் முதல் இவரின் பார்வையில் தான் கதைக்களம் நகர்கிறது. இவரின் விவரிப்பு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. வெலோனியிடம் பழகிய நாட்களில் அவளிடமிருந்து தெரிந்து கொண்ட விஷயங்களை புத்தமாக எழுதி அதை பரபரப்பாக விற்பனை செய்வதற்காக பல இடங்களில் காட்சிகளை சித்தரிக்கப்பட்டு எழுதப்பட்டதை எஸ்.ஜே.சூர்யா விவரிக்கும் போது அதிர்ச்சிகுள்ளாகி அவமானப்படும் இடம் அசத்தல். ஆனால் இறுதியில் இவர் சொல்லும் ஒரு க்ளுவில் தான் கதையே முடிகிறது என்பது சிறப்பு.
கண்டிப்பான தாய் லைலா தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து கதைக்கு முக்கிய புள்ளியாக இருந்து வழி நடத்துகிறார்.
வெலோனியாக அழகு பதுமையாக துள்ளிக் குதிக்கும் இளமை, குழந்தை பேச்சு, சிரிப்பு, நக்கல், அனைவரையம் கவர்ந்து வசீகரமான அழகால் ஆட்கொள்கிறார் சஞ்சனா. வெலோனியின் நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் எல்லாம் காணாமல் போவதை சஞ்சனா இயல்பாக தத்ரூபமாக செய்துள்ளது சிறப்பு.
விசாரணைக்கு தன் வட்டார மொழியில் பேசி அசத்தும் விவேக் பிரசன்னா, வைபவ் முருகேசன், ஸ்ம்ருதி வெங்கட், அவினாஷ் ரகுதேவன், அஷ்வின் குமார், விக்கி ஆதித்யா, சி. சுஜாதா, ஹரீஷ் பெராடி, குமரன் தங்கராஜன், ஜி. ஜெய் பாபு, எம். மீரான் மிதீன், பிரதீப் குமார், திலீப் சுப்பராயன், அருவி பாலாஜி, மகேஸ்வரன், குலபுலி லீலா ஆகியோர் படத்திற்கு பலம்.
காட்சிக் கோணங்கள் படத்தின் ஒவ்வொரு திருப்பங்களுக்கும் முக்கியமாக விளங்கி தன்னுடைய ஒளிப்பதிவால் தடம் பதித்திருக்கிறார் சரவணன் ராமசாமி.
சைமன் கே.கிங்கின் இசை படத்தின் திகில், திரில் ஆகியவற்றிக்கு உத்திரமாதமாக தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். வெல்டன்.
படத்தொகுப்பு-ரிச்சர்ட் கெவின் சில காட்சிகளை தவிர்த்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். சண்டை-தினேஷ் சுப்பராயன் மற்றும் திலீப் சுப்பராயன் சூப்பர்.
வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி – வெலோனி மீது சுமத்தப்படும் கட்டுக்கதைகள். அதனால் அவளின் தனிப்பட்ட வாழ்க்கை கேலிக்குரியதாகவும், அவளுடைய கதாபாத்திரத்தையே படுகொலை செய்து செய்திகள் வெளிவருதும், இறுதியில் அனைத்தும் வதந்தி, ஒரு அப்பாவி பெண் பலிகாடாக ஆக்கப்பட்டாள் என்பதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். ஏழு எபிசோடுகள் வெலோனியைப்பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டு வெளிவருவதும், எட்டாவது எபிசோடில் தான் அவளின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தும் காட்சிகள் வருவதை அவசரஅவசரமாக சீக்கிரமாக முடிக்கப்படுவது தான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. அப்பாவி வெலோனியின் உண்மைநிலையை புரிய வைக்க இன்னும் சில எபிசோடுகள் முன்னரே சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் அசத்தலாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்திருக்கும் வெப் தொடரை வால்வாட்சர் பிலிம்ஸ் புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் தமிழில் வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி பொய்யை உண்மையாக்க சுழன்றடிக்கும் நாவால் கதி களங்கி தடுமாறிப் போகும் ஒரு இறந்த அப்பாவி இளம் பெண்ணின் வாழ்க்கை.